Thursday, August 11, 2011

சிங்கப்பூரில் தமிழர்

0




தமிழகத்தின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளசிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது இதற்கு ஓர் சிறப்புக்காரணம் ஆகும். தென்கிழக்காசியாவில் உள்ள சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு, குறுக்கும் நெடுக்கும் 22.5,41.8 கி.மீ. தொலைவே உடையது. 54 அண்டைத் தீவுத் திட்டுக்கள் அடங்கிய சிங்கப்பூர் 618.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உடையதாகும். இந்நகரம் ஓர் துறைமுக நகரமாகும். இரப்பர், தகரம், கொப்பரைத் தேங்காய் முதலிய பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தீவின் தலைநகரம் சிங்கப்பூர் நகரம் ஆகும். 

சிங்கப்பூர்-தமிழ்நாடு வரலாறு

மலேசியா வரலாறுடன் நெருங்கி இணைந்து வருவது பண்டைய கால சிங்கப்பூர் வரலாறு ஆகும். பண்டைய கால சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி அறிய நமக்குப் போதிய வரலாற்று மூலங்கள் கிடையாது. கி.பி.213ஆம் ஆண்டளவிலே தீபகற்பத்தின் முடிவிலே பு-லூ-சுங் என்ற தீவு இருப்பதாக žனர்கள் கூறினர். இத்தீவு சிங்கப்பூரைக் குறிக்கிறது என நம்பப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டளவிலே தெமாசக் எனும் கடல் மாவட்டக் குடியிருப்புகளைப் பற்றி சாவனியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பகுதி இந்தோனேசிய ஸ்ரீவிசய பேரரசின் ஓர் பகுதியாக இருந்தது. பாலிம்பாங்கை ஆண்டுவந்த மன்னர், தெமாசக் மாவட்டத்தைச் சிங்கப்பூர் என்று பதிமூன்றாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அழைக்கத் தொடங்கினார். இத்தீவின் மன்னர் மஜபாகிட் அரசரால் 1376இல் தோற்கடிக்கப்பட்டவுடன் இத்தீவின் முக்கியத்துவம் நலியத் தொடங்கியது.

சிங்கப்பூரை ஆட்சி செய்த முதல் அரசர் ஸ்ரீதிரிபுவனா, இராசேந்திர சோழன் தமது குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர் எனக் கூறுகின்றார். மலேசியாவின் வரலாறு அல்லது செய்யாரா மெலாயூ என்னும் சுவடியில் இச்செய்தி காணப்பட்டிருக்கின்றது. இச்சுவடி ராப்பில்ஸ் சுவடி எண் 18 என்று பிரபலமடைந்துள்ளது. இச்சுவடியில் பின்வரும் செய்தி அளிக்கப்பட்டிருக்கின்றது. இச்சுவடி ஸ்ரீவிசய அரசர்களை லெங்குயி அல்லது கிளாங்குயி என்று கூறுகின்றது என ஓ.டபுள்யூ வால்டேர்ஸ் கூறுகின்றார்.

கிளாங்குயி அரசு குடும்பம் இந்திய வெற்றிவீரர் ராசா சூலனுடன் திருமணத் தொடர்பு கொண்டார்கள். முதலாம் இராசேந்திர சோழனைத்தான் இராசாசூலன் என்று கூறுகின்றார்கள் போல இருக்கின்றது. கிளாங்குயியை சூலன் தோற்கடித்தான். ஆகையால் அம்மன்னன் சூலின் கொலை செய்யப்பட்டான். அவன் நகரம் கைப்பற்றப்பட்டது. அவனுடைய மகளும் இளவரசியுமான ஓநாங்கியுவை சுலன் மணந்தான். சூலனுக்கும் ஓநாங்கியூவிற்கும் பிறந்த மகன் உலகத்தை வென்ற ராசா அலெக்சாண்டர் குடும்பத்தைச் சேர்ந்த ராசாசூரான் பாதுஷாவை மணந்தாள். அவர்களுடைய மகன் ராசாசூலன் தன்னுடைய தாத்தா இறந்த பிறகு இந்தியாவிலிருந்த அவருடைய சோழ ராஜ்யத்தின் அரசனாகப் பதவியேறினான், அவனுடைய தாத்தா ஏற்படுத்திய தலைநகரமான பிச நகராவில் (விசயநகரமாக கங்கைகொண்ட சோழபுரமாக இருக்கலாம்) ஆட்சி செய்யத் தொடங்கினான். ராசா சூலன் கடல் அடிப்பகுதிக்குச் சென்று கடல் அரசனின் மகளைத் திருமணம் செய்துகொண்டான். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் மூன்றாவது மகனான ஸ்ரீதிரிபுவனா என்பவன் சிங்கப்பூரின் முதல் அரசனாகப் பதவியேற்று சிங்கப்பூரில் தங்கள் பரம்பரையின் ஆட்சியைத் தொடங்கினான்.

