Saturday, August 13, 2011

தென் ஆப்ரிக்காவில் தமிழர்

0




ஆப்ரிக்கக் கண்டத்தின் தெற்கு முனையிலே இருக்கும் நாடு தென் ஆப்ரிக்காவாகும். இதை 4 மாநிலமாகப் பிரித்துள்ளனர் (அ) கேப் மாநிலம் (ஆ) விடுதலை பெற்ற ஆரஞ்சு நாடு (இ) நேட்டால் (ஈ)திரான்சுவேல். தென் ஆப்ரிக்காவில் உள்ள நான்கு முக்கிய நகரங்கள் : ஜோஹோனெஸ்பெர்க், கேப்டவுன், டர்பன், பிரிட்டோரியா முதலியவை ஆகும்.

1860-66 ஆண்டுகளில் 5448 இந்தியர்கள் நேட்டாலுக்கு வந்தார்கள். 1911-ஆம் ஆண்டளவில் 1,42,670 இந்தியர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். 1860-1911 ஆம் ஆண்டுகளுக்கிடையே 1,52,182 பேர் இந்தியாவிலிருந்து வந்தார்கள் எனப்பேராசிரியர் சுரேந்திரபான் கூறுகிறார். இவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் தமிழர்களும், தெலுங்கர்களும் ஆவர். இவர்கள் அனைவரும் இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் பணி புரிந்தனர். 1893 இல் புதிய சட்டம் வந்தது. இச்சட்டம், தொழில் முறைக் கட்டுப்பாடு ஒப்பந்தம் முடிந்த பின்பும் தொடர்ந்து நிலையாகத் தென் ஆப்ரிக்காவிலே வாழும் இந்தியர்கள் ஆண்டிற்கு 3 பிரிட்டீஷ் பவுண்டு வரிசெலுத்த வேண்டும் என்றது. இந்தியர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடையாது என 1894 இல் சட்டம் வந்தது. காந்திஜி தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து போராடினர். வெற்றி கிடைத்த போதிலும் பழைய நிலைமையே நீடித்தது. 

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இந்தியர்கள் போகக் கூடாது என்ற சட்டம் 1913 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியத் திருமணம் செல்லுபடியாகாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட போது, நேட்டாலில் காந்திஜி கரும்புத் தோட்டத் தொழிலார்களுடன் இணைந்து வேலை நிறுத்தம் செய்தார். பலர் கைது செய்யப்பட்டனர். தில்லையாடியைச் (தமிழ்நாடு) சேர்ந்த வள்ளியம்மாள் எனும் 16 வயது பெண் சிறையில் இறந்து போனாள். காந்திஜியின் அறப்போரில் பி.கே.கவுண்டன், தம்பி நாயுடு எனும் தமிழர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். போராட்டத்தின் பயனாக வரிசெலுத்த வேண்டும் என்ற சட்டம் ஒழிந்தது. 

கப்பல்களிலுள்ள பதிவேடுகளின் வழி இவர்களில் பெரும்பாலோர் பறையர், வன்னியர், வெள்ளாளர் சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என அறிகிறோம். ஆற்காடு, செங்கல்பட்டு, சித்தூர், சென்னை, வேலூர் மாவட்டங்களிலிருந்து மிகுதியாக தமிழர்கள் வந்தார்கள். பிற மாவட்டங்களில் கோயமுத்தூர், காஞ்சிபுரம், கடலூர், மதுரை, மதுராந்தகம், மைசூர், நெல்லூர், போரூர், சேலம், சைதாப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சிராபள்ளி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் வந்தார்கள்; இப்பதிவேடுகளில் வழக்கமாக அடிக்கடிவரும் பெயர்கள்: அருணாசலன், சின்னசாமி, செங்காடு, கோவிந்தன், குப்பன், முனிசாமி, முனியன், முருகன், பெருமாள், ராமசாமி, ரங்கசாமி, வீராசாமி, வெங்கடாசலம், வேங்கடசாமி.

