தாய்லாந்தில் முன்பு ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் அறுவடை திருவிழாவாக திருவூசல் (ஊஞ்சல்) திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. தாய்லாந்து மக்களிடையே தீபாவளிப் பண்டிகை, கார்த்திகை விளக்கு வழிபாடு ஆகியன வழங்கி வருகிறது. கார்த்திகை மாதத்திலும் ஐப்பசி மாதத்திலும் வாழைத் தண்டை மிதக்க விட்டு, அதில் கொடி, காகிதக் குடை, புகை விளக்கு, பூ பொரி முதலியன வைத்து ஆற்றில் மிதக்க விடுவது தமிழ் நாட்டினரின் பழையதொரு வழக்கம். ஆற்றினைத் தாயாக வழிபடுவோர் இவ்வாறு வழிபடுவதை இன்றும் தமிழ்நாட்டில் காணலாம். வடநாட்டு கங்கையிலும் காணலாம்.
தாய்லாந்தில் அத்தகைய நீர்மாடங்கள் பற்பல விளக்குகளோடு கார்த்திகைத் திங்களில் மிதக்க விடப்படும். அரசர், முதலில் அணி செய்த படகொன்றை மிதக்க விடுவார். பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு அழகு வேலைப்பாடுகள் அமைந்த மிதவைகளை மிதக்க விடுவர். ஆற்றுவிழா, கடல்விழா, அறுவடை திருநாள் போன்ற ஆடல் பாடல் இசை விழாக்களோடு பதினெட்டாம் பெருக்கும் தாய்லாந்தில் கொண்டாடப்பட்டு வருவதிலிருந்து அந்நாட்டின் கலாச்சார விழாக்கள் தமிழர் மூலம் பரவியுள்ளன என்று தெரிகிறது.
தாய்லாந்தில் ஸ்ரீதேவ் என்ற இடத்தில் செங்கல்லால் கட்டிய ஒரு வைணவக் கோயில் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அங்கேயுள்ள அரண்மனைகளிலும் கோயில்களிலும் இந்து மதத்தைச் சார்ந்த வைணவமும் சைவமும் பரவியிருந்தன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பௌத்த மதம் பின்னர் பரவியபோது அது மேலோங்கியது. சைவ, வைணவ விக்கிரங்கள் பௌத்தர் கோயிலுக்குள் புகுத்தன. தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் திருமாலின் நின்ற கோலச்சிலை ஒன்று கிடைத்துள்ளது. அது பல்லவர் காலத்தில் (கி.பி 8-9 ஆம் நூற்றாண்டு) காஞ்சியில் செய்யப்பட்ட திருமாலின் திருமேனியைப் பெரிதும் ஒத்துள்ளது.
அங்குள்ள மற்றொரு இடிபாட்டின் தெற்குப் பகுதியில் புடைப்புச் சிற்பங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமாலின் கிடந்த கோலச் சிற்பமும், கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடிக்கும் அற்புதக் காட்டுச்சிற்பமும், கவர்ச்சிமிகு புடைப்புச் சிற்பங்களாக விளங்குகின்றன. இவை மாமல்லபுரத்துக் குடைவரைக் கோயில்களில் வீறுடன் விளங்கும் கல்லோவியங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. மாமல்லப்புரத்துச் சிற்பங்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றையொட்டி தாய்லாந்தின் சிற்பங்கள் அமைக்கப்பட்டிக்கலாம் என்பது சிம்மரின் கருத்தாகும்.