இந்தியாவில் சூலனுக்குப் பிறகு இஸ்காந்தர் வம்சத்தைச் சேர்ந்த அவனுடைய மற்றொரு இந்திய மனைவிக்குப் பிறந்த மகன் ஆட்சிக்கு வந்தான். இரண்டு தலைமுறைக்குப் பிறகு, இவ்விந்திய வமிசத்தைச் சேர்ந்த ஓர் இளவரசி சிங்கப்பூர்-தெமாசக்கில் ஆட்சிசெய்து வந்த சிங்கப்பூரின் மூன்றாவது அரசரான ராசாமுதாவைத் திருமணம் செய்துகொண்டாள். அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த மற்றவர்களை அந்தஸ்து அற்றவர்கள் என்று அவர் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கப்பூரிலிருந்து தூதுவர்கள் வந்து ராசா மதா அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான் எனக் கூறியவுடன் மகிழ்ச்சியுடன் அவள் தந்தை அதற்குச் சம்மதித்தான்.

இச்சுவடியில் கூறப்பட்டிருக்கும் செய்திகளின் உண்மையைப் பற்றி நாம் ஒன்றும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் சோழர்களின் புகழ் ஓங்கியிருந்தது. சோழர்களுடன் திருமணத் தொடர்பு இருந்ததாகக் கூறுவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தார்கள் என நன்கு விளங்குகின்றது.

தற்கால சிங்கப்பூரை 1819ஆம் ஆண்டில் அமைத்தவர் சர் ஸ்டாபோர்டு ராஃபில்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்காகத் தேடிச் சென்று 1819இல் சிங்கப்பூர் தீவைக் களமாக அமைத்தார். அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த சுல்தான்களிடமிருந்து உரிமை பெற்றார். ஆகையால் உண்மையில் சிங்கப்பூரின் வரலாறு ஏறக்குறைய 170 ஆண்டுகள் மட்டுமே பழமையுடையது. ராஃபில்ஸ் சிங்கப்பூருக்கு வந்தபோது மலேயர்கள், žனர்கள், இந்தியர்கள் (தமிழர்கள் உட்பட) முதலிய எல்லா இனப்பிரிவினர்களையும் சிங்கப்பூரில் சந்தித்தார். 1819ஆம் ஆண்டளவிலே சிங்கப்பூர் மீன்பிடிப்பவர்களின் ஒரு சிறு கிராமமாக விளங்கியது. அச்சமயத்தில் அக்கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்களும் மலேயர்களும், žனர்களும் ஆவார்கள். 1821இல் சிங்கப்பூரில் வசித்த 4,727 பேரில் 132 பேர்தான் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. 1824 ஜனவரியில் இத்தீவின் மொத்த மக்கள் தொகை 10,683. இம்மொத்த மக்கள் தொகையில் மலேயர்கள் 60 விழுக்காடும் (6,431) žனர்கள் 31 விழுக்காடும் (3,317), இந்தியர்கள் 7 விழுக்காடும் (756) இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. தீபகற்பக் குடியேற்றப் பகுதிகளில் கரும்புத் தோட்டங்களிலும் மிளகு, தென்னந்தோப்புகளிலும் வேலை செய்வதற்காக வங்கவிரிகுடாவைக் கடந்து 1800இலிருந்தே தென்னிந்தியர்கள் வரத்தொடங்கினர். தமிழர்களும் பிறரும் தாமாகவே இங்குக் குடியேற வந்தமை 1857 வரை நீடித்தது. ராஃபில்ஸ் எடுத்த முயற்சியால் சிங்கப்பூர் ஓர் அழகான பிரபலமான சுங்கமற்ற துறைமுகமாகவும் தென்கிழக்காசியாவின் சிறப்பான வாணிபத்தலமாகவும் மாறியது. வாணிபம் செய்வதற்குச் சிறப்பான வாய்ப்பைச் சிங்கப்பூர் அளித்ததால் அண்டை நாட்டினர்களான மலேயர்கள்,இந்தியர்கள்,žனர்கள் இத்தீவுக்கு மிகுதியாக வரத் தொடங்கினர்.