1900 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்த தொழிலாளிகளின் சந்ததிகள் நகரப்புறத்திலுள்ள அரசு சிவில் பணிகளிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரியத் தொடங்கினர். 1944-ஆம் ஆண்டு டிரான்ஸ்வேல், நேட்டால் பகுதிகளில் இந்தியர்களுக்கு என்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடங்களில் மட்டும்தான் இந்தியர்கள் வீடுகளையும் நிலங்களையும் வாங்கலாம். தேர்தலில் கருப்பர்களும், வெள்ளையர்களும் இந்தியர்களைப் பகடைக்காயாக்கி விளையாடினர். பிற்காலத்தில் நகராட்சி அளவிலான உரிமைகள் கொடுக்கப்பட்டன. 

தமிழரின் இன்றைய நிலை 

1980 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 2,96,000 பேர் இருந்துள்ளனர். மொத்த இந்திய மக்கள் தொகையில் 37% விழுக்காடு தமிழர்கள் இருந்தனர். 



சமயம் : 
தமிழர் குடியேறிய மற்ற நாடுகளைவிட தென்னாப்பிரிக்காவில் கோவில்கள் அதிகம். தென் ஆப்ரிக்கத் தமிழர்களில் பெரும்பான்மையோர் சிவவழிபாடு செய்பவர்கள்.

இடம் கோயில்


இம்மூன்று கோயில்களும் முதன்முதலில் 1875 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டவை. இப்பொழுது தென் ஆப்ரிக்காவில் இருக்கும் மிகப் பழைய இந்துக் கோயில்கள்:
நியுலாந்து - நாராயண சாமிக் கோயில் - 1896 மவுண்ட் எட்சி கோம்பு - கணேசர் ஆலயம் முதலியன. இவை தவிர அரேனாபார்க் சிவாலயம்; போயனிக்ஸ’ல் உள்ள முருகன் கோவில்; டர்பனினுள்ள ஸ்ரீ வைத்தியநாத ஈஸ்வரர் ஆலயம், முதலிய கோவில்களும் உள்ளன.

தமிழர் கொண்டாடும் விழாக்கள் 1. பொங்கல் 2. தைபூசம் அல்லது கவடித் திருவிழா 3. மகாசிவராத்திரி 4. தமிழ்ப் புத்தாண்டு 5. ராமநவமி 6. சித்ரா பௌர்ணமி 7. விநாயக சதுர்த்தி 8. கிருஷ்ண ஜெயந்தி 9. சக்திபூசை 10. தீபாவளி 11. கார்த்திகைதீபம்.

வாழ்க்கைத் தரம் : 

தமிழர்களில் பெரும்பான்மையோர் இன்று பண்ணைப் பணியை விட்டுவிட்டனர். 3.7 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றார்கள். இவர்களுக்குக் கரும்புத் தோட்டங்களும், வாணிபக் கோட்டங்களும் சொந்தமாக இருக்கின்றன. பெரும் பான்மையானவர்கள் நகரங்களில் வாழ்கின்றனர். புறநகரிலுள்ள இந்தியர் ஏழ்மையில் வாடுகின்றனர். ஏழ்மைக் கோட்டை தாண்டி வாழ்பவர்கள் 28 விழுக்காட்டினர்.



தகவல் தொடர்பு 
'விவேக பானு' என்ற தமிழ் இதழை விருத்தாசலம் பிள்ளை என்பவர் நடத்தியிருக்கிறார். இவருக்குப்பின் ஜி. இராமசாமி, எஸ். முனுசாமி பிள்ளை ஆகியோர் 1930 வரை 'செந்தமிழ்ச் செல்வன்' என்ற இதழை நடத்திவந்தனர். இது தவிர 'மாணவர் உலகம்', 'இந்தியன் ஒளி' முதலியவை ஆகும். தற்சமயம் வெளிவரும் முக்கிய ஏடு ஆங்கிலத்தில் வெளியிடப்படும் தமிழ்ச் செய்திகள் (Tamil News) ஆகும். இது மாதம் ஒரு முறை வெளியிடப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு பக்கம் தமிழ்ப் பாடங்கள் கற்றுத் தருவதற்கு என இதில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பண்டைக்கால, தற்கால தமிழ்ச் செய்திகளை இவ்வேடு வெளியிடுகிறது. தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களை விளக்கவுரையுடன் வெளியிடுகின்றது.

