ஈழம்/இலங்கை
சங்ககாலத்தில் இலங்கை ஈழம் என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழரின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்ட போது மேலும் தமிழர்கள் அங்கு குடியேறினார்கள் என்பது வரலாறு ஆகும்.
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இன்றைய நிலை என்ன? நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களில் சுமார் பதினைந்து இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இலங்கையின் தேசிய வருமானத்தில் அறுபது சதவீத வருமானத்தை ஈட்டித் தரும் இரப்பர், தேயிலை தோட்டங்களைத் தங்கள் உழைப்பினால் உருவாக்கியவர்கள் தமிழர்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 1948ஆம் ஆண்டு இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மக்களின் குடியுரிமையை நிலைநாட்ட வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்ல பிற்காலத்தில் பெரும் துரோகமும் புரிந்தது. 1964ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் சிரீமாவோ பண்டார நாயகாவும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி ஐந்தரை இலட்சம் மலையகத் தமிழர்களை ஏற்றுக் கொள்வதற்கு இந்தியா ஒப்புதல் வழங்கியது. எந்தத் தமிழர்கள் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக உழைத்து உருக்குலைந்து அந்நாட்டுக்கு வளம் தேடித் தந்தார்களோ அந்தத் தமிழர்களைச் சிங்களர்கள் விரட்டி அடித்தபோது எதிர்ப்பில்லாமல் இந்தியா ஏற்றுக்கொண்ட அவலம் நிகழ்ந்தது. அத்துடன் அது நிற்கவில்லை. 1970ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா செய்து கொண்ட உடன்பாட்டின்படி மேலும் 75000 தமிழர்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்.
இவ்வாறு அநீதியான முறையில் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்குத் தோட்டத் தொழில் தவிர வேறு தொழில் தெரியாது. தமிழ்நாட்டுக்கு வந்து அவர்கள் இந்திய அரசு இழப்பீடாக வழங்கிய சிறு தொகையைச் சிறிது காலத்திலேயே செலவழித்து விட்டு பிச்சை எடுக்கும் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
1982ஆம் ஆண்டில் இந்திய அரசின் இந்தத் தவறான கொள்கையின் விளைவாக வாழ்விழந்த மலையகத் தமிழர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் அவர்களை அந்தமான் நிகோபார் தீவுகளில் குடியேற்றி குடும்பத்திற்கு பத்து ஏக்கர் நிலமும் விவசாயம் செய்வதற்கு நிதி உதவியும் வீடு கட்டிக் கொள்வதற்கு உதவியும் அளிக்க வேணடுமென்று அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் தில்லி சென்ற அனைத்துக் கட்சி தூதுக் குழு வலியுறுத்தியது. ஆனால் இந்தக் கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.
மலேசியா
பண்டைத் தமிழர்கள் மலேசிய நாட்டை கடாரம் என்றும் காழகம் என்றும் அழைத்தனர். அந்நாட்டுடன் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. பட்டினப்பாலை இந்நாட்டினைக் காழகம் என்ற பெயரால் சுட்டுகிறது.
மலாயா மொழியில் தமிழ் சொற்கள் பல கலந்துள்ளன. மலாய் என்னும் சொல்லே தமிழ் சொல்லாகும். இங்கு முதன்முதலாக குடியேறியவர்கள் தமிழகத்தின் கிழக்குமலைத் தொடரைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து வந்த தமிழர்கள். மலைப் பகுதியிலிருந்து வந்ததால் இவர்கள் கடாரத்தில் நிறுவிய இராச்சியங்களுக்கு மலை என்னும் பொருள்படும் மலேயா என்ற பெயரைச் சூட்டினார்கள். இந்நாட்டுடன் தமிழர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து ஏராளமான இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. கி.பி.12ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் இந்நாட்டில் கைப்பற்றிய பகுதிகளைப் பற்றி அவனுடைய மெய்க்கீர்த்தி விரிவாகக் கூறுகிறது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் தான் கைப்பற்றிய நாடுகளில் தனது தளபதிகளை அரசர்களாக முடிசூட்டி ஆளவைத்தான். அவ்வாறு ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் நீல உத்தமச் சோழன் ஆவான். இவனே சிங்கபுரத்தை (சிங்கப்பூர்) நிறுவியவன் என வரலாறு கூறுகிறது. கி.பி.1400 முதல் கி.பி. 1511 ஆம் ஆண்டு வரை மலாக்காவில் நடைபெற்ற மன்னராட்சி சோழர் வழி வந்தவர்களால் நடந்த ஆட்சி. இந்த ஆட்சியை நிறுவியவர் பரமேசுவர சோழன் ஆவான். பரமேசுவரனுக்குப் பின்னால் ஆண்ட அவனது சந்ததியினர் இசுலாமிய மதத்தைத் தழுவி உள்ளூர் பெண்களை மணந்தனர். எனவே இவர்கள் மலாக்கா சுல்தான்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் ஆட்சி தமிழில்தான் நடந்தது. கணக்குகளும் அரச கருமங்களும் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பிற்காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மலேசியாவில் தோட்டத் தொழிலுக்கும் சுரங்கத் தொழிலுக்கும் ஏராளமான தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு குடியேற்றப்பட்டனர். வணிகம் செய்யவும் பல தமிழர்கள் அங்கு சென்றனர்.