1819இல் சிங்கப்பூரை ராஃபில்ஸ் அமைத்த காலத்திலிருந்தே இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் நெருங்கியத் தொடர்பு உருவாகத் தொடங்கியது. 120 இந்திய சிப்பாய்களும், பல உதவியாளர்களும், பினாங்கிலிருந்து வந்து நாராயண பிள்ளை எனும் இந்திய வணிகரும் ராஃபில்சுடன் சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி மலேயா தீபகற்பம், சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முழுமையாக அமைக்கப்பட்டவுடன் சிங்கப்பூரில் குடியேறியிருந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் சிங்கப்பூருக்கு வந்தனர். சாலைகள் அமைப்பதற்கும், இரயில் போக்குவரத்து அமைப்பதற்கும், துறைமுகத்தை நவீனமாக்கும் பணிகளுக்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிவதற்குத் தமிழர்கள் கிடைத்தனர். தவிர இரப்பர் தோட்டங்களிலும் தமிழர்கள் பணிபுரிந்தனர். மேலும் இந்தியாவிற்குத் தேவையான நறுமணப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தமிழ் வணிகர்கள் வந்தனர். மேலும் 1825ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலிருந்து கைதிகள் கொண்டு வரப்பட்டனர். சிங்கப்பூர் வளர்ச்சியில் இவர்களுடைய கடின உழைப்பின் பங்கும் உண்டு. இந்தோனேசியச் சுமத்ராவில் இப்போதுள்ள பெங்கூளு எனுமிடத்தில்தான் முதன் முதலில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். 1825இல் இது டச்சுக்காரர்களுக்கு உரிமையானதால், இங்கிருந்த குற்றவாளிகள் பினாங்கிற்கும் அங்கிருந்து சிங்கப்பூர் மலாக்காப் பகுதிகட்கும் மாற்றப்பட்டனர். இவ்வாறு சிங்கப்பூருக்குக் கொணரப்பட்ட இந்தியர்கள் தமது அரிய உழைப்பால் சிங்கப்பூரை உருவாக்கினர். அதன் நெடுஞ்சாலைகளை அமைத்துத் தந்ததோடு துப்புரவுப் பணிகளையும் மேற்கொண்டனர். சதுப்பு நிலங்களைத் தூர்த்துப் பாலங்களைக் கட்டி வியர்வை சிந்தி உழைத்தனர். சிங்கப்பூரில் உள்ள பழமையான தமிழ் இந்து ஆலயமான மாரியம்மன் கோயிலை இக்குற்றவாளிக் குடியேற்ற வாசிகளே 1828இல் அமைத்தனர். žன நாட்டுப் பாட்டாளிகளைவிட இவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்தனர். 1867இல் தீபகற்பக் குடியேற்றங்கள் காலனி கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டமையால் குற்றவாளிகளைக் குடியேற்றி அவர்கள் உழைப்பைச் சுரண்டும் போக்கு மறையலாயிற்று. 1800ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சிங்கப்பூருக்கு வந்து குடியேறிய தமிழர் தொகை 1890ஆம் ஆண்டளவில் ஓர் அளவு பெருகியிருந்தது. தவிர மலேசியாவிலிருந்தும் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர். 1913ஆம் ஆண்டளவில் தமிழர்களின் மொத்த மக்கள் தொகை மும்மடங்காகப் பெருகியது. குறிப்பாகச் சிங்கப்பூரில் பணிபுரிபவர்களுக்குச் சில உரிமைகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டதால் தமிழர்கள் மிகுதியாகச் சிங்கப்பூருக்கு வந்து குடியேறினர்.

சிங்கப்பூர் தீவு சிங்கப்பூர்த் துறைமுகமாக நன்றாக வளர்ச்சியடைந்தவுடன் சிந்திகள், மார்வாடிகள், குஜராத்திகள், பார்žக்கள் முதலிய வடஇந்தியர்கள் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கினர். முதல் உலகப்போர் தோன்றும் சமயத்தில் இவர்கள் ஓர் செல்வாக்குள்ள வாணிப சமூகமாக மாறிவிட்டிருந்தனர்.

ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களும், மலையாளிகளும் ஆவார்கள். இத்துறைமுகப் பணியிலும் போக்குவரத்துத் துறையிலும் பாதுகாத்தல் பணியிலும் தமிழர்கள் மிகுதியாகப் பணிபுரிந்தனர். பொதுவாக வடஇந்தியர்கள் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தவிர மேலும் மேலைநாட்டுக் கல்வி முறையில் பயின்ற தமிழர்களும், இந்திய நடுத்தர வகுப்பினரும் இருந்தனர்.

குடியேற்றங்கள் மிகுதியானதால் இரண்டாம் உலகப்போருக்கு முன் சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிகமானது. மற்ற இனத்தினரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சிங்கப்பூரின் மலேய் இனப்பிரிவினரின் மொத்த மக்கள் தொகை குறைவே. ஆகையால் žனர்களும், இந்தியர்களும் குறிப்பாகத் தமிழர்களும் சிங்கப்பூரின் சமூக பொருளாதார அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கேற்றனர் என்றால் மிகையாகாது.