தாய்லாந்தில் சிவன், திருமால், பிரம்மா, உமை இலக்குமி முதலிய இந்து சமயத் தெய்வங்களின் வெண்கலச் சிலைகளும் கிடைத்துள்ளன. அவை நேர்த்தியும் கீர்த்தியும் வாய்ந்தவை. இவை சோழர் காலத்திய (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) கலைப்பாணிகள் நிறைந்தனவாக உள்ளன. மேலும், இன்று கூட, தாய்லாந்து அருங்காட்சியகத்தில் மிகுதியான சிவன், விஷ்ணு, கணேசர் சிலைகளைக் காணலாம். தாய்லாந்து நாட்டின் நுண்கலைகள் துறையில் (Fine Arts Deptt.) சிறப்பு அடையாளச் சின்னம் (emblem) கணேசர் ஆகும். சியாங் ரய்யில் ஒரு கணேசர் கோயில் இருக்கின்றது. பழைய தமிழ்க் கோயில்கள் சியாங்ரய், சியாங்மை, காஞ்சினபுரம், அயுத்யா, பாங்காக், பிகியூத் முதலிய பகுதிகளில் இருக்கின்றன.
பாங்காக்கில் உள்ள அரசருடைய கோயில் அழகு வாய்ந்தது. இதில் இராமாயணத்திலிருந்து பல காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்து சமயப் புராணக் கதைகள் தாய்லாந்து ஓவியர்களுக்கும் சிற்பிகளுக்கும் எண்ணற்ற கருப்பொருள்களை எளிதில் கொடுத்துதவின. திருமால் கருடன் மீது அமர்ந்துள்ள கோலத்தில் பல சிற்பங்களும் சிலைகளும் அங்கு கிடைத்துள்ளன. காளை அமர்ந்து விளங்கும் சிவபெருமான் மற்றும் இந்திரன், யமன் முதலிய தெய்வங்களின் சிலைகளும் கோயில்களை அணி செய்கின்றன. சிவபெருமான் தோள் மீது புத்தர் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புதுமையான சிலையும் புத்தர் கோயிலில் காணப்படுகிறது.
மகாமாரியம்மன் கோவில் :
தாய்லாந்தில் தமிழர் கட்டிய கோயில்கள் பல உள்ளன. அவை முன்னூறு ஆண்டு காலத்திற்கு உட்பட்டனவாகும். அவற்றுள் சில பெருஞ்சிறப்பும் பெருஞ்செல்வமும் வாய்ந்த கோயில்களாகும். பாங்காக் நகரில் வாழ்வோரில் தமிழர்கள் ஒரு முக்கியப் பிரிவினராக (8000 பேர்) இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்துக்குரிய தமிழ்க் கோயில் பாங்காக்கில் சிலாம் சாலையிலுள்ள மாரியம்மன் கோவிலாகும். வைத்தி படையாட்சி என்பவர் இக்கோயிலைக் கட்டினார். 1888 ஆண்டு இக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோவில் முன்கோபுர முகப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. "சிய்யாம் பெங்காக் 1888 யேப்பிரல் மாத செல்வ விநாயக மாரியம்மன் பாலதண்டாயுதபாணி கோவில் மண்டபம்...." சிங்கப்பூர் மகாமாரியம்மன் கோபுரம் எழுப்பிய தஞ்சைச் சிற்பி சிதம்பரநாதன் என்பவரே இதனையும் கட்டினார்.
முதலில் கரும்புத் தோட்டங்கள் இருந்த இடத்தில் ஒரு கூடார மண்டபத்தைக் (pavillion) கட்டினர். இதை மாரியம்மன் கூடார மண்டபம் என அழைத்தனர். அக்கூடார மண்டபத்தில் மாரியம்மனைப் பிரதிஷ்டைச் செய்தனர். இங்குத்தான் எல்லா இந்தியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் வந்து தொழுதனர். தமிழர் தொகை மிகுதியானவுடன் இவ்விடத்தில் இப்போதிருக்கும் இக் கோவிலைக் கட்டினார்.