ஒலி நாடாக்கள் : 

தமிழ் நாட்டில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தேவார, திருவாசகப் பாடல்கள் இங்கு பரவலாக்கப்பட்டுள்ளன. 

திரைப்படங்கள் : 

வீடியோ பட நாடாக்கள் மூலம் தமிழ்ப்படங்களை பார்த்து வருகின்றனர். 



தமிழ் மொழியின் நிலை :
இந்தியர்களிடையே மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் தமிழ் வழிக் கல்வியையும் வளர்த்தனர். இம்மாதிரி தமிழுக்காக உழைத்தவர் பாதிரியார் ஜ“ன் பார்டிஸ்டே சபோன் ஆவார். இவர் 1852-61 ஆம் ஆண்டுகளில் தமிழை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டார். 1867-ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை அமைத்தார். இவரைப் போலவே கௌர்லே, ரால்பஸ்டாட் போன்ற பாதிரிகளும் தமிழருக்கு தமிழ்மொழியை பயிற்றுவித்தவர்கள்.

தமிழ்மொழி கற்பிப்பதற்காக 'தமிழ் நியூஸ்' எனும் ஆங்கில மாத இதழ் தன் இதழில் ஒரு பக்கத்தை ஒதுக்கியிருக்கிறது. தமிழ் பாடங்களை சித்திர விளக்கங்களுடன் வெளியிடுகிறது. மேலும் தமிழ்மொழி எழுத்துத் தொகுதிப் பாடங்கள், சொல் அட்டவணைப் பாடங்கள், தொடக்கநிலைப் பள்ளிச் சிறுவர் பாடல்கள் முதலிய வற்றையும் இம்மாத இதழ் வெளியிட்டு தமிழ் வளர்க்கிறது. சரியான உச்சரிப்பைப் பெற்றோர்களிடம் இருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என இவ்விதழ் வலியுறுத்தியது. பண்டைய, தற்காலத் தமிழ் அறிஞர்கள், புலவர்கள் முதலியவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கி வெளியிட்டு வந்தது. இலக்கியங்களிலிருந்து சிறப்பான பகுதிகளை வெளியிட்டது. பாரதியார், தனிநாயக அடிகளார், திருஞான சம்பந்தர், ஒளவையார் போன்ற அறிஞர்கள், புலவர்களைப் பற்றிய கதைகளை எழுதி ஓவிய விளக்கங்களுடன் வெளியிட்டது. தென்னாப்பிரிக்க தொடக்கப்பள்ளி மாணவர்களின் சூழ்நிலைகளுக்கேற்ப திரு.என்.சி. நாயுடு தமிழ் அகராதி தயாரித்துள்ளார்.



இலக்கியம் : 
தென்னாப்பிரிக்க தமிழ் இலக்கியம் என்று சொல்லத்தக்களவு இலக்கியங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை. என்.சி. நாயுடு எழுதிய சில நாடகங்கள் மட்டுமே உள்ளன.