ஆகையால் தமிழ்நாடு-சிங்கப்பூர் தொடர்பு வரலாற்றை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.

1) ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரில் குடியேறுவதற்கு முன்பு தோன்றிய வரலாறு. இக்காலகட்டத்தில் மலேசியா, இந்தோனேசியா வரலாறுடன் இணைந்த வரலாறே சிங்கப்பூர் வரலாறு ஆகும்.

2) ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம்

3) சுதந்திர சிங்கப்பூர்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்: 

ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது சிங்கப்பூர் நேர்தாயக ஆட்சிக்குட்பட்ட குடியேற்ற நாடாக இருந்தது. இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூர் பீனாங், மலாக்கா முதலிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டு நீரிணைக் குடியேற்றங்கள் என அழைக்கப்பட்டது. நிர்வாக அமைப்பில் மலேய் சுல்தான்கள் கிடையாது. மலேயர்களைவிட மலேயர்கள் அல்லாதவர்கள் மிகுதியாக இருந்ததால் மலேயர்களுக்கு முன்னுரிமைச் சலுகைகள் ஒன்றும் அளிக்கப்படவில்லை. தொழிற் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட தமிழ்ப் பணியாட்களை ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்குச் செல்ல அனுமதித்தனர். ஆனால் 1872ஆம் ஆண்டளவில்தான் இவ்வாறு செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்குச் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் இவ்வாறு ஒப்பந்தங்கள் மூலம் பணியாட்கள் சுரண்டப்படுவதை எதிர்த்தனர். இதன் விளைவாக 1910ஆம் ஆண்டளவில் தொழிற்கட்டுப்பாடு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு செல்வது தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தியர்கள், தமிழர்கள் உட்பட தொடர்ந்து சிங்கப்பூர் சென்று குடியேறிக் கொண்டிருந்தனர். ஒப்பந்தக்கெடு முடிந்த பின்னரும் தமிழ்கூலிகள் நீடித்துத் தங்க முற்பட்டனர். அவர்கள் வமிசத்தினரும் அங்கேயே வளரத் தொடங்கினர். 1950ஆம் ஆண்டுகளில் இவர்கள் இவ்வாறு சென்று குடியேறுவதை மிகக் கண்டிப்புடன் தடை செய்ததால் இக்குடியேற்றங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

பொதுவாக 1) குற்றவாளிகளின் குடியேற்றம். 2) கட்டுப்படுத்தப் பெற்ற குடியேற்றம் 3) தாமாக வந்த குடியேற்றம் என்ற மூன்று பிரிவில் தமிழ் மக்களின் குடியேற்ற வரவு அமையும். குடியேற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாகவோ, மூன்றுமோ ஒரு காலக்கட்டத்திலோ நிகழ்ந்துள்ளன. தமிழர்களும், பிறரும் தாமாக இங்கு குடியேற வந்தமை 1857 வரை நீடித்தது. அதன்பிறகு சில கட்டுத் திட்டங்களை அப்போதைய இந்திய அரசு கொணர்ந்தது. 1890ஆம் ஆண்டளவில் ஒப்பந்தப் பிணைப்புக்கு உட்படாத உழைப்பாளராகிய தமிழர்கள் கணிசமான அளவுக்கு அங்குக் குடியேறிவிட்டனர்.

