Thursday, August 11, 2011

இரீயூனியனில் தமிழர்கள் -Tamils in Reunion - ஜெ. சாந்தாராம்.

0


பிரெஞ்சுத் தமிழ்க் குடியேற்ற நாடுகளான 27 தீவுகளில் ஒன்று ரீயூனியன். இத்தீவைத் தமிழில் ரீயூனியோன் என்றும் அழைக்கிறார் கள். இந்துமாக்கடலில் புவி மையக் கோட்டிற்குத் தெற்கே மடகாஸ்கர் தீவுக்கும் மொரீசியஸ் தீவுக்குமிடையில் உள்ள தீவே ரீயூனியன் (Reunion) ஆகும். மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ தொலைவிலும் மொரீசியஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ தொலைவிலும் ரீயூனியன் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 2510 ச.கி.மீ ஆகும். இத்தீவு மொரீசியஸை விடச் சற்றுப் பெரியது. இதன் தலைநகரம் செயிண்ட் டெனிஸ். இத்தீவு முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலில் வெடித்து உண்டான ஒரு பெரிய எரிமலை கக்கிய குழம்பால் உருவானது. எங்குப் பார்த்தாலும் மலைகளும் ஆறுகளும் பல்வகைத் தாவர இனங்களுமாய் இத்தீவு நெஞ்சையள்ளும் அழகுடன் திகழ்கிறது. ரீயூனியன் தீவு தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் கடல்கடந்த ஓர் அங்க நாடாக (French Overseas Department) விளங்குகிறது.

ரீயூனியனில் 18 ஆம் நூற்றாண்டில் 1797 ஆம் ஆண்டளவில் இருந்த மொத்த மக்கள்தொகை 56,800. வெள்ளையர்கள் 10,400; உரிமை பெற்ற மனிதர்கள் 1,600; அடிமைகள் 44,800 ஆகும். 1850 ஆம் ஆண்டளவில் ரீயூனியனில் இருந்த மொத்த மக்கள் தொகை 1,10,891 ஆகும். தமிழர்களும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே குடியேறி யிருந்தார்கள். இன்று ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை சுமார் ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு லட்சம் பேர் தமிழர்கள். இத்தீவு மண்வளமும் மழைவளமும் மிக்கது. இங்கே கோடையும் குளிருமாகிய இரண்டு பருவங்களே உண்டு. அதிகக் குளிரும் அதிக வெப்பமும் இல்லாத மிதமான தட்ப வெப்ப நிலையே என்றும் நிலவுவதாலும் சுற்றிலும் கடல் சூழ்ந்திருப்பதாலும் மலைகளிலிருந்து பல்வகை மூலிகைகளின் மணம் எப்போதும் வீசுவதாலும், ஆங்காங்கே தாதுப்பொருட்கள் கலந்த நீரூற்றுகள் சுரந்து பாய்வதாலும் இந்தத் தீவானது மக்களின் நல்வாழ்வுக்கு இயற்கைத் தாய் அமைத்துக் கொடுத்த சுகாதார நிலையம் என்று போற்றப்படுகிறது. 

இத்தீவு கி.பி. 1520 இல் போர்த்துக்கீசிய மாலுமியால் கண்டுபிடிக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது. பிறகு ஆங்கிலேயர் கையிலும் பிரெஞ்சுக்காரர் கையிலும் சிற்சில காலம் மாறிமாறியிருந்து கடைசியாக 1816 இலிருந்து பிரெஞ்சுக்காரர் கையில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. பண்டைத் தமிழர்கள் இந்துமாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்ற போது இத்தீவைப் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழர்களோ பிற இந்தியர்களோ 17 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுக்குச் சென்று குடியேறியதாகச் சான்றுகள் கிடையாது. 

ரீயூனியன் தீவை ஆரம்பத்தில் பண்படுத்த வேலையாட்கள் தேவையாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு வெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவின் காப்பிரி மக்களையும் மடகாஸ்கரின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்து ரீயூனியனில் கரும்பு, சோளம், மணிலா முதலியவற்றைப் பயிரிட்டனர். சர்க்கரை ஆலைகளிலும் அவர்களை வேலை வாங்கினார்கள். 1848 இல் பிரெஞ்சுப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால், வெள்ளை முதலாளிகள் வேறு வழியின்றித் தங்கள் அடிமைகளை விடுதலை செய்து விட வேண்டியதாயிற்று. எதிர்பாராத இந்த விளைவினால் இத்தீவின் பொருளாதார முதுகெலும்பே ஒடிந்து போய்விட்டதாக 1850 இல் இங்குப் பிரயாணம் செய்த ஆங்கிலேயர் ஃபிரடரிக் என்பவர் தம் ரீயூனியப் பயண நூலில் குறிப்பிடுகிறார். 

