Saturday, August 13, 2011

தமிழர் வாழும் நாடுகள் -fiji- பீஜித் தீவில் தமிழர்

0




ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.

தமிழர் குடியேறிய வரலாறு :

1874-ஆம் ஆண்டு பீஜித்தீவு பிரிட்டனின் முழுக்குடியேற்றமானது. ஆள் பிடித்து கரும்புத் தோட்டத்திற்கு கொண்டு வரும் கங்காணி முறை மூலம் 1879-1916க்கு இடையே கப்பல்களில் 65,000 இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர். பீஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தை அமைத்த சென்னை மாகாணத்திலிருந்து சென்ற ஸ்ரீ சாது குப்புசாமி எழுதிய குறிப்பு கூறுவதாவது: "5 வருச அக்ரிமெண்டு ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனி வேலைக்கு நான் வந்தபோது புருஷர்களும் ஸ்தீரிகளும் ஒப்பந்தத்தில் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் சி.எஸ். ஆர் கம்பெனி கொலம்பர்கள் என்னும் அதிகாரிகள் ஒப்பந்த முறையில் வந்த ஜனங்களுக்குத் தன் வாயால் சொல்வதே சட்டம். 

கொலம்பர்களுக்குக்கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் 'சர்தார்' என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த ஆள்களுக்கு ஒவ்வொரு தினமும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்ற திட்டங்களைக் கொலம்பர்கள் சர்தார்களுக்குச் சொல்வார்கள். சொல்லும் அளவுக்கு திட்டப் பிரகாரம் வேலை செய்து முடிக்காத ஆள்களுக்கு புருஷர்களாயினும் பெண் மக்களாயினும், சர்தார்களும் கொலம்பர்களும் அவர்களைக் கீழே தள்ளி மார்பு மேல் குத்தினார்கள். உதைத்தார்கள். கூலியைக் குறைத்தார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் புருஷர்களையும் ஸ்திரீகளையும் திட்டினார்கள். இதுவன்றிக் குறித்த அளவு திட்டப்படி வேலை செய்து முடிக்காததைப் பற்றிச் சில சமயங்களில் கொலம்பர்கள் மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். இதைப் பற்றிக் கோர்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மனும் வரும். குறித்த அளவுப்படி செய்யாத குற்றத்தால் கோர்ட்டுகளில் அபராதமும் விதிப்பதுண்டு. கரும்பு எஸ்டேட்டுகளில் சாதாரணமாய் ஜனங்கள் செய்து வந்த வேலைகளாவது: ஏர் உழுதல், கரும்பு நடல், புல்வெட்டுதல், மோரி வெட்டுதல், கரும்பு வெட்டுதல், கரும்புக்கு உப்பு எரு முதலியன போடுதல்.

இதுவும் தவிர ஒப்பந்தக் கூலிகளாகிய புருஷர்களையும், சர்தார்மார்களும் கொலம்பர்களும் கரும்பு வயல்களில் செய்யும் இம்ஸைகளைப் பொறுக்க முடியாமல் எதிர்த்து அடித்த அக்குற்றங்களுக்காக, சர்க்காரால் தண்டணை விதிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் அநேகம் பேர்கள்.

அக்ரிமெண்டில் கொண்டு வந்தவர்களுக்கு சராசரி நான்கு புருஷர்களுக்கு மத்தியில் ஒரு ஸ்தீரி வீதம் வந்தார்கள். இதனால் எண்ணற்ற கொடுமைகளும் கொலைகளும் நடந்தன. இக்குற்றங்களால் தூக்கு தண்டனையும் அடைந்தார்கள். பாரத தேசத்திலிருந்து பீஜிக்கு ஐந்து வருஷ அக்ரிமெண்டின் கெடுவு தீர்ந்து விட்ட ஜனங்கள் கய் மித்திகளிடம் லஜன் பேரில் நிலம் பிடித்துக் காடு வெட்டிப் பண்படுத்தி விவசாயம் செய்தார்கள். சிலர் சி.எஸ்.ஆர் கம்பெனி இடமே வேலையும் செய்தார்கள். மற்ற கம்பெனி களிலும் வேலை செய்தார்கள். சிலர் சொந்த வியாபாரம் செய்து வந்தார்கள். இப்படி சுயமாய்ப் பாடுபட்டு வீடுவாசல்களை அமைத்துக் கொண்டு குழந்தைக் குட்டிகளுடன் ஜ"வித்தார் கள்" -எனக் கூறும் குறிப்பிலிருந்து அன்றைய பீஜி தமிழர்களின் நிலை தெரியவருகிறது. 1915 இல் காந்தியின் நண்பரான தீனபந்து ஆண்ட்ரூஸ்துரை பீஜிக்கு வருகை புரிந்தார்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டு மனமிரங்கி பீஜி அரசிடத்திலும், கம்பெனிகாரர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி கூலி உயர்வு கிடைக்கச் செய்தார்.