1931ஆம் ஆண்டளவில் நீரிணைக் குடியேற்றங்களின் மொத்த மக்கள் தொகையில் žனர்கள் 59.6 விழுக்காடும், மலேயர்கள் 25.6 விழுக்காடும், இந்தியர்கள் 11.9 விழுக்காடும் இருந்தனர். நீரிணைக் குடியேற்றங்களில் பிறந்த எல்லா இனத்தினரும், மலேயர்களும், žனர்களும், இந்தியர்களும், யூரேசியர்களும் மற்றவர்களும் பிரிட்டிஷ் குடிமக்களாகக் கருதப்பட்டனர்; எல்லோருக்கும் சட்டப்படி சமமான உரிமைகள், சலுகைகள் அளிக்கப்பட்டன. சிவில் நிர்வாக அமைப்பின் முக்கியப் பதவிகள் ஆங்கிலேயர்வசம் இருந்தன. ஆனால் மற்ற எல்லாப் பதவிகளிலும் சேர்ந்து பணிபுரிய எல்லா இனத்தினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது. நடைமுறையில் பெரும்பான்மையான மேசைத் தொழிலாளிகளாக (white collar jobs) யுரேசியர்கள், žனர்கள், இந்தியர்கள் (தமிழர்கள் உட்பட) இருந்தார்கள். ஒருசில மலேயர்களுக்கு இப்பணிகளுக்குத் தேவையான சிறப்புத் தகுதிப் பண்பு இருந்தது. ஆகையால் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நீரிணைக் குடியேற்றப்பகுதியில் மலேயர்கள் அல்லாதவர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது, தமிழர்களின் செல்வாக்கும் ஓரளவு ஓங்கியிருந்தது எனக் கூறலாம். அலுவலக எழுத்தாளர்கள், மேற்பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள் என்றெல்லாம் பல்வேறு அலுவலர்களாகத் தமிழர்கள் இருந்தனர். கல்விப் பணியிலும் காவல் துறையிலும் அவர்களே நிறையத் தொடங்கினர். காவலர்களாக žக்கியர்களும் தமிழர்களுமே பெரும்பாலும் இடம்பெற்றனர். சிங்கப்பூரில் ஒருகாலத்தில் காவலர்களாய் இருந்த அனைவரும் தமிழர்களேயாவர். தொடக்க காலத்தில் கிறித்துவத் தொண்டமைப்புகளும் (மிஷ’னரிகளும்) அரசாங்கமும் நடத்திய பள்ளிகளில் இந்தியர்களே ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூர் ஜப்பானின் மேலாட்சியின் கீழ் மூன்று ஆண்டுகள் இருந்தது. போருக்குப்பின் மற்ற நீரிணைக் குடியேற்றங்களிலிருந்து சிங்கப்பூர் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக, சிங்கப்பூர் தனி உரிமையுள்ள நேர்தாயக ஆட்சிக்குட்பட்ட குடியேற்ற நாடாக மாறியது. 1959 ஜூன் திங்கள் முழு உள்நாட்டுத் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டது. 1963 செட்பம்பர் திங்களில் மலேசியா அமைக்கப்பட்டவுடன் சிங்கப்பூரும் அதன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.

சுதந்திர சிங்கப்பூர்: 

ஆனால் 1965 ஆகஸ்டு 7ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவை விட்டு வெளியேறி ஒரு தனி முழு உரிமையுள்ள சுதந்திர நாடாக மாறியது. இன்றும் சுதந்திர சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களுக்குச் சிறப்பான பங்கு உண்டு என அறுதியிட்டுக் கூறலாம்.

சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக 1820ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தொடக்கக் கால வளர்ச்சியில் தமிழர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். 1820ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் பிரிட்டிஷ் அரசின் கைதிகள். இவர்கள் 1823-26ஆம் ஆண்டுகளில் ஆங்கில அரசால் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இக்கைதிகள்தான் கூறப்போனால், சிங்கப்பூரில் இருக்கும் மிகப் பழைய தமிழ்க் கோயிலான மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள். புனித ஆண்டுரு கோயில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் ஜோஹ“ர் பாலம் செம்பாவங் துறைமுகம், கல்லாங் விமானநிலையம் முதலியவை தமிழர்களின் கடின உழைப்பின் சின்னங்கள் என்று கூறலாம். இத்தமிழ்க் கைதிகளும், பின்பு தொழிற்கட்டுபாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டத் தமிழர்களும், சாலைகள், இரயில்பாதை, பாலங்கள், கால்வாய்கள், அரசு கட்டிடங்கள் போன்ற பொதுநல அமைப்புகளைக் கட்டுவதில் சிறப்பான பங்கேற்றனர். ஒரு காலத்தில் எல்லாக் காவல் துறையாளர்களும் தமிழர்களே. பிறகு žக்கியர்கள் மிகுதியாகக் காவல்துறைப் பணியில் சேர்ந்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது கல்வித் துறையிலும் தமிழர்கள் செல்வாக்கு ஓங்கியிருந்தது. சிங்கப்பூரின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க வளர்ச்சியின்போது ஆங்கில அரசும், கிறித்துவ சமயப் பரப்பாளர் பள்ளிகளும் தமிழர்களைத்தான் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்தனர். இன்று வழக்குரைஞர்களாகவும், பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு அலுவலர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், தொழிற்சங்க உறுப்பினர்களாகவும் - எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் தமிழர்களை நாம் காணலாம்.

சமய வாழ்க்கை அமைப்பு:

தாயிஸசம்: 

புத்தசமயம், இசுலாம், கிறித்துவமதம், இந்து சமயம் முதலிய சமயங்களைப் பெரும்பான்மையான மக்கள் சிங்கப்பூரில் பின்பற்றுகின்றார்கள். பெரும்பான்மையான žனர்கள் புத்த சமயத்தையோ அல்லது தாயிஸ சமயத்தையோ தழுவியிருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா மலாய் இனபிரிவினரும், பாகிஸ்தானியரும் முசுலீம்கள், ஐரோப்பியர்களும், யூரேசியர்களும் கிறித்துவர்கள் பெரும்பான்மையான இந்தியர்கள் இந்துக்கள். பல சமயத்தினர்கள் தொடர்புகொண்டு ஒற்றுமையாக வாழ உதவுவதற்காக 1949இல் சமய இணைப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது.