கரும்புச் சாகுபடியை வெகுவாகப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வெள்ளை முதலாளிகளை இந்த அடிமையொழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்து விட்டது. அதனால் உடனே இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களிலிருந்தும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழர்களை பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனியாட்சி பலத்துடன் ரீயூனியனுக்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். ஆனால் 1828க்கு முன்னமேயே சில இந்தியர்கள் கோவா பக்கத்திலிருந்து (மலையாள கரையோரம்) அடிமைகளாகவே வந்திருந்தனர் என்று தெரிகிறது. 1828 இல் ஆந்திராவிலிருந்தும் 15 பேர் வந்தனர் என்னும் குறிப்புகள் உள்ளன. 

இவ்வாறாக 1848க்கு முன் இங்கிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் 4200 தான். இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவ்வெல்லாரையுமே வெள்ளைத் துரைமார்கள் தமிழர்கள் என்றே பொதுவாகக் குறிப்பிட்டனர். அதற்குக் காரணம் அந்தக் காலத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய இரு பிரெஞ்சிந்திய வட்டாரங்களிலிருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிகப் பெரும்பான்மையினர். அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் வேலை செய்தனர். அவர்களே முதலாளிகளின் வீடுகளில் சமையல்காரர்களாகவும், மெய்க்காவல்காரர்களாகவும் வேலைகளை மேற்பார்க்கும் மேஸ்திரிகளாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். 

இப்படியாக வந்தவர்களில் மிகச்சிலரே தங்கள் ஒப்பந்தம் முடிந்து தாயகம் திரும்பினர். ஏனையோர் இங்கேயே தங்கி விட்டனர். அதற்கு முக்கிய காரணம் இங்கேயே தொடர்ந்து வசிப்பவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாவர் என்ற அரசாங்க சட்டமும், சாதீய வேறுபாட்டுத் தாழ்வுணர்ச்சியின்றி எல்லோரும் சமமாக வாழும் சமரச வாழ்க்கை முறையும், வேலை நிச்சயமும், கூலி நிச்சயமும் ஆகும்.

1946 வரையில் பிரெஞ்சுக் காலனியாக இருந்து வந்த இத்தீவு 1947 இல் 'பிரெஞ்சு நாட்டின் கடல் கடந்த அங்க நாடு' என்று சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று முதல் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு என்னென்ன குடியுரிமையுண்டோ அத்தனையுரிமைகளையும் இங்குள்ள யாவரும் பெற்றுப் பிரெஞ்சுக் காரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இங்கு வெள்ளையினக் கிரியோல், தமிழர், ஆப்பிரிக்க நாட்டுக் காப்பிரியர்கள், மலகாஷ், கொமோர் தீவுகளின் மக்கள், žனர்கள், வியாபாரம் நிமித்தம் கடைசியாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த இந்திய குஜராத்தி முஸ்லீம்கள் ஆகிய பல இனத்தவரும் அமைதியாக 
வாழ்ந்து வருகிறார்கள். 

தமிழரின் இன்றைய நிலை 

சமயம் : 

இடைக்காலத்தில் ரீயூனியன் தமிழரின் திருமணம், சவ அடக்கம் ஆகிய சடங்குகள் கிறித்துவ முறையில் நடந்தது குறைந்து இப்பொழுதெல்லாம் இந்து சமய முறைப்படி நடப்பது பெருகி வளர்ந்து வருகின்றது. பெற்றோர் மணம் பேசுவதென்பதில்லை. பெண்ணும் பிள்ளையும் சந்தித்துப் பழகிய பிறகு, பெற்றோருக்கு அறிமுகமாகிப் பின்னரே இரு வீட்டினரும் இணைந்து திருமணம் முடித்து வைக்கின்றனர். வரதட்சிணை முறை இங்கில்லை. திருமணச் செலவை இரு வீட்டாரும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். 