கல்வி 
1914 ஆம் ஆண்டு வரை இரண்டு தனியார் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டது. 1914 ஆம் ஆண்டு இந்துத் தமிழ் நிறுவனம் அமைக்கப்பட்டவுடன் அப்பொறுப்புபை இந்நிறுவனம் ஏற்றுக் கொண்டது. ஆங்கிலக் கல்விப் பள்ளி நேரம் முடிந்த பிறகு மதிய நேரத்தில் தமிழ்மொழி வகுப்புகள் நடத்தப்பட்டன. இன்று இந்நிறுவனம் சனி, ஞாயிறு மதியம் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்றுத் தருகிறது. ஒரு காலத்தில் வாரக்கடைசியிலும் பள்ளி நேரம் முடிந்தவுடனும் 32 பள்ளிகளில் தமிழ்மொழி கற்றுத் தரப்பட்டது. குடிபெயர்ச்சியினால் இப்பள்ளிகளுக்கு ஆதரவு குறைந்தது. 1981-ஆம் ஆண்டு தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கிய பெருமை இந்துத் தமிழ் வித்தியாலயம் நேட்டால் தமிழ் சைவ சபை முதலியவைகளுக்கு உண்டு என வீரப்பனார் கூறுகிறார்.

1984-ஆம் ஆண்டைத் தமிழ்க் கல்வி வளர்ச்சியின் முக்கிய ஆண்டாகக் கருதலாம். எல்லாப்பள்ளிக் கூடங்களிலும் தமிழும், மேலும் நான்கு இந்திய மொழிகளும் கற்றுத்தரப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. டர்பனில் இதன் பயனாக 4,300 மாணவர்கள் தமிழ் படிக்க முன் வந்தனர். தொடக்க நிலையானதால் தற்போது இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழ்க் கற்றுத் தரப்படுகிறது. தேவையான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 90 முதல் நிலைப்பள்ளிகளிலும் 4 உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் 1984 ஆம் ஆண்டிலிருந்து கற்றுத் தரப்படுகிறது. 

தென்னாப்பிரிக்கக் கல்வி அமைச்சு தமிழ் மொழி பாடத்திட்டத்தை வெளியிட்டது. அதன் குறிக்கோள்கள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் எளிதாக தமிழ் மொழி படிக்கும் திறனைப் பெற்றுவிட வேண்டும். எளிமையான செய்யுள் பிற பாடல்களை எளிமையான உரைநடை முதலியவற்றைப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றுவிட வேண்டும். தவறில்லாமல் எழுதுதல், பேசுதல் போன்ற திறன்களைப் பெற்றுவிட வேண்டும். தமிழ் இலக்கியம், வரலாறு முதலியவைகளைப் படித்து தமிழ்ப் பண்பாட்டை புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றுவிட வேண்டும் என்கிறது.

அமைப்புகள் : 

அ) நேட்டால் தமிழ் வேதக் கழகம் (Natal Tamil Vedic Society) :

இது தொடங்கப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தமிழ் பண்பாட்டின் பாதுகாவலனாக இக்கழகம் பணியாற்றி வருகிறது. தமிழ்ப்பாட நூல்கள், தமிழ் மொழி எழுத்துத் தொகுதிகள் நிறைந்துள்ள அட்டைகள், மாணவர் பெயர் பதிவேடுகள், சாக்பீஸ் போன்ற பல்வேறு பொருள்களை டர்பன் நகரில் உள்ள பள்ளிகளுக்கும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நேட்டால் தமிழ் வேதக் கழகம் இலவசமாக அளிக்கிறது. இக்கழகம் வெளியிட்டுள்ளவை :

1. Nursery Rhymes by Natal Tamil Vedic Society
2. Easy way to Tamil by Tamil vedic society.
3. Sivam Arul Thirattu by Tamil Vedic Society.
4. Adippadai Ilakkanam by Tamil Vedic Society.