1955 ஆம் ஆண்டில் இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. இக்கோயிலில் இருக்கும் முதற்கடவுள் மாரியம்மன் ஆகும். ஆனாலும் சிவன், பிரம்மா, முருகன், கணேசர், சைவ நாயன்மார் விக்கிரகங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐயனார், சப்தகன்னி, பேச்சாயி, அக்னி வீரன், பெரியாச்சி, மதுரை வீரன், காத்தவராயன் முதலிய சிறு தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. காத்தவராயனைக் காத்தலே என்று அழைக்கின்றனர். பலிபீடம் அருகில் சிவனுக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கு எதிரே இராஜகோபுரமும் அதன் வலப் புறம் பிரம்மா கோயிலும் இருக்கின்றன. தாய்மக்கள் சிவனைப் பிராசிவா என்றும் கணேசரைப் பிராபுக்னேட் (ஷ்) என்றும் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் தமிழ்ப்பண்டாரம் ஒருவர் இக்கோயிலின் அர்ச்சகராக இருந்தார். மலேசியாவிலுள்ள பினாங்கிலிருந்து வரவழைக்கப்பட்ட மூன்று குருக்கள் தற்சமயம் பணிபுரிகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பெரும்பான்மையான பக்தர்கள் தாய்மக்களும் žனர்களும் ஆவர். பக்தர்கள் பக்தியுடன் அளிக்கும் பணம் முதலிய காணிக்கை களிலிருந்து தான் இந்தக் கோயில் ஆதரவுப் பெற்றுக் காப்பாற்றப் படுகின்றது. வேறுபாடின்றி மாரியம்மன் கோவிலில் பலவகை புத்த உருவச் சிற்பங்களை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்களில் நவராத்திரி, சிவராத்திரித் திருவிழா ஒன்பது நாட்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. காவடித் தூக்கல், அலகு குத்தல், தேர் தூக்கல் போன்ற பல்வேறு தமிழ்நாட்டுச் சமய வழிபாட்டு முறைகள் இக்கோவில் திருவிழாவின் போது பின்பற்றப்படுகின்றன. தாய்மக்கள் மாரியம்மன் முன் விழுந்து வணங்குகிறார்கள். மலேசியாவிலிருந்து சிலர் இக்கோவிலுக்கு
வந்து போவதுண்டு.
1988 முதல் சுமார் 1000 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை பஜனை நடக்கின்றது. தேவாரம், திருவாசகம், வடமொழி சுலோகங்களால் அமைந்த பஜனைப் பாடல்கள் பல இந்திய மொழிகளில் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிப் பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்களையெல்லாம் தாய்மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து பஜனையில் பங்கு கொள்ள வரும் தாய்மக்களுக்கு வழங்குகின்றனர். கமலா என்பவர் தொடர்ந்து பலவருடங்களாக இப்பஜனையை நடத்துகின்றார். இவருக்குக் கண்தெரியாது. மேலும் இவர் பகவத் கீதை வகுப்பு ஒன்றையும் நடத்துகின்றார். கீதை அறிவு பரிமாற்ற மையம் (Gita knowledge Sharing Centre) எனும் மையத்தை இவர் நடத்துகின்றார். வட இந்தியர்களும் இவ்வகுப்புக்கு வருகின்றார்களாம்.
விஜயதசமி அன்று சூரசம்ஹாரம் பண்ணி, சாமி ஊர்வலம் வருகின்றது. இரதத்தில் கடவுள் விக்கிரங்களை வைத்து ஊர்வலம் வருகின்றனர். žனரும் தாய்மக்களும் இவ்விழாவில் மிகுதி யாகக் கலந்து கொள்கின்றனர். குறைந்தது 30,000 பேர் இவ்வூர் வலத்தில் கலந்து கொள்கின்றனர். கோயிலிலும், உற்சவ வீதியுலாவிலும் தமிழிலேயே வழிபாட்டு மந்திரங்கள் ஓதப் படுகின்றன.
கம்பராமாயணத்தின் செல்வாக்கு :
தாய்லாந்திலும் இராமாயணம் இருக்கின்றது. இது இராமாகீயான் என்ற பெயரில் இதிகாசமாகவும் காப்பியமாகவும் தாய்லாந்தில் தலைச்சிறந்து விளங்குகிறது. தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கங்களைத் தாய் இராமாயணத்திலும் பார்க்கலாம். வால்மீகி இராமாயணத்தை விட கம்பராமாயணத்தின் நெருங்கியத் தொடர்பையே தாய் இராமாயணத்தில் பார்க்கலாம். 21 நிகழ்வுகளில் தாய், தமிழ் இராமாயணங்களிடையே ஒப்புமை இருக்கின்றது. ஆனால் 22 நிகழ்வுகளில் தாய், வால்மீகி (சமஸ்கிருத) இராமாயணங்களிடையே வேறுபாடுகள் உள்ளன.