சி.எஸ். ஆண்ட்ரூஸ், வெ.பியர்களின் தீராத உழைப்பினால் 1917 இல் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் ஒழிக்கப்பட்டது. 1920-இல் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பீஜித்தீவில் குடியேறுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர்களின் 2-ஆம் கட்டப் போராட்டம் : பீஜித்தீவில் இருந்த கரும்புத் தோட்டங்கள் முழுவதும் சி.எஸ்.ஆர் என்ற ஆஸ்திரேலியா கம்பெனிக்குச் சொந்தம். ஒவ்வோர் இந்திய விவசாயிக்கும் பத்து ஏக்கர் நிலம் பத்து ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டது. அதில் ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் சொந்தமாகப் பயிரிட்டுக்கொள்ளலாம். கரும்பு முற்றிய பிறகு அதனை வெட்டி வண்டி நிறைத்துக் கொடுக்கவேண்டும். அதனை கம்பெனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயி பெற வேண்டும். சர்க்கரை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். ஒரு டன் சர்க்கரையின் விலையில் 30% விவசாயிக்கு; 70 விழுக்காடு, அரைத்து சர்க்கரை செய்த கம்பெனிக்கு. "சி.எஸ்.ஆர். கம்பெனியார் ஆறுமாத காலம் கரும்பை அரைத்துப் பிழிகிறார்கள். ஆண்டு முழுவதும் இந்தியர்களை அரைத்துப் பிழிகிறார்கள்." என்று சுவாமி அவிசானந்தர் கூறினார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் கரும்பு-விறகின் அளவுக்கு விலை குறைந்து விட்டது. விவசாயிகள் முறையீட்டை அரசோ, கம்பெனியோ செவிசாய்க்கவில்லை. விவசாயிகளின் அவலத்தை உணர்ந்த சுவாமி ருத்திரானந்தனர், விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார். சுவாமிஜியும், வழக்கறிஞர் அம்பாலால் பட்டேலுக்கும் அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. அவர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு வெளியே செல்லக்கூடாது என்பதே அது. விவசாயிகளை மீறி கம்பெனியார் கரும்பு வெட்ட முயன்றனர். தாங்கள் விளைவித்த பயிரை தாங்களே எரித்துப் பொசுக்கினர். பீஜி தமிழர் வரலாற்றில் இந்நிகழ்ச்சி 'லங்கா தகனம்' என அழைக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. பீஜி விடுதலை அடைந்தபிறகு லார்டுடென்னிங், சர்க்கரை விலையில் விவசாயிக்கு 65 விழுக்காடும், ஆலை முதலாளிக்கு 35 விழுக்காடும் என்று தீர்மானம் செய்தார். இத்தீர்மானம் கம்பெனியாருக்கு பாதகம் எனக்கருதி நிலங்களையும், கரும்பு ஆலைகளையும் விற்க முடிவு செய்தனர்.

கரும்பு விவசாயத்தோடு சர்க்கரை உற்பத்தி விற்பனை ஆகிய எல்லாவற்றிலும் 45% விழுக்காடு குத்தகைகாரர்களான இந்திய விவசாயிகளுக்கு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து வெற்றியும் பெற்றனர்.