பிறந்த குழந்தைக்கு உரிய காலத்தில் முடியிறக்கித் தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கமாய் உள்ளது. ஆனால், காதுகுத்துதல் வழக்கொழிந்து விட்டது. இறந்தவர்களைக் கல்லறையில் அடக்கம் செய்வதே பின்பற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோயிலுண்டு. சிவன், முருகன், காளிக் கோயில்கள் அதிகமுண்டு. தலைநகரமான செயிண்ட் பியரி (Saint Andre) முதலிய இடங்களில் முருகன் கோயில்கள் இருக்கின்றன. சிவ, திருமால் கோயில்களில் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குருக்கள் பணியாற்றுகின்றனர். 1980 இல் மொரீசியஸ் தமிழ் மொழி விழிப்புக்குப் பின் சில தமிழ்ப் பண்டாரங்கள் ரீயூனியன் கோயில் களில் தமிழில், வடமொழியில் அர்ச்சனை செய்கிறார்கள். அதற்கு முன்பு பிரெஞ்சு மொழிதான் இத்தீவில் உள்ள தமிழர்கள் கோயில்களின் ஆட்சிமொழி. 

ரீயூனியன் தமிழர்களிடையே பெரும்பாலும் கிராமத் தேவதை வழிபாடே அதிகமாகக் காணப்படுகிறது. டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் திரௌபதையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. பெண்கள் தீக்குழியினைச் சுற்றி வலம் வருவதோடுசரி; தீ மிதிப்பதில்லை. மாரியம்மனுக்கு மே, சூன் மாதங்களில் கஞ்சி ஊற்றுத் திருவிழா நடைபெறுகின்றது. காளியம்மனுக்கு டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் ஆட்டுக்கடா, கோழி முதலியன பலி தந்து விழா கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாக்கள் பத்து நாட்களுக்குக் குறையாமல் கொண்டாடப்படுகின்றன. பொதுக் கோயில்கள் மட்டுமல்லாமல், கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் தோட்டத்திலும் காளி, மாரி, முனி, வீரன், கருப்பு முதலிய தேவதைகளுக்குச் சிறு கோயில்கள் எழுப்பி மாதந்தோறும் வழிபாடு செய்து வருகின்றனர். இது இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற சுவாமி அறை பூசையை ஒத்திருக்கின்றது.

நகரங்களில் உள்ள சிவசுப்ரமணியர், பெருமாள் ஆகிய தெய்வங்களின் கோயில்களில் ஆண்டுதோறும் பத்துநாள் உற்சவம் நடைபெறுகின்றது. அப்போது ஏராளமான மக்கள் நாள்தோறும் கோயிலுக்கு வந்து வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். முருகன் கோயிலாக இருந்தால் புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பெரிய அளவில் விழாவெடுத்துக் கோவிந்தனை வழிபடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியையும் இரவு முழுவதும் கண்விழித்து அவனது வரலாற்றினைப் பக்தியுடன் கேட்டு மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். திருவிழாக்களின் போது சாமி ஊர்வலமும், சக்தி கரக ஆட்டங்களும், அலகு குத்தி ஆடுவதும் சிறப்பாக நடைபெறும். ஊர்வலத்தின் போது பக்தர்கள் வீடுதோறும் தீபாரதனை செய்வார்கள். 

தமிழ்க் கிறித்துவர்கள் நீண்ட கவுன்களும் மேக்சிகளும் அணிந்து வந்து இந்துக் கோயில்களில் தவறாமல் வழிபடுகிறார்கள். ரீயூனியன் தமிழர்கள் தைப் பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப்பிறப்பு ஆகியவற்றை கோயிலில் கொண்டாடுகின்றனர். இந்நாட்களில் சூரியனுக்குச் சிறப்பான பூசைகள் நடக்கின்றன. பிரதி வருடமும் சூலை 14, நவம்பர் 11, டிசம்பர் 20 ஆகிய நாட்கள் தேசிய விழா நாட்களாக அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. 

தொழில்: 

தமிழர்கள் அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். கரும்பு தோட்ட வேலை, கட்டிடக் காண்டராக்ட், சாலைக் காண்ட்ராக்ட், பஸ், லாரி போக்குவரத்து ஆகியவற்றிலும், சிமெண்டு உற்பத்தித் தொழிற்சாலை, கருங்கல் ஜல்லி தயாரிப்புத் தொழிற்சாலை முதலியவற்றிலும் தமிழர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். முஸ்லீம் களும் žனர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது போலத் தமிழர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாப் பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்வதைக் காட்டிலும், வெளியிலிருந்து தருவிக்கப்படுவது மிகவும் விலை சகாயமாக அமைவதால், இங்குப் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதில் போதிய அக்கறையோ அவசியமோ இது வரையிலும் ஏற்படவில்லை. 

