Sunday, August 14, 2011

"திருக்குறளை அதன் மூலத்திலேயே படிப்பதற்காகவே, யான் தமிழ் கற்றேன்" - அகிம்சைப் போராளி மகாத்மா காந்தி

0




கோட்டு சூட்டுடன் இருந்த காந்தியை வெள்ளாடைத் துறவிபோல மாற்றிய பெருமையும் தாய்த் தமிகழத்திற்கே உரியதாகும். அந்த வரலாற்று நிகழ்வு 1921இல் மதுரையில் நடந்தது. அரை நிருவாணமாகவும் கிழிந்த ஆடைகளுடனும் தன் இந்திய நாட்டு உடன்பிறப்புகள் இருப்பதைப் பார்த்த காந்தியின் மனம் தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரை நிருவாண கோலத்திற்கு மாறியது.


மேலும், தமிழ், தமிழ் நாடு, தமிழ் மக்கள் தொடர்பாகக் காந்தி செய்துள்ள பணிகளும் எழுதியுள்ள குறிப்புகளும் சில:-


1.தமிழை நன்றாகக் கற்றுக்கொண்ட காந்தி 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பெரியோர்களைப் பற்றி இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.


2.தமிழைக் கற்பதிலும், தமிழ்ப் பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அண்ணல் காந்தி தம் துணைவியார் கசுதூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார்.


3.தமது மூன்றாவது மகனான தேவதாசுக்கு இலட்சுமி என்ற தமிழ்பெண்ணை மணமுடித்து வைத்தார்.


4.திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, "திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.


5.ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளைத் தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தார். அதோடு, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார்.


6.அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த வழிபாடுகளிலும் பூசைகளிலும் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.


7.சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.


8.மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா.



9.தமிழகத்தில் திலகருக்கு இணையாக நாட்டுபற்று உணர்வை; எழுச்சியை உருவாக்கிய வ.உ.சிதம்பரனார் பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவியிருக்கிறார்.


10.தென்ஆப்பிரிக்கச் சத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும், கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.


11.தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராகக் காந்தி 1896ல் தமிழகத்தில் பரப்புரை செய்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சகித்து கொள்ளாத இனத்தினர்" என்று பேசியுள்ளார்.



12.தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள். அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்குப் புகழ்கிடைத்தது என்று எழுதியுள்ளார்.


13.காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' இதழ் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்!


14.காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்குத் தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்!


15.காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் வெளியாகியது இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான்!


16.காந்தியடிகள் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு அகிலமெல்லாம் சுற்றி, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!


அண்ணல் காந்தியடிகளைப் போற்றி மதிக்கின்ற தமிழ் மக்கள், அந்த மகாத்மாவே போற்றிய தாய்தமிழை அறிந்து; புரிந்து; தெளிந்து உயிரினும் மேலாகப் போற்றிட வேண்டும்.


இவ்வுலகில் கோடானுகோடி ஆத்மாக்கள் இருக்க ஒரே ஒருவர் மட்டுமே 'மகாத்துமா' என போற்றப்படுகிறார். அவர்தான் இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும், 'அகிம்சை' எனப்படும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பிய அமைதிப் போராளி மகாத்மா காந்தி அவர்கள். இவருடைய இயற்பெயர் மோகன்தாசு காந்தி. இவர் 2.10.1869 அன்று இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.


மகாத்மா காந்தி என்றாலே அவருடைய அறவழிப் போராட்டமும், 'அகிம்சையும்', அமைதிப் போரும், எளிமையும், இரக்க குணமும்தான் எல்லாருடைய கண்முன்னால் நிலழாடும். இத்தனை உயர்பண்புகளும் காந்தியிடம் உருவாகுவதற்குப் பல காரணியங்கள் இருக்கலாம். அவற்றுள் மிக முக்கியமாகத் தமிழும், திருக்குறளும், தமிழ்நாடும் பெரும் பங்காற்றியுள்ளன என்றால் நம்மில் பலருக்கு பெரும் வியப்பாக இருக்கலாம்.


காந்தி உருசிய நாட்டு அறிஞர் 'லியோ டால்சுடாய்' மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். ஒருமுறை 'லியோ டால்சுடாய்' எழுதிய ஒரு கட்டுரையில் திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து 'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறட்பாவைப் பற்றி எழுதியிருந்தார்.


லியோ டால்சுடாய் மேற்கோள் காட்டிய குறட்பா காந்தியின் உள்ளத்தைத் தொட்டு, அவர் ஆன்மா(ஆத்மா)வில் கலந்தது. மிக உயர்வான கருத்தைச் சொல்லும் இப்படி ஒரு நூல் இந்தியாவில் உள்ளது என்பதை அறியாமல் இருந்த காந்தி மிகவும் வருந்தினார். திருக்குறள் நூலை எப்படியாவது படித்துவிட விரும்பினார். பெரும் முயற்சி மேற்கொண்டு திருக்குறளைத் தேடினார். திருக்குறள் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஒரு அறநூல் என்பதை கண்டறிந்தார்.


ஆனால், தமிழ் தெரியாத காந்தி திருக்குறளைப் படிக்க முடியாமல் மொழிப்பெயர்ப்பு நூல்களைப் படித்து திருக்குறள் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்தார். திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படிக்க வேண்டும் என்று காந்தி ஆசைப்பட்டார். அதனால், தமிழ்மொழியைப் படித்தார்.


"திருக்குறளை அதன் மூலத்திலேயே படிப்பதற்காகவே, யான் தமிழ் கற்றேன்" என்று இதனை அவரே பதிவு செய்திருக்கிறார்.


Reference :- http://thirutamil.blogspot.com/2008/10/blog-post.html

0 comments:

Post a Comment

 
Design by JP