தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொன்னால் இதுவரையிலும் இப்போதும் தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லையா?
இல்லை.
இல்லையா? என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?
ஆம். சாளுக்கிய அரசனான முதலாம் குலோத்துங்கச் சோழன் முதல் தமிழர்கள் தமிழரல்லாத வேற்றவர்களால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறார்கள்.
வேற்றவர்களால் ஆளப்பட்டால் என்ன?
ஆளப்பட்ட வேற்றவர்களால் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, அழியும் நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
அப்படி என்ன மோசமான நிலையை அடைந்துவிட்டோம் என்று சொல்கிறீர்கள்?
ஒன்றா இரண்டா, இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை, இன்றும் அங்குள்ள தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நிலை, தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் கொடுமை, தமிழ் அருச்சகர்கள் கருவறைக்குள் நுழைய முடியாத அவலம் என நீண்ட பட்டியலே சொல்லலாம். நம்முடைய நிலை எப்படி இருக்கிறது என்பதை http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14168:q-&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 என்னும் இணைப்பில் தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகிய தலைப்புகளில் படித்துப் பாருங்கள்; உண்மை விளங்கும்.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்! அதற்காகத் தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வதா? நல்லவர் ஆள வேண்டும் என்று சொல்லுங்கள். அதை விடுத்துத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்வது இன வேற்றுமை போல் அல்லவா இருக்கிறது?
நல்லவரே ஆள வேண்டும் என்று சொல்லும் நாம் ஏன் வெள்ளையர்களை நாட்டை விட்டுத் துரத்தினோம்? நல்லவர்கள் தாம் நாட்டை ஆள வேண்டும் என்றால் வெள்ளையர்களில் நல்லவர் ஒருவர் கூட இல்லையா? நம்மை நாமே ஆள வேண்டும்; அப்போது தான் நம்முடைய இனமும் மொழியும் பண்பாடும் காக்கப்படும் என்னும் நேர்ச்சிந்தனை தானே இந்திய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படையாக அமைந்தது.
வெள்ளையர்கள் வேற்றினத்தார்! அதனால் அவர்களை எதிர்த்துப் போராடினோம். ஆனால் இங்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன பேசுவோர் ‘மதராசு மாகாணமாக’ இருந்த போது நம்முடன் இருந்தவர்கள் இல்லையா?
நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வோம். ‘மதராசு மாகாணத்தை’ச் சேர்ந்த நம்முடன் இருந்தவர்கள் பிறகு ஏன் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடினார்கள்? நம்முடனே இருந்திருக்கலாமே! தமிழர்கள் ஒன்றும் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடவில்லை. நம்முடன் இருந்த பிறமொழிக்காரர்கள் தாம் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடினார்கள். அவர்களுடைய போராட்டம் சரியானது என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். அப்படியானால் தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்லும் நம்முடைய கருத்தும் சரியானது தானே!
நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒன்றும் பேசவில்லையே!
இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் நாம், தமிழர் அல்லாதவர்களை வெறுக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் இனத்தின் பாதுகாப்பை முன்னிட்டு தமிழரல்லாதவர் தமிழ் நாட்டில் வாழலாம்; ஆனால் தமிழனை ஆள நினைக்கக்கூடாது; அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றேயாகும். இந்த உணர்வை மற்றவர்கள் மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்கும்பொழுது மட்டுமே இந்திய ஒற்றுமையுணர்வு நிலை நிற்கும்.
என்னுடைய தோழி ஒருத்தி வீட்டில் மட்டும் தெலுங்கு பேசுபவள். ஆனால் அவள் தன்னை ஒரு தமிழச்சியாகவே முன்னிறுத்துபவள். அவளைத் தமிழச்சி என்று சொல்வதா? தெலுங்கு என்று ஒதுக்கி விடுவதா?
நீங்களே சொல்கிறீர்கள் – அவர் தெலுங்கு பேசுபவர் என்று! பின்னர் அவரைத் தெலுங்கர் என்று தானே சொல்ல முடியும். அதே சமயம் ‘தெலுங்கு என்று ஒதுக்கிவிடச் சொல்லவில்லை’. அவருடைய அடையாளம் தெலுங்கு அவ்வளவுதான்! பிற இனத்தாரிடம் வேறுபாட்டையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்குவது என்பது தமிழ்ப்பண்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்குப் போராடிய தலைவர்களிலேயே பெரியார் போன்ற சிலரது தாய்மொழி தமிழ் இல்லை. அதற்காக அவர்களை ஒதுக்கி வைக்கச் சொல்கிறீர்களா?