சர்க்கரை ஆலைகள் மட்டும் நவீன மயமாக்கப்பட்டுப் பெரிய அளவில் நடந்து வருகின்றன. சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழர்களில் 28 சதவீததினர் அரசியல், தொழில், வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர். வெட்டிவேர், வன்னிலா, ஜெரானியம் போன்ற வாசனைப் பயிர்த் தொழில் வளர்ச்சிக்கும், கைவினைப் பொருள் உற்பத்திக்கும், பேரளவு தேன் உற்பத்திக்கும், மீன் பிடிப்பிற்கும் அரசாங்கம் பெருமளவில் உதவி புரிகிறது. பிரான்ஸ’லே படித்த பிரெஞ்சு மொழி பேசும் படித்த தமிழர்கள் மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர் களாகவும் பணிபுரிகின்றனர். 

வாழ்க்கைத்தரம் : 

1947இல் இத்தீவு பிரான்சின் அங்க நாடாக மாறியதிலிருந்து இங்குள்ளோரின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அத்தனைச் சலுகைச் சட்டங்களும் இங்கும் அப்படியே நடைமுறைக்கு வருவதால் இதனைச் சுற்றிலும் உள்ள நாடுகளின் வாழ்க்கைத் தரத்தைக் காட்டிலும் ரீயூனியன் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இங்குக் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமே நாலாயிரம் பிராங் (சுமார் 7500 ரூபாய்). வேலை செய்யும் அத்தனை பேரும் கார் வைத்திருக்கின்றனர். உலகிலேயே அதிக விகிதத்தில் கார் விற்பனையாகும் இரண்டாவது இடம் ரீயூனியன்தான். சட்ட மன்றங்களில் தமிழர்களில் சிலர் அங்கம் வகிக்கின்றனர். பிரான்சில் உள்ள சட்ட மன்றங்களிலும் தமிழர்கள் சிலர் அங்கம் வகிக்கின்றனர்.

இங்கு ஏறக்குறைய எல்லோர் வீடுகளிலும், தொலைக்காட்சியும் தொலைபேசியும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். வேலையற்றிருக்கும் படித்த இளைஞர்கள் முதல் தளர்ந்து விட்ட முதியோர் வரை, குடிமக்களுக்கு அரசாங்கம் பல வகையிலும் உதவித் தொகை அளிப்பதால் வறுமையென்பதற்கே இங்கு இடமில்லை. அருகிலுள்ள மொரீசியஸ் தீவைவிட இங்கு வாழ்க்கைத்தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

உணவு : 

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தாம் அண்மை சில ஆண்டுகளாக உணவில் சைவமாக இருக்கின்றனர். மற்றையோர் அனைவரும் அசைவ உணவுப் பழக்கமுடையவர்களே. தமிழர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. பெரும்பாலான தமிழ்நாட்டுப் பலகாரங்கள் இங்கு மறந்து போய் விட்டன. ரொட்டியும் வெண்ணெயும் காலைச் சிற்றுண்டி. பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டு உணவுப் பழக்க வழக்கங்களே இங்கு அதிகம் இடம் பெறுகின்றன. கோயில் திருவிழாக்களின் போதும், மதச் சடங்குகள், வீட்டுப் பண்டிகைகளின் போதும் ஓரளவு தமிழ்ச் சமையல் முறை கையாளப்படுகிறது. 

உடை : 
இங்குள்ள தமிழர்கள் பொதுவாக மேலை நாட்டுப் பாணியிலேயே உடையணிகின்றனர். இந்துக் கோயில் திருவிழாக்களிலும், தமிழ்ச் சமய திருமணச் சடங்குகளிலும் ஆர்வமுள்ள இளைஞர் பலர் வேட்டி, சட்டை அல்லது ஜிப்பா அணிந்தும், பெண்களில் பலர் புடவை, ரவிக்கை அணிந்தும் தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்து கின்றனர். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, விரதம், தீமிதிப்பு முதலிய விழா நாட்களின் போது பெண்கள் புடவையும் நகைகளும் அணிந்து கொள்கிறார்கள். 