1980ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 65 žனர்கள், 60 மலேயர்கள், மற்ற இனப்பிரிவினர்களில் 96 பேர் இந்துக்களாக இருந்தார்கள். மொத்தம் 221 இந்துக்களே, இந்திய இனப்பிரிவுகளைச் சேராதவர்களாக இருந்தார்கள். žனர்களைப் போல தங்களுடைய சமயம், பண்பாடு, கலை முதலியவைகளைத் தமிழர்களும் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தனர். பல தமிழ்க் கோயில்கள் சிங்கப்பூரில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்துக்களின் பண்டிகைகள், சடங்குகள் மையமாகத் திகழ்ந்தது இக்கோவில்கள். தமிழ்ப் புத்தாண்டு, தைப்பூசம், தீபாவளி, நவராத்திரி, மாசிமகம் முதலிய பண்டிகைகளைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். சிங்கப்பூரின் ஒரு தேசியத் திருவிழாநாளாக தீபாவளி கருதப்படுகின்றது. விசாக நாள், தீபாவளி முதலிய திருவிழா நாட்கள் தேசிய விடுமுறை நாள்களாகும்.

மாரியம்மன் கோயில்:

புகழ் வாய்ந்த தமிழ்க்கோவில்கள் மாரியம்மன் கோயில்(1828), சிவன் கோயில் (1830), பெருமாள் கோயில் (1855) இன்று 20 முக்கியக் கோவில்கள் நகரப்புறங்களிலும் நாட்டுப்புறங்களிலும் இருக்கின்றன. மாரியம்மன், பிள்ளையார், முருகன், திரௌபதி முதலிய கடவுள்கள் மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கின்றன. தென்பாலச் சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் மிகப் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆன இந்துக்கோயில் எனக் கருதப்படுகின்றது. இக்கோவிலின் கதவுகளிலும், உச்சிப் பகுதிகளிலும், ஐந்து அடுக்கு கோபுரங்களிலும் இந்து புராணங்கள் சம்பந்தப்பட்ட அழகான உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

குளம் சாலையிலுள்ள தண்டாயுதபாணி கோவில் மற்றொரு முக்கியக் கோவிலாகும். பணக்கார செட்டியார்கள் இக்கோவிலை 1859ஆம் ஆண்டு கட்டினார்கள். இக்கோவிலின் இராசகோபுரம் மீண்டும் 1903 நவம்பர் திங்களில் கட்டப்பட்டது.

தீமிதி விழா:

தீ மிதித்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், கரக ஆட்டம் முதலிய சடங்குகள் சிங்கப்பூரில் பக்தியுடன் பின்பற்றப்படுகின்றன.

சிங்கப்பூர்த் தமிழர்களில் 40 விழுக்காடு தமிழ் முசுலீம்கள் ஆவர். சோழ மண்டலக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மூலம், சிங்கப்பூரில் உள்ள பெண்களுடன் செய்துகொண்ட கலப்புத் திருமணங்கள் மூலமும் தமிழ் முசுலீம்களின் தொகை அதிகரித்தது எனக் கூறலாம்.

பொங்கல் திருவிழாவைத் தமிழர் திருநாள் என்று கருதினாலும் தமிழ்க் கிறித்துவர்களும், தமிழ் முசுலீம்களும் இத்திருநாளைக் கொண்டாடவில்லை என்பதால் தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் தைத் திங்களில் மற்றொரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளைத் தமிழ்த் திருநாள் என்று சிங்கப்பூர்த் தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள்.

சிங்கப்பூர் அரசு 19 வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறது. மாரியம்மன் கோவில் நாகூர் தர்கா முதலிய கோயில்களும் இம்மாதிரியான வரலாற்றுச் சின்னங்களாகக் கருதப்பட்டு சிங்கப்பூர் அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் பொருளாதார நிலை:

25 விழுக்காடு மேல் தமிழர்கள் வணிகர்களாகவும் அரசு அலுவலர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் சமூக அமைப்பின் மேல்தட்டில் இருப்பதாகக் கருதலாம். அடகுக்கடை வைத்து, வியாபாரம் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், உயர்படி அமைப்பில் இருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையான வணிகர்கள் தமிழ்நாட்டுடன் மற்ற இந்தியப் பகுதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள்.