தமிழரின் இன்றைய நிலை 

சமயம் :

பீஜியில் தென்னிந்தியர்களுக்கான கோயில்கள் மிகுதியாக இருக்கின்றன. பிள்ளையார், சுப்பிரமணியர், நந்திலம்பாஸா பெருமாள், சக்தி மாரியம்மன், காளியம்மன் கோயில்கள் போன்றவைகள். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் பொதுவாக எல்லாத் தென் இந்தியர்களும் 'கோவிந்தா, கோவிந்தா' எனக் கோயிலுக்குள் முழுக்கமிடுவர். இதனால் தென்னிந்தியர்களை, பீஜியர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என அழைக்கின்றனர். சுவாவில் உள்ள மகாதேவி மாரியம்மன் கோயிலைக் கட்டியவர்கள் கந்தன் பூசாரி, ரெங்கசாமி நாயுடு மற்றும் சிலர். இங்குள்ள சில கோயில்களில் பார்ப்பனரல்லாதார் பூசாரியாக பணியாற்றுகின்றனர். இக்கோயிலில் 1928 முதல் தீ மிதி திருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொராண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வியாழன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிய 10 நாட்கள் நடக்கும். தீ மிதி விழாச்சடங்கில் குருபூசை, கங்கணம் கட்டுதல், சக்தி கரகம், தெருக்கூத்து முதலியவை உண்டு. திமிதித்தலின் போது அலகு குத்திக் கொள்ளுதலும் உண்டு. பீஜித் தீவில் 40 கோயில்களில் திமிப்பு விழா நடைபெறுகிறது. இது தவிர பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, பங்குனி உத்திரம், கார்த்திகை, சாதுசாமி தினம் (ஆகஸ்டு 3-ம் நாள்) முதலியனவும் கொண்டாடப்படுகின்றன. தை பூசத்திருவிழா, கிருஸ்துமஸ் சமயத்தின் போதோ, புத்தாண்டின் தொடக்கத்தின் போதோ 10 நாள் கொண்டாடப்படுகிறது. தை பூசம் சமயத்தில் கரும்பு அறுவடை முடிவடைந்த சமயமாயிருப்பதால், இத்திருநாள் பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், படையல், விரதம் சிறப்பு வழிபாடு என்று இத்திருவிழா செல்கிறது. விழாவுக்கு வரும் பிற மாவட்ட மக்களுக்கு நாடி மாவட்ட மக்கள் உணவளிக்கின்றனர். இதுபோலவே புரட்டாசி சனிக்கிழமையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும், துளசி தீர்த்தமும் திருநீறும் கொடுக்கப்படுகின்றன. 

வீடு :

கரும்புத் தோட்டங்களில் கொடுக்கப்பட்ட நிலங்களில் தனித்தனி வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலரின் வீடுகள் மரப்பலகைச் சுவருடன் டின் கூரை வேய்ந்தவை (Tin-Timleer) சிலருக்கே காங்கிரிட் வீடுகள் உண்டு. வீட்டில் வானொலிப் பெட்டி கட்டாயம் இருக்கும். தொலைக்காட்சி அங்கு இன்னும் வரவில்லை. வீடியோ வசதி இல்லை.

உடை :

விழா நாட்களிலும், திருமணங்களில் மட்டும் சிலர் வேட்டி, உடுத்துகின்றனர். பெண்கள் புடவை அணிவது உண்டு. பெண்கள் 'கவுன்ட்ரெஸ்' அணிகிறார்கள். பொட்டு வைத்துக் கொள்வதில்லை. 

உணவு :

இட்லி, தோசை அவ்வப்போது கிடைக்கும். புட்டு, இடியாப்பம், ஆப்பம், அதிரசம், முறுக்கு ஆகிய தமிழ்ப்பண்டங்களும் இல்லாமலில்லை. மற்றப்படி சோறும், ரொட்டியும், பருப்பும், குழம்பும், ரசமும் ஊறுகாயும், புளியும், இஞ்சியும் கிடைக்கும்.

தகவல் தொடர்பு :

1958 முதல் 'மித்திரன்' என்ற எட்டு பக்க கையெழுத்து ஏடு நடத்தப்பட்டு வருகிறது. சுவாமி ருத்ரானந்தா 'சங்கம்' என்ற மாதப் பத்திரிக்கையைக் கொண்டு வந்தார். கே.ஆர். பண்டாரம் என்பவர் தொடக்க காலத்தில் தமிழ்த் திரைப்படங்களை வரவழைத்து காண்பித்தார். அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது தமிழ் வீடியோ திரைப்படங்கள் வரவழைக்கப்பட்டு பெரும்பாலோரால் பார்க்கப்படுகிறது.