சோழர் காலத்தில் புத்த கோயில் சுற்று மண்டபங்களில் இராமணயக் காட்சிக்குரிய ஓவியங்கள் கம்பராமயணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதாய் கூறுகின்றனர். தாய்லாந்தில் வழங்கும் மீகாலாக்கதை மணிமேகலைக் கதையைத் தழுவியிருக்கிறது. மேலும் தாய்லாந்து மயில் இராவணன் கதைக்கும் தமிழ்நாட்டு மயில் இராவணன் கதைக்கும் மிகுதியான ஒப்புமை இருக்கின்றது. தாய்லாந்தியரின் கோன் (khon) நாட்டிய நாடகம் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்நாட்டிய நாடகம் தாய்லாந்தின் தேசிய நடனக்கலையாக உலகப் புகழைப்பெற்றுள்ளது. இதில் பெண்கள் இடம்பெற்று நடிப்பதில்லை. இந்நாடகத்திற்கு இசையே உயிராகக் கருதப்படுகிறது. இந்த நாட்டிய நாடகத்தைக் தொடங்குவதற்கு முன்னர் அரங்கில் நடராசர் சிலையை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்வது தாய்லாந்து நாடக அரங்குகளில் இன்றும் காணப்படும் நிகழ்ச்சியாகும். தாய்லாந்து பொம்மலாட்டக் கலையிலும் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளே சிறப்பிடம் பெறுகின்றன.
தமிழ் மொழி
தாய்லாந்து மக்கள் பேசும் தாய்-மொழியில் கிழமை, "வாரம்" என்று வழங்கப்படுகிறது. இந்திய, தமிழ் முறைப்படியே ஒரு வாரத்திற்குரிய ஏழுநாட்களின் பெயர்களும் வழங்கி வரு கின்றன. மற்றும் இன்றைய பேச்சு வழக்கில் தமிழில் வழங்கும் சொற்கள் தாய்-மொழியில் ஏராளமாகத் திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டுகள் கீழ் வருமாறு :
தமிழ் மொழி தாய்-மொழி
தமிழ் மொழி > தாய்-மொழி
1. தங்கம் தொங்கம்
2. கப்பல் கம்பன்
3. மாலை மாலே
4. கிராம்பு கிலாம்பு
5. கிண்டி கெண்டி
6. அப்பா பா
7. தாத்தா தா
8. அம்மா மே, தான்தா
9. குரு க்ரு
10. ஆசிரியர் ஆசான்
11. பாட்டன் பா, புட்டன்
12. பிள்ளை புத், புத்ரா
13. வீதி வீதி
14. மூக்கு சாமுக்
15. நெற்றி நெத்தர்
16. கை கை
17. கால் கா
18. பால் பன்
19. சாதி சாத்
20. தொலைபேசி தொரசாப்
21. தொலைக்காட்சி தொரதாட்
22. குலம் குல்
23. நங்கை நங்
24. துவரை துவா
25. சிற்பம் சில்பா
26. நாழிகை நாளிகா
27. வானரம் வானரா
28. வேளை வேளா(Time)
29. மல்லி மல்லி
30. நெய் நெய்யி
31. கருணை கருணா
32. விநாடி விநாடி
33. பேய்/பிசாசு பிச/பிசாத்
34. கணம் கணா(Moment)
35. விதி விதி
36. போய் பாய்
37. சந்திரன் சாந்
38. ரோகம் ரூகி
39. தூக்கு தூக்
40. மாங்க் மாங்காய்
41. மேகம் மேக்,மீக்
42. பிரான், எம்பிரான் பிரா
43. யோனி யூனி
44. சிந்தனை சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு சான்க்
46. தானம் தார்ன்
47. பிரேதம் பிரீதி
48. நகரம் நகான்
49. பார்வை பார்வே