ஆ) மியர் பாங்குத் தமிழ்ப் பாடசாலை சபை :

1936-இல் தோற்றுவிக்கப்பட்ட மியர் பாங்க் தமிழ்ப்பாட சாலை சபை (Merebank Tamil Society) தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடுகிறது. தேவையான நிதி திரட்டுவதில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறது. 1988 ஆம் ஆண்டு இறுதியில் 5 தமிழ் மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்து தமிழ் நாட்டிற்கு அனுப்பி தமிழ் மொழி, தமிழ் பண்பாடு கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வதாக அறிக்கை வெளியிட்டது.
பிற சங்கங்கள் வருமாறு:

1. தென் ஆப்பிரிக்கா அருட்பா கழகம் 
2. தமிழ் இசைக் கழகம் 
3. வைதீக சைவக் கழகம்
4. தமிழ் மன்றக் கழகம்
5. சைவ சித்தாந்தக் கழகம்
6. திருக்குறள் கழகம் 
7. பிரிட்டோரியாத் தமிழர் கழகம்
8. தெய்வ நெறிக் கழகம்
9. ஆரிய சமாஜம் 
10. இராம கிருஷ்ணா சங்கம் 
11. தென்னாப்பிரிக்க தமிழர் கூட்டமைப்பு கழகம்
12. அருட்பா மாதர் கழகம்-பே வியூ
13. பெனோனி தமிழ்ப்பள்ளிக்குழு
14. கிளேர் எஸ்டேட் மாதர் சங்கம் 
15. தென் ஆப்பிரிக்கத் திராவிட சங்கம்
16. ஹ’ந்து மகாசபா
17. இசிபிங்கோ பீச் அருட்பா கழகம்
18. நார்த்டேல் சிவ ஞான சபா.
19. லெனாசியா தமிழ்க் கூட்டிணைக் கழகம்
20. ஓம் சாந்தி பண்பாட்டு நிலையம் 
21. இராமலிங்க அடிகள் மாதம் சங்கம் 
22. சமரசக் கழகம்
23. சாதி சன்மார்க்க சங்கம்
24. சல்கிராஸ் தமிழ் சமுதாயம்
25. தென் ஆப்பிரிக்க சிவஞானசபை
26. திரன்சுவேல் தமிழ் கூட்டிணைக் கழகம்
27. வெய்பாய் தமிழ்ச் சங்கம்
28. ஸ்டாங்கர் செந்தமிழ் நிறுவனம்

டர்பனில் 1910-ஆம் ஆண்டு சைவசித்தாந்த சங்கத்தை அமைத்தவர் சிவ சுப்பிரமணி சுவாமிகள். இச்சங்கத்திற்கு 100 கிளைகள் உண்டு. தமிழ் பேசும் தமிழர்களால் அமைக்கப்பட்ட பெரிய அமைப்பு: 'தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகம்' என்பது தான். இப்போது எல்லா சங்கங்களையும் இணைத்து 'தேசிய தென்னாப்பிரிக்கத் தமிழர் பேரவை' உருவாக இருக்கிறது.

வணிகம்/தொழில் புரிவோர் விபரம்

1970 ஆம் ஆண்டுப் புள்ளி விபரப்படி 35.3 விழுக்காடு இந்தியத் தொழிலாளர்கள் ஆக்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். 28.4 விழுக்காட்டினர் வாணிபத்திலும்; 12.9 விழுக்காட்டினர் அரசுப் பணித்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். வாணிபப் பொறுப்பேற்புப் பணியில் இந்தியர்கள் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பது 1961-இல் 187 லிருந்து 1970-768 ஆக அதிகரித்துள்ளது. தொழில் துறையில் நேட்டால் மாநிலத்தில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை 1961-இல் 32,000 லிருந்து 1970 -இல் 67,000 ஆக அதிகரித்தது. இதுதவிர கடல், நில, வான் படைத்துறைகளிலும் காவல்துறைகளிலும், அஞ்சல் சார்ந்த துறைகளிலும் சட்டத்துறைகளிலும் தமிழர்கள் திறமையுடன் பணிபுரிகின்றனர்.


தொகுப்பு : ப. திருநாவுக்கரவு 




பார்வை நூல்கள் :
1. அயல் நாடுகளில் தமிழர் - எஸ். நாகராஜன்
2. Mr. K.M. Naidu. Fiar LMX, Aug 1974.
http://www.tamilsa.org/
http://scnc.ukzn.ac.za/

0 comments:

Post a Comment

 
Design by JP