இரண்டாம் உலகப் போரின் போது நேதாசி சுபாசு சந்திர போசு அவர்கள் சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவிய போது அதில் ஏராளமான மலேயத் தமிழர்கள் சேர்ந்தனர். சேர்ந்து தியாகம் புரிய முன் வந்தனர். அவர் நிறுவிய சுதந்திர அரசிலும் பல தமிழர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் பிரிட்டிசு ஆட்சி ஏற்பட்ட போது மலேசியாவில் உள்ள தமிழர்கள், மலேயர்கள், மலேசியர்கள், சீனர்கள் ஆகிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி மாபெரும் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியவன் மலேயா கணபதி என்னும் தமிழன். அவன் நேதாசியின் இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி அவரது அன்பைப் பெற்றவன். அவன் தலைமையில் இன வேறுபாடுகளுக்கு அப்பால் தொழிலாளிகள் ஒன்றுபட்டுப் போராடுவதைக் கண்ட வெள்ளை முதலாளிகள் பதட்டம் அடைந்தனர். பிரிட்டிசு அரசிடம் முறையிட்டனர். அதன் விளைவாக பொய் வழக்கு ஒன்றில் மலேயா கணபதி கைது செய்யப்பட்டு அவனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவனுக்காகத் தமிழ்நாட்டில் பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா, கம்யூனிஸ்டு தலைவர் ஜீவா போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். ஒட்டுமொத்த தமிழகம் அன்று ஒன்றுபட்டு குரல் கொடுத்திருக்குமானால் மலேயா கணபதியைத் தூக்கில் போடும் துணிவு வெள்ளை அரசுக்கு வந்திருக்காது. தனது கடமையைச் செய்யத் தாய்த் தமிழகம் தவறிவிட்டது. இதன் விளைவாக மலேய கணபதி தூக்கில் தொங்கினான். அவன் உருவாக்கிய தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது.
இன்று என்ன நிலைமை? சீனர்கள், மலேயர்கள், தமிழர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களுக்கிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசு அரசு கையாண்டு பிரித்தது. அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கியது. அது இன்றைக்கு வளர்ந்து முற்றி வெடித்துள்ளது. தமிழர்களின் வழி வந்தவர்கள் தாங்கள் என்பதை மறந்து போன மலேசியர்கள் தமிழர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். யாருடைய உழைப்பினால் மலேசியா இன்று வளம் கொழிக்கும் நாடாக மாறியதோ அந்தத் தமிழர்களை விரட்டியடிக்க அந்நாடு திட்டமிடுகிறது. அண்மையில் மலேசியாவில் நடந்த தமிழர்களுக்கு எதிரான அரசு அடக்குமுறைகள் இதற்கு சீரிய சான்றாகும்.