50. ஆதித்தன் ஆதித்
51. உலகம் லூகா
52. மரியாதை மார-யார்ட்
53. தாது(Elements) தாட்
54. உலோகம் லூகா
55. குரோதம் குரோதீ
56. சாமி சாமி (Husband)
57. பார்யாள் பார்யா (wife)
58. திருவெம்பாவை த்ரீயம்பவாய்
59. திருப்பாவை திரிபவாய்
60. கங்கை கோங்கா
61. பட்டணம் பட்டோம்
62. ராஜா ராஜ்
63. ராணி ராணி
64. தர்மசாத்திரம் தம்மசாட்
மேலே குறிப்பிட்ட சொற்களில் தமிழில் இடம்பெறும் சில திராவிட சமஸ்கிருத மொழிச் சொற்களும் உள்ளன. இவைதவிர தமிழ்நாட்டு மக்கள் இன்றும் கூட பொதுவாக சூடிக்கொள்ளும் பெயர்கள் தாய்லாந்திலும் வழங்கப்படுகின்றன. இருண், வசந்தா, ரத்னாவலி, மணி, காஞ்சனா, மாலவிகா, சக்தி, வாசுதேவ், பத்மாவதி, பிரியா, மான்சூலா, புசுபா, சாந்தி, சுசிலா, வருணி, அருணி, குமார், சூர்யா, சந்திரா, ஸ்வர்ணா, ராசன், லக்ஷ்மி, மீனா, சுரேஷ், ரமேஷ், பிரேமா, சம்பா, கருணா, ராதா, கிருஷ்ணா, மனோஹர், சுகன்யா, பிரசாத் போன்ற தமிழ்ப் பெயர்களை தாய்லாந்து மக்கள் சூடி வருகிறார்கள். பல்லவ, சோழப் பண்பாட்டுத்தாக்கம், தமிழ் மொழித்தாக்கம், தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் தாய்லாந்தில் ஆட்கொண்டிருந்ததால் இத்தமிழ்நாட்டுப் பெயர்கள் தாய்லாந்தில் பரவலாக வழங்கி வருகின்றன.
தாய்லாந்தில் உள்ளூர் பெண்கள் ஆடும் நடனங்கள், மேஜிக் ஷோ, சர்க்கஸ் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. சிங்கப்பூர் வழியாகப் புதிதாக வரும் வீடியோ தமிழ்ப்படங்கள் 100 அல்லது 150 நாட்களுக்குள் தாய்லாந்துக்கு வருகின்றன. எல்லோரும் தமிழ்ப்படம் மட்டும் விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு தனிப்பட்ட ஹ“ரோ அல்லது ஹ“ரோயின் வழிபாடு கிடையாது. தனித்தமிழர் மன்றம் இல்லை. தமிழ் அச்சகம் கிடையாது. குமுதம், மங்கையர் மலர், சுமங்கலி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், தராசு, தினமணி, முதலிய தமிழ் இதழ்கள் சிங்கப்பூர் வழியாக வந்து தாய்லாந்தில் கிடைக்கின்றன.
தமிழர் சாதனை
இன்று தாய்லாந்து நாட்டிற்குப் போனால் அங்குத் தாய்லாந்து மக்கள் வாழ்க்கையில் தமிழ் பண்பாட்டின் தாக்கத்தை ஓரளவு மகிழ்ச்சியுடன் காணலாம். 15,16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் தாய்லாந்துடன் வாணிப உறவு வைத்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத் தமிழர்களே முதன்முதலில் பாங்காக்கில் வைரம் முதலிய கல் வணிகம் தொடங்கினர். 1830 இல் குடியேறிய தமிழர் பலர் தமிழையும் தமிழ்ப் பெண்களையும் மறந்து வாழ்கின்றனர். தாய்லாந்தில் பல ஊர்களின் பெயர்கள் தமிழ்நாட்டுப் பெயர்களைத் தழுவியிருக்கின்றன.