வீடு : 

சிறிய வீடாக இருந்தாலும், அதனைச் சுற்றி அழகிய பூந்தோட்டம் அமைத்துப் பராமரிப்பதிலும், வரவேற்பு அறையினைப் பூஞ்சாடிகளால் அலங்கரிப்பதிலும், வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதிலும் இவர்கள் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். வார விடுமுறை நாட்களைக் குடும்பத்துடன் இயற்கை காட்சிகள் நிறைந்த வெளியிடங்களுக்குச் சென்று, உண்டு, களித்து ஓய்வெடுப்பதன் மூலம் கழிக்கின்றனர். 

தமிழின் நிலை 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடியேறியத் தமிழர்கள் பிரெஞ்சு முதலாளிகளின் நம்பிக்கைப் பெற்றவர்களாகப் பணிபுரிந்த போது, ரீயூனியன் எங்கும் தமிழ்மயமாக இருந்து, தமிழர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நிமித்தம் பிறந்ததே கிரியோல் (Creole) என்னும் கொச்சை மொழி. இம்மொழியில் சொற்கள் பிரெஞ்சுச் சொற்களாகவும் கருத்து வெளியீடு தமிழ் முறையாகவும் இருப்பதால் இந்தக் கிரியோல் அன்றைய தமிழ்மக்களின் படைப்பேயாகும்.

இப்போது உள்ள ரீயூனியன் தமிழர்கள் தமிழை மறந்து விட்டனர். அனைவரும் கிரியோல் மொழியே பேசுகின்றனர். கிரியோல் மொழி ரீயூனியனின் தேசிய மொழியாக விளங்குகிறது. படித்தவர்கள் மட்டுமே பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். பிரெஞ்சு மொழி பணித்துறை, அலுவலக மொழியாக விளங்குகிறது. பொதுவாக 100க்கு 95 தமிழர்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. பாரீஸ்-புதுவை தொடர்புள்ள ஒரு சிலர் தமிழ் பேசுகின்றனர்.

இன்றைய ரீயூனியன் தமிழர்கள் கல்வியில் முதன்மையிடம் வகிக்கிறார்கள். மருத்துவர்கள், சட்ட மேதைகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்று எல்லா நிலையிலும் இவர்கள் உயர்ந்து விளங்குகிறார்கள். கல்வித் துறை முதல் மற்றெல்லாத் துறைகளிலும் தமிழர்கள் தங்கள் கல்வித் திறமையால் மேன்மை வகிக்கிறார்கள். இங்கு இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பதினெட்டு வயது வரை பிள்ளைகள் அனைவரும் பள்ளி செல்ல வேண்டும். இல்லையேல் பெற்றோர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும். 

இங்கு பிரெஞ்சு மொழியே பயிற்று மொழி. இதையடுத்து ஆங்கிலமும், ஏதாவதொரு ஐரோப்பிய மொழியும் (ஜெர்மன், ஸ்பானிஷ்) கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய மொழிகளாகும். அண்மை காலமாகத் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் செயின்ட் ஆண்டிரி (Saint Andre) யிலுள்ள மூன்று உயர்நிலைப் பள்ளிகளிலும், அவற்றுடன் இணைந்து செயல்படும் செயின்ட் பனுவா (Saint Benoit) விலுள்ள ஒரு கல்லூரியிலும் விருப்பப் பாடமாகத் தமிழ் கற்பிக்கப்
படுகிறது. இதுவன்றி, பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாகிய Institute of Linguistics and Anthropology இல் பதினெட்டுவயது மேற்பட்டோருக்குத் தமிழ் போதிக்கப்படுகிறது. இதனால் ரீயூனியனில் தமிழின் நிலை மேம்பட்டு வருகிறது. பிரெஞ்சு மொழியில் பேராசிரியராக வளர்ந்துள்ள திரு.வி.தேவக்குமாரன் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் பிரெஞ்சுப் பாடநூல் எழுதிப் படிப்பிக்கச் செய்தார். அவர் எழுதிய நூலின் பெயர் IJ 'appreds le tamoul ஆகும். அவர் ஓர் தமிழாசிரியர். ரீயூனியனில் தமிழ் கற்பித்த முதல் தமிழாசிரியர் மொரீசியஸைச் சேர்ந்த திரு. சங்கிலி (Sangeelee) என்பவர் ஆவார். பிரெஞ்சு மூலம் தமிழ் படிக்க, பாலர் பாடநூல் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.