மியான்மர்
பர்மா என முன்பு அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கப்பல் கப்பலாகத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்குள்ள ஐராவதி சமவெளிப் பகுதி சதுப்புநிலக் காடாகத் திகழ்ந்தது. அதை வெட்டிச் சீர்திருத்தி நன்செய் நிலமாக மாற்றுவதற்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மலேரியா போன்ற கொடிய நோய்கள், சதுப்பு நிலக் கானகத்தில் வாழ்ந்த விலங்குகள், பாம்புகள் போன்றவற்றிற்கு இரையாகி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் மாண்டனர். அவர்களின் உடல்களைப் புதைத்துத்தான் அப்பகுதி நல்ல நிலமாக மாற்றப்பட்டது. இன்று உலகிலேயே அதிகமான நெல் விளையும் பூமியாக ஐராவதி சமவெளிப் பகுதி விளங்குகிறது. ஆனால் இந்தத் தமிழர்களின் நிலை என்ன? இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு இத்தமிழர்களின் வழி வந்த மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். வேறு வழியே இல்லாமல் எஞ்சி வாழும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாக தமிழ் மொழி, கலை, இசை போன்றவற்றை இழந்தவர்களாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
தென்ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்காவில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்நாட்டில் கரும்புத் தோட்டங்கள் அமைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வழி வந்தவர்களே இன்றைய தென் ஆப்ரிக்க நாட்டுத் தமிழர்கள் ஆவார்கள். பத்து ஆண்டுகளுக்குக் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த பிறகு அவர்கள் நாடு திரும்ப விரும்பினால் இலவசமாகக் கப்பல் பயணச் சீட்டு அளிக்கப்படும் என வெள்ளை முதலாளிகள் வாக்குறுதி கொடுத்திருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு இடையில் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாது. எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பத்து ஆண்டு காலம் பாடுபட்டு கரும்புத் தோட்டங்கள் மூலம் வெள்ளை முதலாளிகள் செல்வச் செழிப்பில் உயர வழி வகுத்தவர்கள் தமிழர்கள். ஆனால் பத்து ஆண்டு காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க ஊர் திரும்ப கப்பல் பயணச் சீட்டுகள் அளிக்கப்படவில்லை.விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலருக்கு மட்டுமே அது கிடைத்தது. எனவே வேறு வழி இல்லாமல் அந்த தமிழர்கள் அங்கேயே வாழ்ந்து தீரவேண்டிய நிலை ஏற்பட்டது. தங்களுடைய மிகக் கடுமையான உழைப்பின் விளைவாகப் படிப்படியாக அவர்கள் உயர்ந்தனர். ஆனாலும் அவர்களின் குடியுரிமைகள் மறுக்கப்பட்டன.
இந்த நிலையில் அந்நாட்டில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள குசராத் மாநிலத்திலிருந்து மோகன்சந்த் கரம் சந்த் காந்தி அங்கு வந்து இறங்கினார். அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் இரங்கத்தக்க நிலையைக் கண்ட அவர் வருந்தினார். அவர்களுக்காகப் போராட முடிவு செய்தார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்களே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவரது போராட்டங்களில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு சிறை சென்றனர். பல்வேறு தியாகங்களையும் புரிந்தனர். தில்லையாடி வள்ளியம்மை என்னும் மிக இள வயதுப் பெண் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று அங்கு நோய்வாய்ப்பட்டு உயிர்த் தியாகம் செய்தார். அந்த அளவு தமிழர்கள் காந்தியடிகளின் போராட்டத்திற்கு உறுதுணை புரிந்தனர். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் வழக்கறிஞர் காந்தியாகத் தங்கள் நாட்டுக்கு வந்தவரை மகாத்மா காந்தியாக இந்தியாவுக்கு அனுப்பி நமது விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கச் செய்தவர்கள் தென்ஆப்ரிக்கத் தமிழர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. டர்பன், சோகன்சுபர்க் மற்றும் பல்வேறு நகரப் பகுதிகளில் வாணிகம், தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த தமிழர்கள் சிறுகச்சிறுக நிதி திரட்டி அதன் விளைவாக வீடுகள் கட்டி வாழ்ந்தனர். ஆனால் வெள்ளை நிற வெறி அரசு திடீரென ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. நகரப் பகுதிகளில் வெள்ளையர்களைத் தவிர வேறு யாரும் வாழக் கூடாது என்றும் மற்றவர்கள் ஊருக்கு வெளியே அரசு ஒதுக்கியுள்ள இடத்தில்தான் குடியேற வேண்டுமென்றும் உத்தரவு இட்டது. இதன் விளைவாக ஒரு நொடிப் பொழுதில் தமிழர்கள் தங்கள் சொத்துகளை இழந்தார்கள். அரசு அளித்த மிகச் சொற்பமான நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு வெளியே குடியேறினார்கள். ஆனாலும் அவர்கள் சோர்ந்து விடவில்லை. விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழினம் மீண்டும் தங்கள் முயற்சியால் தலைநிமிர்ந்தது. ஒதுக்குப்புறங்கள் என்று கருதப்பட்ட இடங்கள் இன்று சிறந்த நகர்ப்புறங்களாகக் காட்சி தருகின்றன.