தந்தை பெரியார் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களை மீட்டெடுக்க வந்த ஒரு விடிவெள்ளி! அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அடிமைகளாக இருந்த தமிழர்களுக்குத் தன்மான உணர்வு ஊட்டியவர் அவர். பெரியார் தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டிட இயக்கம் கண்டு செயல்பட்டாரே தவிர ஆட்சியைப் பிடித்து ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால் தான் அவரைப் பெரியார் என்று அழைத்து மகிழ்ந்தோம்.
தந்தை பெரியாரைப் போல் இல்லாமல், தமிழர்கள் நலன் என்பதைப் புறந்தள்ளி ஆட்சியைப் பிடிக்கும் ஆசையை முன்னிறுத்துபவர்கள் தமிழர்களை ஆளக்கூடாது என்று தான் சொல்கிறோம்.
எதை வைத்துத் தமிழர் என்று வரையறுப்பது?
ஒருவர் ஆங்கிலேயர் என்றும் இத்தாலியர் என்றும் எதை வைத்து வரையறுக்கிறீர்கள்? அதே வரையறை தான் தமிழர் என்பதற்கும் பொருந்தும்! இங்குள்ள தமிழர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசினால் ஆங்கிலேயர் ஆகிவிடுவார்களா என்ன?
கருணாநிதி, செயலலிதா, விசயகாந்து ஆகிய மூவரும் வேற்றுமொழிக்காரர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை என்று சொல்கிறார்கள். இதை எப்படி அணுகுவது?
உங்கள் குடும்பத்தில் ஒருவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு வெளிநாட்டில் குடியேறி விட்டார். இப்போது அவருடைய வழியில் வருபவர்களை ‘இந்திய வம்சாவழி’ என்று தானே சொல்கிறார்கள். நீங்களும் அவர்களை உறவினர்கள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அதே போல் தான் இங்கு வந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறினாலும் அவர்களுடைய அடையாளம் எதுவோ அதை வைத்துத் தான் நாமும் சொல்கிறோம்.
மராட்டியத்தில் இருந்து தமிழர்கள் அடித்துத் துரத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த பால் தாக்கரேவை ‘இன வெறி பிடித்தவர்’ என்று சொல்லும் நாம் இப்படித் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்வது சரியாகப்படுகிறதா?
பால் தாக்கரே போன்றவர்கள் மராட்டியர்களைத் தவிர வேற்றினத்தார் மராட்டியத்தில் வாழவே கூடாது என்று கூறுகிறார்கள். அதை ‘இன வெறி’ என்று தான் சொல்ல முடியும்; சொல்ல வேண்டும். ஆனால் நம்முடைய போராட்டம் அதுவன்று! வேற்றுமொழிக்காரர்கள் இங்கு வந்து வாழவே கூடாது என்று நாம் எப்போதும் சொல்வதில்லை; அப்படிச் சொல்வது சரியுமில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று நமக்குச் சொல்லிக்கொடுத்தது தமிழ் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகியன முன் எப்போதும் இல்லாத அளவு நசுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன; இவை அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகத் ‘தமிழ்’ என்னும் அடையாளத்தையே அழித்து விடும் சூழ்ச்சி நடைபெற்று வரும் காலம் இது! இப்படிப்பட்ட சூழலில் இவற்றை எல்லாம் உணர்ந்து அச்சூழ்ச்சியை முறியடிக்கும் பாதுகாப்புக் கேடயமாகத் தான் நாம் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்கிறோம். யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வாழட்டும்! ஆனால் தமிழ்நாட்டைத் தமிழர் ஆளட்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு ஆகும்.
ஓர் எடுத்துக்காட்டுக்குக் கேட்கிறேன். இப்போது ஆந்திரத்தில் தமிழர்கள் இருவரை அமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்வீர்கள்?