தமிழ்மொழியின் நிலை 

இன்றைய மக்கள் தொகையில் 70-80 ஆயிரம் பேர் தமிழர்கள் இருக்கலாம் என்கிறார் பால கணபதி. தமிழ்ப் பேசத் தெரிந்த 35 வயதுக்கு மேலான பெரியோர் 5 அல்லது 6 ஆயிரம் இருக்கலாம். இவர்களில் தமிழ் எழுதவும் தெரிந்தவர்கள் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கலாம். மொத்தத்தில் 'தமிழ் தெரியாத தமிழர்களே' அதிகம். இன்று தமிழர்கள் வீட்டில் 'இந்தி'தான் பேசுகின்றனர். சுவாமி ருத்ரானந்தா அவர்கள் இராமாயணம், திருக்குறள் ஆகியவற்றின் பீஜிமொழி (கைவித்தி மொழி) பெயர்ப்பினை வெளிவரச் செய்தார். உறவுப்பெயர்கள், ஆட்களின் பெயர் மட்டும் தமிழாக இருக்கிறது. தமிழ்மொழி நிலைபெற திரு. அப்பாபிள்ளை (தமிழ்மொழி காப்பாளர் கழகம்) பீஜி-சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஆகியோர் சிறப்பாக பாடுபட்டு வருகின்றனர்.

"தென்னாடு விட்டே தீவாந்தரத்தையெல்லாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர்-எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத்தாங்கும் தமிழரே தாம்" -கவிமணி.

கல்வி :

பீஜியில் கிருத்துவ பாதிரிமார்கள் ஆங்கிலவழி பள்ளிகளையே நடத்திவந்தனர். ஸ்ரீ மனோகரானந்தமஹராஜ் வடநாட்டிலிருந்து வந்து இந்திமொழி பள்ளிகளை துவக்கினார். அவருடைய பள்ளியிலேயே தமிழ், தெலுங்கு மொழி வகுப்புகள் பிற்காலத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன. 1920 க்கு பின்னர் பல இடங்களில் தமிழ்பள்ளி தொடங்கப்பட்டு தமிழ் கல்வி தரப்பட்டது. அப்போது ஆசிரியர்களாக இருந்த தமிழர்கள்: கெங்குபிள்ளை, வேலாயுதம் பிள்ளை, எஸ்.நாராயண பிள்ளை, இராமசாமிக் கவுண்டர், கதிர்வேலு முதலியார், அரங்கசாமி அய்யங்கார், வடிவேலு நாட்டார், பெரியசாமி, வி.கோபால் முதலியார், குப்புசாமி சாது முதலியோர்.

1937-ஆம் ஆண்டு இராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த அவிசா நந்தர் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார். இதன் பயனாக அரசு தாய்மொழி கல்விக்கு தலை அசைத்தது. 1926 முதலே தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் தமிழ் கல்விக்காக போராடி வந்தது. நாடு முழுவதும் சங்கம் பல பள்ளிகளை நிறுவியது. அவை 'சங்கப்பள்ளிகள்' என அழைக்கப்பட்டன. 1950க்குப் பிறகு தமிழ் கல்வி நலியத் தொடங்கியது. 1940 இல் ஒரு இலட்சம் தமிழர்கள்

பீஜியில் இருந்தார்கள். இன்று 30,000 பேர் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை ஏற்பட்டுள்ளது. 1986-இல் 2000 பேர் 12 பள்ளிகளில் தமிழ் படிக்கிறார்கள். இன்று பீஜியில் சங்கம் நடத்தும் 13 பள்ளிகளிலும் மற்ற மூன்று பள்ளிகளிலும் தமிழ்க் கற்றுத் தரப் படுகிறது. தமிழகத்திற்கு மேல்படிப்பிற்கு வரும் பீஜித் தமிழர்களுக்கு 16 கல்லூரிகளில் இடம் தரப்படுகிறது.

இலக்கியம் :

இலக்கியம் என்று சொல்லக்கூடிய அளவு பீஜி தமிழிலக்கியம் வளரவில்லை. சாது குப்புசாமி அவர்கள் பீஜி தமிழர்கள் பற்றி எழுதிய குறிப்பே ஒரு வரலாற்று ஆவணமாக இருந்து வருகிறது. பீஜி தோட்ட தொழிலாளர்களைப்பற்றி பாரதி பாடிய 'கரும்புத் தோட்டத்திலே' பாடல்தான் முதல் இலக்கியம் எனலாம்.