நிறவெறி அரசுக்கு எதிராக நெல்சன் மண்டேலா தலைமையில் போராடிய கறுப்பு இன மக்களுடன் கலந்து தமிழர்களும் போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் விளைவாக நிறவெறி அரசு நீங்கியது. நெல்சன் மண்டேலா தலைமையில் சுதந்திர அரசு மலர்ந்தது. இந்த அரசில் அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உயர் அதிகாரிகளாகத் தமிழர்கள் பலர் பதவி வகிக்கின்றனர். வணிகர்களாகவும் தொழிலதிபர்களாகவும் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்க தமிழர்களின் வாழ்வு பொருளாதார ரீதியில் வளமாக இருந்தாலும் அங்கு தமிழ்தான் இல்லை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆங்கிலம் பேசியே அவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்களில் தமிழ் ஒட்டிக் கொண்டு இருக்கிறதே தவிர அவர்களுக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வயது முதிர்ந்த சில பெரியவர்கள் மட்டுமே தட்டுத்தடுமாறி தமிழ் பேசுகிறார்கள். மற்றவர்கள் தமிழர்களாக வாழ்ந்தாலும் அவர்கள் தமிழை இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள். ஆனாலும் அங்கு மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, இசை போன்றவற்றைக் கற்றுக்கொள்ள அவர்களுக்குத் துடிப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு வழி தான் இல்லை. ஆங்கில எழுத்துகளின் துணை கொண்டு தான் தமிழை எழுதவோ படிக்கவோ வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது அவர்கள் தவறு அல்ல. தாய்த் தமிழகம் அவர்களை மறந்து விட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அங்கு பாடப் புத்தகங்களை அனுப்பி உதவி இருக்க வேண்டும். ஆனால் அதை தமிழக அரசுகள் செய்வதற்கு அடியோடு தவறிவிட்டன.
தென்ஆப்பிரிக்கத் தமிழர்கள் தங்களுடைய சொந்த முயற்சியின் பெயரால் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நிறுவி தமிழ், தமிழிசை போன்றவற்றை கற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதனால் பெருமளவு பயன் ஏற்படாது. தமிழக அரசு செய்கிற உதவியின் மூலம்தான் பெருமளவு விளைவுகள் ஏற்படும்.
தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பெயர்களில் சாதிப் பெயர்கள் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சாதிமுறைக்கு இடம் இல்லை. மிகப்பெரும்பாலான திருமணங்கள் சாதியற்ற திருமணங்களாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்களில் யாருக்கும் தங்கள் இன்னின்ன சாதி என்பது தெரியாது. மனம் ஒப்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் சாதியை அறவே ஒழித்திருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழிகாட்டுவது ஆகும்.
மொரிசீயசு
இந்திய மாகடல் பகுதியிலுள்ள மொரிசீயசு, ரீயூனியன்.போன்ற தீவுகளில் தோட்ட வேலைக்காகத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே வாழ்கிறார்கள். ஆனாலும் அவர்களும் பெயரளவில் தமிழர்களாக வாழ்கிறார்களே தவிர அவர்கள் வாழ்வில் தமிழுக்கு இடமில்லை. பிரஞ்சு, ஆங்கிலம், கிரியோலி போன்ற மொழிகளையே வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் அவர்கள் பேசி வாழவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனாலும் தாங்கள் தமிழர்கள் என்பதை அவர்கள் இன்னமும் மறக்கவில்லை. இத்தீவுகளில் வாழும் தமிழர்களைத் தாய்த் தமிழகம் மறந்து விட்டது. அவர்களுக்கு உதவ வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டது.