ஒன்றும் சிக்கல் இல்லை. நாமும் ஆந்திரத்தைச் சேர்ந்த இருவர் இங்கு அமைச்சராக்கப்படலாம் என்பதை வரவேற்போம். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எத்தனை பேர் அமைச்சராக்கப்பட்டிருக்கின்றார்களோ அத்தனை பேர் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அமைச்சராக்கப்படலாம் என்னும் கருத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.
இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களர்களை எதிர்த்துத் தனிநாடு கேட்டுப் போராடுகிற நாம் இங்கு பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வது சரியாகுமா?
இலங்கையில் தமிழர்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுத்திருந்தால் தனிநாடு கேட்கும் போராட்டமே வந்திருக்காது. அடிப்படை மனித உரிமைகளைக் கூட நசுக்கியதால் தானே தந்தை செல்வா காலத்தில் தொடங்கிய அறவழிப் போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறும் அளவு நிலை வந்தது! இங்கு நாம் எம்மொழிக்காரர்களின் வாழ்வுரிமையையும் பறிக்கப்போவதில்லை; தமிழகத்தில் வாழலாம்; ஆள வேண்டாம் என்பது தான் நம்முடைய வேண்டுகோள் ஆகும்.
இன்னும் சொல்லப் போனால், தாய்த் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றால் தான் இலங்கைத் தமிழினம் உட்பட உலகத் தமிழினத்துக்குப் பாதுகாப்பாகத் தமிழகம் விளங்கும். தாய்த் தமிழகம் வேற்றவரிடம் அடிமைப்பட்டுக் கிடக்குமானால், உலகத் தமிழ் இனம் முழுவதும் கேட்பாரற்று நசுங்கி அழியும் நிலையை அடையும். அத்துடன் இலங்கையில் இனித் தமிழ் இனமும் சிங்கள இனமும் இணைந்து வாழ்தல் இயலாது. அடிமைப்பட்டு வாழ விரும்பாத தமிழர்கள் அழிக்கப்படுவது இயல்பு. இதனால் இலங்கையின் நிலையான அமைதிக்குத் தமிழ் ஈழம் தவிர வேறு வழியில்லை.
விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காகப் போராடினார்கள்; வெற்றி பெற இயலவில்லை. இனித் தாய்த் தமிழகத்தின் துணை இல்லாமல் தமிழ் ஈழம் மலர முடியாது.
ஒருபக்கம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்வது முரண் போலத் தோன்றுகிறதே?
நம்முடைய குடும்பத்தின் தலைவராக நாம் தாமே இருக்க முடியும்! வருகின்ற உறவினர்களுக்கு உரிய மதிப்புக் கொடுத்துத் தங்க வைப்போம்; அதற்காகக் குடும்பத்தலைவராகவா ஆக்க முடியும்?
இப்போது இந்தக் கருத்தை முன்னெடுப்பதன் நோக்கம் என்ன?
எப்படி ஒடுக்கப்படுகிறார்களோ அவ்வகையில் தான் மக்கள் ஒடுக்கத்திற்கு எதிராக அணி திரள்வார்கள். நாம் அனைவரும் தமிழினம் என்பதால் தான் ஒடுக்கப்படுகிறோம். எனவே தமிழர்களாக அணி திரள்வது என்பது தான் இயல்பானது. அப்படி அணி திரண்டு போராடுவதற்கு நம்முடைய இனத்தைச் சார்ந்த ஒருவர் நம்முடைய தலைவராக வருவது தான் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் தமிழர் என்னும் காரணத்திற்காக மீனவர்கள் கொல்லப்படுவது, அரசிடம் உரிய பயிற்சி பெற்ற அருச்சகர்கள், தமிழர் என்னும் காரணத்திற்காகக் கோவில் கருவறைக்குள் கால் வைக்கத் தகுதியில்லாதவர்கள் என்னும் நிலை இருப்பது போன்ற பல கொடுமைகள் மறையும்; அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகியன அழியாமல் பாதுகாக்கப்படும். எனவே தான் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்கிறோம்.
துணை நின்ற படைப்புகள்:
1. அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?, பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம், அயன்புரம், சென்னை-23.
2. உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும், பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம், உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம், அயன்புரம், சென்னை-23
3. தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் – ஆர்ப்பாட்டம், http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14168:q-&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 , கீற்று இணையத்தளம். http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14259&Itemid=139
0 comments:
Post a Comment