அமைப்புக்கள்:

1. தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம்:

1926-ஜனவரி 10-ஆம் நாள் ராக்கிராக்கியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழாவின் போது இச்சங்கம் அமைக்கப்பட்டது. இச்சங்கத்தை ஸ்ரீசாது குப்புசாமி என்பவர் அமைத்தார். இவருக்கு உதவியாக கோவில் முதலியார், கே.எஸ்.ராமன், நாராயணன் நாயர், கே.கருப்பன், சர்தார் நாகையா, அப்பாசாமி முதலியோர் அமைத்தனர். இன்று பீஜியில் தமிழ் இருக்கிறது என்றால் அது இச்சங்கத்தின் மூலமே என்று வரலாறு காட்டுகிறது. சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட எம்.என். நாயுடுவிற்கு 'தன்வீர்' என்ற பட்டமும், சாது குப்புசாமிக்கு 'சேவகரத்னம்' என்ற பட்டமும் 1941 ஏப்ரலில் தரப்பட்டன.

2. மதராஸ்மகா சங்கம் : 

இச்சங்கம் 1927 டிசம்பர் 26-ஆம் நாள் அமைக்கப்பட்டது. வி.எம்.பிள்ளை தலைவராக செயல்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இது முக்கியத்துவமிழந்தது. 

3. தென்னிந்திய வாலிபர் சங்கம்:

இச்சங்கத்தின் தலைவராக அப்பாபிள்ளை என்பவர் செயல்பட்டார். இச்சங்கம் 1931-இல் தோன்றியது. இன்று இச்சங்கத்திற்கு 20 கிளைகள் இருக்கின்றன. இச்சங்கம் நாதசுரம், தெருக்கூத்து முதலிய கலைகளில் பயிற்சி அளிக்கிறது.

தமிழர் சாதனை:

அ) சாது குப்புசாமி அவர்கள் அமைத்த சங்கமே இன்றளவும் தமிழையும், தமிழரையும் காத்து வருகிறது. இவருடைய பீஜி பற்றிய குறிப்புகளே இன்றளவும் இத்தீவின் தொழிலாளர் வாழ்க்கையைச் சொல்லும் ஆவணமாக இருந்து வருகிறது.

ஆ) இராமகிருஷ்ண மிஷன், சுவாமி அவிசாநந்தரை பீஜிக்கு 1937 மே மாதம் அனுப்பியது. தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம் செயல்பட வேண்டுமானால் அதற்கு சட்டப் பூர்வமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றார். 6.1.1938 இல் சட்டம் பதிவு செய்யப்பட்டது. 

மேலும் இவருடைய முயற்சியினால்தான் தென் இந்திய மொழியில் மாணவர்கள் படிப்பதற்கு 'மித்யூஸ் கல்வி அறிக்கையை' செயல்படுத்தியது. மேலும் சுவாமியாரின் முன்முயற்சியில் மாதர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஸ்ரீமதி முத்தம்மா கவுண்டர் செயல்பட்டார். அவிசாநந்தர் கூறியபடி ஓர் மாணவரில்லத்தையும் கட்டினர். ஒவ்வொரு தென் இந்தியர் வீட்டிலிருந்தும் தினம் ஒரு கைப்பிடி அரிசி அனுப்பப்பட்டு இவ்விடுதி நடத்தப்பட்டது.

இ) சுவாமி ருத்ரானந்தா மயிலாடுதுறையை அடுத்த மணல் மேட்டில் ஒரு பிரபலமான மிராசுதார் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் முத்துக்கிருஷ்ணன். சுவாமி எழுத்தாளர் 'கல்கி'யின் பள்ளித் தோழர். சுவாமி ருத்ரானந்தாவை, அவிசாநந்தர் பீஜிக்கு 1937ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார். 

சுவாமிருத்ரானந்தா இந்தியர்களுக்கு என்று ஆங்கிலத்தில் 'Pacific Review' என்ற வாரப்பத்திரிக்கையையும்; 'இந்தியில் ஜாக்ருதி' என்ற வார இதழையும்; 'சங்கம்' என்று தமிழ் இதழ் நடத்தியவர். இராமாயணம், திருக்குறள் ஆகியவை பீஜிமொழியில் வெளிவரக் காரணமாக இருந்தவர். தமிழர்களின் கல்விக் கண் திறக்க உழைத்தவர். தொழிற்சங்க வாதியாகவும் செயல்பட்டவர். இவர் இருந்த நந்தி என்ற ஊரிலிருந்து ஐந்துமைல் வட்டத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று பீஜிஅரசு சட்டம் போட்டது என்றால் சாமியாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்று தெரிந்து கொள்ளலாம். கொத்தடிமைகளாக சென்ற தமிழர் ஆலை முதலாளிகளாகவும், நிலச் சொந்தக்காரர்களாகவும் மாற்றிய பெருமை சுவாமி ருத்ரானந்தாவையே சாரும்.