பாலர் பயிற்சிக் கூடம் முதல் மேல்நிலைக் கல்லூரி வரையில் கல்வி இலவசமே. மாணவர்க்கு மதிய உணவும், போக்குவரத்து வசதியும் இலவசம். ஊக்கத் தொகையும் குடும்ப வருமானத்திற் கேற்ப அளிக்கப்படுகிறது. அனைத்து வித பட்டப்படிப்பும், மேல்நிலை பட்டப்படிப்பும், தொழில் நுட்பக் கல்வியும் பெறுவதற்குரிய கல்வி நிலையங்கள் இங்கேயே உள்ளன. இவற்றிற்கு மேல்பட்ட கலைத் திறக்கல்விக்கும், அறிவியல் மற்றும் பொறியியல் உயர்நுட்பக் கல்விக்கும், மருத்துவப் படிப்பிற்கும், மேல்நிலைச் சட்டக் கலைத் திறக் கல்விக்கும்தான் பிரான்சுக்குச் செல்ல வேண்டும். பட்டப்படிப்பு வரை ஆண்டுதோறும் வடிகட்டும் தேர்வுமுறை இங்கில்லை. மாணவர் தம் தரத்திற்கேற்ப தொழில் கற்க அவர்களுக்குக் கல்வி நிலையத்தால் வழிகாட்டப்படுகின்றது. 

பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் உரிய பயிற்சியளிக்கும் கூடங்கள் ஆங்காங்கே உள்ளன. ஒரு வகுப்பில் எந்த நிலையிலும் இருபத்து நான்கு மாணவர்களுக்கு மேல் சேர்க்கப்படுவதில்லை. பயிற்று முறையில் ஒலி, ஒளிப் பொறிகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. மற்றும் தொலைக்காட்சி, ஒலி, ஒளிப் பதிவு நாடாக்கள், பஜனைப் பாராயணம், கோயில் ஆகியவற்றிலும் தமிழைப் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். 

மறந்த தமிழை மீண்டும் மலரச் செய்யும் வாய்ப்புகளும் எண்ணமும் ரீயூனியன் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கி இருக்கிறது. தமிழ் மொழி மீதான ஆர்வம் இதன் மூலம், குறிப்பாக இளம்பரம்பரை யினரிடையே மேலும் வளர்ச்சியடைய சூழ்நிலை உருவாகி யிருக்கின்றது. தமிழ்ப் பண்பாட்டையும் ரீயூனியன் தமிழர்கள் முற்றிலும் இழக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் போது தமிழ் இந்துப் பெயர்களையே வைக்கிறார்கள். அரங்கசாமி, இராமாசாமி, கிருட்டிணன், இராமன், முருகன், கணேசன் என்றப் பெயர்களை எங்கும் கேட்கலாம். காத்தாயி, முருவாய், இராமாய், மீனாட்சி, மீனா, மைனாவதி, காமாட்சி போன்ற பெயர்களும் அதிகமாக உள்ளன. பெரும்பாலோருக்கு தமிழ்ப் பெயர்களோடு கிறித்துவப் பெயர்களும் (First Name) உண்டு. உதாரணமாக பிலிப் இராமன் (Philip Raman).

ரீயூனியன் சட்ட மன்றத்தில் சில தமிழர் இருக்கின்றனர். சம உடைமைக்கட்சி, தொழிற்கட்சிகளில் பெரும்பான்மை தமிழர்கள் அங்கம் வகிக்கிறார்கள். பிரான்சின் அங்க நாட்டுக்கான நாடாளு மன்றத்தின் ரீயூனியன் பகுதிக்கு உரிய ஐந்து உறுப்பினர்களில் (Five deputies) ஒருவர் தமிழர்; இவர் பெயர் வீராப்பாபிள்ளை. இவருக்குத் தமிழ் தெரியாது. மேலும் ரீயூனியனிலிருந்து செல்லும் மூன்று சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் (Senators) இருவர் தமிழர்கள். 