உதாரணம் காஞ்சினபுரம், பத்தேயா, சகுந்தா, ஆரணியபிரதாப், சிதம்பராத், ராஜசிம்மா, சோழலங்காரா, பட்டாணி, ராமா, சூரதாணி, சாந்தபுரி, பதம்புரி, நந்தபுரி முதலியன. இந்த ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களும் புதைபொருள்களும் கல்வெட்டுகளும் தமிழர்-தாய்லாந்து உறவைப்பற்றி மேலும் பல செய்திகளை அளிக்கலாம். தாய்லாந்தில் ஜப்பானியர் ஆட்சி நடந்தபோது மரண இரயில்வே பாலம் அமைக்க 10000 தமிழர்கள் சென்றார்கள். மோல்மினுக்கும் மேற்குத் தாய்லாந்து பகுதியான காஞ்சனபுரிக்கும் இடையில் இந்நாடுகளை இணைக்கும் 428 கி.மீ நீளமுள்ள இப்பாலம் 1948 இல் கைவிடப்பட்டது. இருந்தாலும் தற்காலத்திய தமிழர்கள் எழுப்பிய நினைவுச் சின்னமாய் இன்று தாய்லாந்தில் இருக்கின்றது. தாய்லாந்து தமிழர்களுக்கான சியாங்ராய்மணியம் என்பவர் தாய்-தமிழ் அகராதி ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.
வணிகம்/தொழில்
பாங்காக்கில் சிலம் ரோட்டில் தமிழ் முஸ்லீமான சதார் என்பவரின் 'சென்னை உணவகம்' இயங்குகிறது. சதார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ’ன் படையில் சேர்ந்து இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றவர். இவரது சென்னை உணவகத்தில் தமிழ்நாட்டு உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. சியாம் சாலையில் மற்றொரு தமிழ் முஸ்லீம் தமிழ்நாடு ரெஸ்டாரெண்டு என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பாங்காக் சுகம் விட் சாலையிலுள்ள பாங்காக் பிரிந்தாவன் ஓட்டலில் தென் இந்திய உணவு கிடைக்கிறது.
தமிழரைச் தவிர பிற இந்தியரும் தாய்லாந்தில் இருக்கின்றனர். சுமார் 30,000 பிற இந்தியர் வசிக்கின்றனர். பெரும்பான்மையோர் žக்கியர். அவர்களுக்கு அடுத்ததாகப் பிற வட இந்தியர் இருக்கின்றனர். இவர்களில் ஏராளமானோர் பாங்காக் பவுரத் பகுதியில் வாழ்கின்றனர். இப்பகுதி துணி வணிகத் தலமாக விளங்குகிறது. பிற இந்தியர் பெரும்பாலும் தங்கள் நாட்டுப் பெண்களையே திருமணம் செய்து கொள்கின்றனர். ஹோலி, தீபாவளி பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் வாழும் பவுரத்தில் வாட்தான் நியூ ரோட்டில் விஷ்ணு கோயில் இருக்கின்றது. வட இந்தியர்களுக்கான இக்கோவிலுக்குத் தமிழர்களும் சென்று வருகிறார்கள்.
தொகுப்பு : ஜெ. சாந்தாராம்.
கட்டுரைக்கு உதவிய நூல்கள் :
1. தாய்லாந்தில் தமிழ்பண்பாட்டுக் கூறுகள் - முனைவர் எஸ். நாகராஜன் (1993)
2. தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ்ப்பண்பாடு - டாக்டர் க.த. திருநாவுக்கரசு (1987)
3. அயல்நாடுகளில் தமிழர் (1989).ராஜன் (1993)
2. தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ்ப்பண்பாடு - டாக்டர் க.த. திருநாவுக்கரசு (1987)
3. அயல்நாடுகளில் தமிழர் (1989).
0 comments:
Post a Comment