பிரிட்டிசு கயானா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தோட்ட வேலைகளுக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழர்களின் வம்சாவழியினர் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பு முற்றிலுமாக அறுந்து போன நிலையில் பெயரளவில் தமிழர்களாகவும் செயலளவில் ஆங்கில மொழி பேசுபவர்களாகவும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கயானா நாடு சுதந்திரம் பெற்றபோது அதனுடைய முதல் பிரதமராகப் பொறுப்பு ஏற்றவர் செட்டி செகன் என்னும் தமிழர். அவருக்கு தமிழ் அறவே தெரியாது. ஆனாலும் தன்னுடைய மூதாதையர்கள் வாழும் நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் தமிழநாட்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் வந்து சென்றார். அங்குள்ள தமிழர்களை முற்றிலுமாக நாம் இழந்து விடுவதற்கு முன் அவர்களுக்கு நமது மொழியைக் கற்பிக்கத் தேவையான உதவிகளைச் செய்து மீட்டெடுக்க வேண்டும்.
தாய்த் தமிழகத்தின் கடமை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யூதர்கள் உலகம் எல்லாம் சிதறிப் பரவினார்கள்.
எந்தெந்த நாடுகளில் அவர்கள் குடியேறினார்களோ அந்தந்த நாடுகளின் மொழிகளை தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். இயேசுபிரான் பேசிய தங்களது தாய்மொழியான ஈப்ரு மொழியை முற்றிலுமாக இழந்து விட்டார்கள். அந்த மொழியும் செத்த மொழிகளில் ஒன்றாகிவிட்டது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் போது யூத இனம் அனுபவித்த கொடுமைகளுக்குப் பின்னால் தங்களுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும் என்பதையும் தங்களது தாய் மொழியான ஈப்ரு மொழியை மீட்டெடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தங்கள் தலையாய கடமையாக உணர்ந்தனர். அதன் விளைவாக பாலஸ்தீனத்தின் பகுதியில் பெரும் போராட்டத்திற்கு இடையில் இசுரேல் நாட்டை உருவாக்கினார்கள். தங்கள் குழந்தைகள் ஈப்ரு மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றை கற்றே தீரவேண்டும் என முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இசுரேல் நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் எந்த நாட்டில் யூதர்கள் வாழ்ந்தாலும் அங்கெல்லாம் தங்களுக்குள் ஈப்ரு மொழி பேசுவதையும் தங்களுடைய குழந்தைகளுக்கு அதைக் கற்றுத் தருவதையும் கட்டாயம் ஆக்கினார்கள். இதன் விளைவாக ஈப்ரு மொழி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் இன்னும் மாறிப் போக இருந்த யூதர்களும் மீட்டு எடுக்கப்பட்டார்கள் என்பது வரலாறு ஆகும்.
அதைப் போல அயல் நாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழக் கூடிய தமிழர்களோடு தாய்த் தமிழகத்திலுள்ள தொடர்பு நெருக்கமானதாக அமைய வேண்டும். மொழியை இழந்து அவர்கள் தடுமாறுவதைப் பார்த்துக் கொண்டு நாம் வாளாவிருக்கக் கூடாது. மொழி, பண்பாடு, கலை, இசை போன்ற துறைகளில் அவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்பது அறுக்கப்பட முடியாத தொடர்பாக விளங்க வேண்டும்.
தமிழக அரசு மட்டுமல்ல - தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களும் இந்தத் தொடர்பைப் புதுப்பிக்க வேண்டும் - வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு தாய்த் தமிழகத்திலிருந்து மொழி அறிஞர்கள், கலைஞர்கள், இசைவாணர்கள் போன்றவர்கள் அடங்கிய தூதுக் குழுக்கள் ஆண்டுதோறும் அனுப்பப்பட வேண்டும். இந்நாடுகளில் தமிழ் இலக்கிய விழாக்களையும் கலை விழாக்களையும் நடத்த வேண்டும். திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றின் வாயிலாகவும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அயல்நாடுகளில் - தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
மேற்கண்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தமிழ்க் கலை, பண்பாடு போன்றவைகளுக்குத் தனிப்பிரிவுகள் அமைக்க வேண்டும். இத்துறைகள் மூலம் அந்தந்த நாடுகளில் கலை, பண்பாடு ஆகியவற்றைப் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.