தகவல் தொடர்பு சாதனங்கள்

1965 ஆம் ஆண்டு ரெனிகிசனின் (Rene Kichenin) எனும் வழக்குரைஞர் 'திரிடென்ட்' (Trident) என்ற நாளேட்டை வெளியிட்டார். இவ்வேட்டின் நோக்கம் தமிழ் மொழியை தமிழ்ப்பண்பாட்டை மேம்படுத்துவதாகும். 1968 ஆம் ஆண்டு இளைஞர்களுடன் இணைந்து தமிழ் கிளப் (Club Tamoul) ஒன்றை அமைத்தார். 1977க்கு முன் தமுல் (Tamil) என்ற பிரெஞ்சு மொழி ஏடு வெளிவந்துக் கொண்டிருந்தது. 1980 இலிருந்த பிரசென்ஸ் (Presence) என்ற பிரெஞ்சு ஏடு தமிழர்களைப் பற்றியும், தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், சமயம், பண்டிகை போன்ற வற்றைப் பற்றி முக்கியக் கட்டுரைகளையும், முக்கியத் திருவிழாக் களின் அட்டவணைகளைப் பற்றியும் எழுதி வெளியிடுகின்றது. 1975-1982 ஆம் ஆண்டுகளிடையே இவ்விரண்டு செய்தி ஏடுகளும் வெளியிடப்பட்டன. தினந்தோறும் 'ஒளி' என்ற தமிழ் ஏடு அச்சாகி விற்கப்படுகின்றது. இந்த ஏட்டின் முகப்பில் தில்லை நடராசர் நாட்டியச் சின்னமுண்டு.

1981 ஆம் ஆண்டு இறுதியில் ஸ்ரீ பெருமாள் வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடங்கியுள்ளார். இது ஒரு தனியார் ஒலிபரப்பு. செயிண்ட் பியாரையில் உள்ளது. மொரீசியஸ் வானொலி தொலைக்காட்சிகளை ரீயூனியனில் பார்க்கலாம். ஆகையால் அங்கிருந்து திரையிடப்படும் தமிழ்ப்படங்களை ரீயூனியன் தமிழர்கள் பார்க்கின்றார்கள். வாரந்தோறும் அங்கிருந்து தமிழ்ப் பாடல்களைக் கேட்கிறார்கள். 

திரு. தண்டபாணி என்பவரும், மற்றும் பலரும் தமிழ்மொழி, பண்பாடு முதலியவற்றைப் பற்றி நூல்கள் எழுதி இருக்கிறார்கள். தமிழ் பிரெஞ்சுப் பண்பாட்டு மையத்தின் தலைவரும், கலைவாணி தமிழ் வானொலி பரப்பின் முன்னாள் இயக்குனருமான திரு.ஜெயபார்லென் பெர்மாள் என்பவர் ரீயூனியனில் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சியடை வதற்காகவும், பாதுகாக்கப்படுவதற்காகவும் சிறப்பாகப் பாடுபடுகிறார். வானொலி வெள்ளி (Redio Velly) இயக்குநரான பொனின் பரசூர்மென் தமிழ் ஒலிபரப்பு செய்கின்றார். இவரும் தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் பாடுபடுகின்றார். ரீயூனியன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வி.குமாரசாமி (President. Institute De Linguistidue Et D' Anthroplogie) அவர்களும் தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்காக சிறப்பாகப் பணிபுரிகின்றார்.

தமிழக உறவு நாடும் ரீயூனியன் தமிழர்கள் :
தமிழ் மொழியினை இத்தீவில் இன்னும் பரவலாகக் கற்பித்துப் பரப்ப போதிய அளவு தமிழாசிரியர்களையும், தமிழ் நாட்டுக்கே உரிய நாதஸ்வர, பரதக் கலைகளைக் கற்றுக் கொடுக்கும் இசை, நடன ஆசிரியப் பெருமக்களையும் அனுப்பி வைக்க தமிழ்நாட்டின் பேருதவியினை இங்குள்ள தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

தமிழ்நாட்டுக் கலைகள், கோயில்கள், நகர மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை முறைகள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திப்படங்களை அனுப்பும்படி வேண்டுகின்றனர். ரீயூனியனில் உள்ள இளைஞர்கள் தமிழகம் வந்து கலாச்சார, பண்பாட்டுத் துறைகளில் நேரடி அனுபவம் பெறுவதற்கு வேண்டிய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.

தொகுப்பு : ஜெ. சாந்தாராம்.


கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

1. பாரெல்லாம் பறந்த தமிழர்-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1994).
2. அயல்நாடுகளில் தமிழர்-முனைவர். எஸ். நாகராஜன்.

http://www.youtube.com/watch?v=nouzw5zMHHs

0 comments:

Post a Comment

 
Design by JP