ஈ) பால கணபதி: தமிழுக்கும், தமிழர்க்கும் பாடுபட்டு வருபவர்களில் தற்போது முக்கியமானவராக இருப்பவர். இவருடைய முயற்சியாலே தான் தமிழக அரசு பீஜி தமிழர்களுக்கு பாடபுத்தகங்களை அனுப்பியது; இவரே பீஜி தமிழர்களுக்கான பாடநூல்களைத் தயாரிக்கிறார். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 3 புத்தகங்களை தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டது. பீஜி அரசின் தமிழ் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

வணிகம் தொழில் புரிவோர் விவரங்கள் :

பெரும்பான்மையான தமிழர்கள் விவசாயிகள், பெரும்பான்மையான விவசாயிகள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஓரளவு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர். சிலர் 10 ஏக்கர் நிலத்தின் சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றனர். சொந்தமாக டிராக்டர் கூட பலர் வைத்திருக்கின்றனர். மூன்றில் 2 பேர் வானொலி; 20 இல் ஒருவர் வீடியோ வைத்திருக்கின்றனர். 40இல் ஒருவர் கார் வைத்திருக்கிறார். சில தமிழர்கள் குஜராத்திகள் கடையில் பணிபுரிகின்றனர். இவர்கள் வீடுகளில் தமிழ்ப் பெண்கள் வேலை செய்கின்றனர். சிலர் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிகின்றனர். பெரும் பதவி வகித்தத் தமிழர் மாணிக்கம் பிள்ளை ஆவார். இவர் அமைச்சர் அலுவலகத்தில் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.

நெருக்கடிக் காலம் :

1975-ஆம் ஆண்டு இந்தியர்களை நாடு கடத்த முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. 1987-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் பீஜியில் தேர்தல் நடந்தது. இந்தியர்களுக்கு மிகுதியான செல்வாக்கு உள்ள அரசு முதன் முதலாகப் பதவிக்கு வந்தது. இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு ஓங்கியதை விரும்பாத பீஜியர்கள் கர்னல் ராம்புகா தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் 'இந்தியர் ஆட்சியை' கவிழ்த்தார்கள் இராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. இதற்குக் காரணம் வட இந்தியர்களில் குஜராத்திகள் பெரிய வணிகங்களை தம் கையகப்படுத்தியதிலிருந்து பீஜியர்களுக்கும்-இந்தியர்களுக்கும் நெருக்கடி உருவானது. இதில் அப்பாவி தமிழர்களும் அல்லல் படுகின்றனர். இதையடுத்து தமிழர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலியவற்றிற்கு குடிபெயறும் நிலை தோன்றியுள்ளது.

"பொங்குணகடல் கடந்து-சென்றிப் பூவுலகத்திலே எங்கெங்கு வாழ்ந்தாலும்-தமிழர் ஏககுலத்தவராம் கோடாரி மண்வெட்டி-கலப்பை கூந்தாலி ஏந்துவோரே நாடெல்லாம் ஆளுகின்ற உண்மை நாயகராவாரையா! பாழ்நிலத்தையெல்லாம்-திருத்திப்பயன் படுத்தி மக்கள் வாழ் நிலமாகத்-தமிழர் மாற்றின தாரறியார்? இலங்கை சிங்கபுரம்-பீஜி முதல் இன்னும் பலவான தலங்களின் செல்வம்-தமிழர் தந்த செல்வமன்றோ?" -கவிமணி தேசிகவிநாயகம்

தொகுப்பு : ப. திருநாவுக்கரசு


ஆதார நூல்கள்:

1. அயல்நாடுகளில் தமிழர்கள்-முனைவர் எஸ். நாகராஜன்.
2. பாரெல்லாம் பரந்த தமிழர்-எம்.ஆர்.பாலகணபதி
3. உலகத்தமிழர்-பாகம்-2-வீரப்பனார்.

http://www.murugan.org/research/goundar.htm

0 comments:

Post a Comment

 
Design by JP