சில்லரை வியாபாரத்திலோ, ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்திலோ தமிழ் வணிகர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த நூறு ஆண்டுக்குள், சில்லரை வாணிபம் செய்யும் நடுத்தர வகுப்பினர்கள் தோன்றினர். பொது வாணிபச் சரக்குகள் குறிப்பாக நெய்ப்பொருள்கள் விற்பதில் ஈடுபட்டு இவர்கள் மூலம் சில்லரை வாணிபம் ஓர் சிறப்பு நிலையை அடைந்தது எனக் கூறலாம். பொதுவாக வட்டித் தொழிலாளர்கள் எல்லோருமே இந்தியர்களாக - குறிப்பாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக இருந்தார்கள். வணிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சிறு கடை வணிகர்களுக்கும், குறைந்த ஊதியத் தொழிலாளர்களுக்கும் இவர்கள் வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தனர். இரப்பர், தகரம் முதலிய ஏற்றுமதி வாணிபத்தில் இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு மிகுதியான பங்கு கிடையாது. ஒரு சிலரைத் தவிர, பொதுவாக இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் தமிழ் வணிகர்கள் žன வணிகர்களையே நம்பி வாழ்கின்றார்கள். இறக்குமதி, ஏற்றுமதி வாணிபம் வெறும் தரகுத் தொழிலாகச் செயல்பட்டு வருகின்றது. வழக்குரைஞர்களாகவும், மருத்துவர்களாகவும் பல தமிழர்கள் இருக்கின்றார்கள். குற்றச்சாட்டு வழக்குரைஞர்கள், எதிர்வாதி வழக்குரைஞர்கள், நீதிபதிகள் முதலியவர்கள் எல்லோரும் சில விசாரணைகள் நடக்கும்போது தமிழர்களாகவே இருக்கின்றார்கள்.

மற்ற தமிழர்கள், ஏறத்தாழ 75 விழுக்காடு தமிழர்கள், தொழிலாளிகளாகப் பணிபுரிகின்றார்கள். இவர்களில் நான்கில் மூன்று பங்கினர் அயல்நாடுகளில் பெரும்பான்மையோர் சிங்கப்பூரில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

தேசிய (அலுவலக) மொழிகள்:

சிங்கப்பூரில் நான்கு அலுவலக மொழிகள் - மலேய் மொழி (தேசிய மொழி) žனமொழி (மேண்டரின்), தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகள் இருக்கின்றன. நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருக்கின்றது. தேச முன்னேற்றம் என்றால் எல்லா இனத்தினரும் தன்னியற்படுத்தப்பட்டு ஒன்றுபடவேண்டும் என்று இல்லை, ஒருவரோடு ஒருவர் இணைந்து, கூடிக்கலந்து, ஒருவர் மற்றொருவரை மதித்துப் பொறுத்தமைவுப் பண்புடன் வாழ வேண்டும். பண்பு வளம் உள்ள மக்களாட்சி தேவை தன்னியற்படுத்தும் நாகரீக நயம் தேவை இல்லை என மக்கள் நடவடிக்கை கட்சி கூறுகின்றது. இதன் உட்கருத்து என்னவென்றால் பெரும்பான்மை இனத்தினரும் சிறுபான்மை இனத்தினரும் போராட்டங்களைத் தவிர்த்து, பிறருடன் கூடியுழைக்க வேண்டும். சிங்கப்பூர் சட்டசபையில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கின்றது. எல்லா அரசு அறிக்கைகளிலும் தமிழ் பயன்படுத்தப்படுகின்றது. எல்லா வங்கிகளின் ஆண்டறிக்கைகளும் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. ஆகையால் சிறுபான்மையினரின் பண்பாட்டை முழுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையைச் சிங்கப்பூர் அரசிடம் நாம் காணமுடியாது. பதிலாக பல் இன தேசியப் பண்பாட்டு அமைப்பைப் பொறுத்தமைவுப் பண்புடன் உருவாக்கி, உயரத் தூக்கி, பல்வேறு இனத்தினரின் பண்பாட்டு மரபைப் பாதுகாத்துப் பேணிவளர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. 1966ஆம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் ஜாகீர் ஹுசேன் சிங்கப்பூருக்குச் சென்றபோது பின்வருமாறு கூறினார். தமிழ் மொழியைச் சிங்கப்பூர் அலுவலக மொழியாக ஏற்றுக்கொண்டதாலும் இந்தியப் பண்பாட்டு மன்றங்கள் உரிமையுடன் செயல்பட்டு வளர்ச்சியடைய வாய்ப்பளித்திருப்பதாலும் சிங்கப்பூரின் தேசிய ஒற்றுமை வளர்ச்சியில் இந்தியர்கள் எதிர்மறையல்லாத ஒத்துழைப்பைத் தருகின்றார்கள் என்று சிங்கப்பூர் அரசு ஒப்புக் கொள்கின்றது எனத் தெளிவாகத் தெரிகின்றது என அவர் கூறினார்

தமிழ்க் கல்வி:

தமிழ்க்கல்வியானது சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது என்றாலும் அது ஒரு வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு முறையாகவும் žராகவும் இயங்கத் தொடங்கியது 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் என்றே சொல்ல வேண்டும். சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய மூத்த துணை ஆசிரியரான திரு கோ.கலியபெருமாள் பின்வருமாறு கூறுகின்றார்:- இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தனியார் பள்ளிகளும் மிஷன் தமிழ்ப் பள்ளிகளுமாக மொத்தம் 18 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றில் சுமார் 1000 மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. இந்தக்காலக் கட்டத்தில்தான் அதாவது 1945க்குப் பின்னர்தான் இரண்டாம் மொழியின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இரண்டாம் மொழி கற்பதின் அவசியத்தை வலியுறுத்தியதாகும். அக்கல்விக் கொள்கையின்படி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தத்தம் தாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பயில ஊக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் 1959ஆம் ஆண்டில் இரண்டாம் மொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டதால் தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழைத் தவிர பிற தென்னிந்திய மொழிகளைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க முன்வந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆக ஆக, பல ஆங்கிலப் பள்ளிகளில் மேலும் பல தமிழாசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு தமிழ் கற்கும் மாணவர்களது எண்ணிக்கையும் தமிழ்க்கல்வியின் தரமும் படிப்படியாக வளர்ச்சியடையவே ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே 1955க்கும் 1957க்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சுமார் 150 மாணவர்கள் இங்குத் தமிழ் கற்றனர். பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல தமிழ் நிலையங்கள் தேவைக்கேற்பத் தோற்றுவிக்கப்பட்டன. தற்சமயம் சிங்கப்பூர் கல்வி அமைப்பின்கீழ் ஒன்பது தமிழ்மொழி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 1955இல் முதன்முறையாகத் தமிழ் மொழியை ஆங்கில உயர்நிலைப்பள்ளிகளில் கற்பிக்கத் தொடங்கியபோது தமிழை ஒரு பாடமாகப் பயின்ற சுமார் 50 மாணவர்களே கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினர். 1961இலிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் புதுமுகத் தேர்வில் தமிழையும் ஒரு முக்கியப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதினர்.

தொடக்க நிலைக் கல்வியோடு உயர்நிலைக் கல்வியையும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற காரணத்தால் 1960ஆம் ஆண்டு உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி உருவானது. செயின்ட் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இத்தொடக்கப் பள்ளியில் போதுமான மாணவர்கள் இன்மையால் 1975இல் மூடப்பட்டது. அதுமுதல் முற்றிலும் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி நிலையமாக இது இயங்கி வந்தது.

உமறுப்புலவரின் திருப்பெயர் நிலைத்திருக்கும் பொருட்டு 1983 ஜனவரியில் செயின்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம் என்றழைக்கப்பட்ட இந்நிலையத்திற்குக் கல்வி அமைச்சு அப்பெயரைச் சூட்டியது. அன்றிலிருந்து இந்நிலையம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் மொழி நிலையங்களுள் இந்நிலையம் பெரியதொரு நிலையமாகத் திகழ்கிறது.

சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அனைவரும் முதலாவதாக ஆங்கில மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக žனம், மலாய், தமிழ் ஆகிய தாய்மொழிகளில் ஒன்றைக் கட்டாயம் கற்க வேண்டும். மேல்நிலை முடிகின்ற வரை அந்நிலை உள்ளது. தமிழ் மாணவர்கள் 100க்கு 10 பங்கினர், žன மொழி கற்கவும் 100க்கு 1 பங்கினர் மலாய் மொழி கற்கவும் செல்கின்றனர். சிங்கப்பூரில் 100க்கு 75 பங்கு மக்கள் žனர்களே. தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சிங்கப்பூரில் 700 இருப்பதாகவும் தமிழ் மாணவர்கள் தொடக்கப்பள்ளிகளில் 15,000 உயர்நிலைப் பள்ளிகளில் 7,500, புகுமுக வகுப்புகளில் 300 முதல் 400 வரையில் படிப்பதாகவும் தெரிகிறது என்று தி.முருகரத்தனம் கூறுகிறார்.

ஆனால் சிங்கப்பூரில் தமிழில் உயர் கல்வி இல்லை. தமிழில் பட்டம் பெறுவோர் தோன்றுதல் இல்லையாகிவிட்டது.

தமிழ்மொழி ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் கல்விக் கழகத்தில்கூட மற்றப்பிரிவுகளில் பணியாற்றுவோரிடம் எதிர்பார்க்கப்படும் கல்வித் தகுதி இல்லாதவர்களே தமிழ் மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றனர்.

சிங்கப்பூர்

0 comments:

Post a Comment

 
Design by JP