Saturday, August 13, 2011

தமிழ் கற்க உதவுங்கள் மியான்மார் தமிழர் தலைவர் வேண்டுகோள் - நேர்காணல் : இரா. பத்மநாபன் (தென்செய்தி )

0

தமிழ் வளர்ச்சிப் பணி :
 மியான்மரில் 10 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என மதிப்பிடுகிறோம். 1964 முதல் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டவுடன் தமிழ் வீட்டு மொழியாகக் கூட இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகி வந்தது. அந்த நேரத்தில் 1979ல் தமிழர் அறநெறிக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தித் தமிழைக் காக்க, வீட்டில் பேசிட சிறுவர்களுக்கு கோயில்களில் வைத்து தமிழ் கற்றுத் தருகின்றோம். "பாட்டன் பேசிய தமிழை வீட்டில் பேசுவோம்" என்ற முழக்கத்தை வைத்து ஒரு இயக்கமாக நடத்தி வருகிறோம். அது நல்ல பலனை அளித்துள்ளது.
கடந்த 12-08-06, 13-08-06 ஆகிய நாட்களில் சேலத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் வந்தேன். மாநாட்டில் கனடா, இங்கிலாந்து, பிரான்சு, மொரிசியசு, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களி
லிருந்தும் வந்து கலந்து கொண்ட பேராளர்களைக் காணவும் பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களைக் காணவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் மியான்மாவில் எங்களுடன் வாழ்ந்து இப்பொழுது தமிழகத்தில் வாழும் பலரை மீண்டும் பார்க்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இவை எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். எனவே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் திரு. கற்பூர சுந்தர பாண்டியனைக் கண்டு தமிழ் காக்கும் எங்கள் முயற்சிக்கு உதவிட தமிழ் ஆசிரியர்களையும் தமிழ்ப் புத்தகங்களையும் செய்தி இதழ்களையும் அனுப்பி வைத்திட கேட்டுக்கொண்டேன். இயன்றவரை உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.
செய்ய வேண்டியவற்றைத் தமிழகம் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் மியான்மர் நாட்டுக்குத் திரும்பிச்செல்கிறேன்.

என் முப்பாட்டனாரில் ஒருவரான வெள்ளைச்சாமி என்பவர் நூறு ஆண்டுகளுக்கு முன் இரங்கூனில் குடியேறினார். அவரின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் பிள்ளைகள் ஆறாவது தலைமுறையாகவும் என் பேரப்பிள்ளைகள் ஏழாவது தலைமுறையாகவும் அங்கு வாழ்ந்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் வாழும் உறவு முறையினருடன் கொள்வினை கொடுப்பினை செய்து வந்தோம். 1964க்குப் பின் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லாது போய்விட்டது.
என் தந்தை கோவிந்தசாமியும் தாய் இலட்சுமியும் இரங்கூனில் பிறந்தவர்கள். என் தந்தை காலமான பின்பு என் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு வந்து இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் என்ற ஊருக்கருகிலுள்ள சோனாங்குறிச்சி என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றார்கள். அவருக்கு இப்பொழுது 90 வயதுக்கு மேல் ஆனாலும் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்கள்.
எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் கந்தசாமி என்பதாகும். ஆனால் என் பெயரை கலைச்செல்வன் என மாற்றிக்கொண்டேன். என் பிள்ளைகளுக்கும் முறையே மணிமேகலை, கருணாநிதி, வாசுகி, சந்திரசேகரன், கண்ணகி, இளங்கோவன், கற்பகம், அண்ணாதுரை, கனிமொழி என்றும் பெயர் வைத்துள்ளேன். என் பேரப் பிள்ளைகளுக்கு சின்னமருது, மண்டோதரி, அகத்தியன், கயல்விழி, அருண்மொழி, தமிழ்க்குடி, சிவராணி, இராவணேஸ்வரி, சிலம்பரசன், செண்பகராணி, சின்னதுரை, செந்தமிழ் என பெயர் சூட்டியுள்ளோம். எங்களை அடையாளப்படுத்திக்கொள்ள நாங்கள் செய்யும் முயற்சிகளில் தமிழ்ப் பெயர்கள் வைப்பதை முதன்மையானதாகக் கருதுகின்றோம்.

தமிழ் மொழிக்கல்வி

இரங்கூனில் செட்டியார் உயர்நிலைப் பள்ளி, ரெட்டியார் உயர்நிலைப் பள்ளி, விசுவபாரதி உயர்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் தமிழ்ப் பயிற்சி மொழியாக இருந்தது. புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி போன்றவற்றில் ஆங்கிலம் பயிற்சி மொழியாகவும் தமிழ் மொழியும் பர்மிய மொழியும் பாடமொழிகளாகவும் இருந்தன. வட இந்தியர் நடத்திய கால்சா பள்ளியில் தமிழ் ஒரு பாட மொழியாக இருந்தது. வங்காளிகள் நடத்திய பள்ளியில் வங்கமொழி மட்டுமே கற்பிக்கப்பட்டது.
தட்டோன், மோல்மீன் போன்ற இடங்களிலும் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்ட பள்ளிகள் இருந்தன.
இப்பள்ளிகள் தங்கள் தங்களுக்கென கல்வித்திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்பட்டன. தமிழில் கல்வி கற்க வாய்ப்பிருந்தததாலும் வேளாண்மையில் ஈடுபட்டிருந்ததால் நெருக்கமாக உறவாடி வாழ வசதி இருந்ததாலும் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வுடன்தான் வாழ்ந்தோம்.
1964ல் தமிழ்ப் பள்ளிகள், சீனமொழிப் பள்ளிகள் போன்ற பிறமொழிப் பள்ளிகளை நடத்த மியான்மர் அரசு அனுமதிக்கவில்லை. எனவே இப்பள்ளிகள் மூடப்பட்டன. இப்பொழுது பர்மிய மொழிப் பள்ளிகளும் ஆங்கிலமொழிப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன.
இதற்குப் பிறகு கோயில்களில்- குறிப்பாக, பள்ளி விடுமுறை நாட்களில் பிள்ளைகளைக் கொண்டு வந்து தமிழ் கற்றுத் தருகின்றோம்.
சீனர்கள் பர்மியரோடு இரண்டறக் கலந்து வாழத் தலைப்பட்டனர். இப்பொழுது அவர்களும் தங்கள் தாய்மொழியைத் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் கோயில்களில் வைத்துக் கற்றுத் தருகின்றனர்.
பர்மிய பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் பட்டப் படிப்பு படிக்க விரும்புவோர் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லவேண்டிய கட்டாயம் இருப்பதாலும் எங்கள் பிள்ளைகளை பர்மிய பள்ளிகளில் சேர்க்கின்றோம். பள்ளியில் சேர்க்கும்பொழுது தமிழ்ப் பெயருடன் பர்மியப் பெயரையும் சேர்த்துதான் பள்ளியில் எழுதுகிறார்கள்.

செய்தித் தொடர்பு:

ரசிக ரஞ்சனி, தொண்டன் ஆகிய அன்றாட செய்திதாள்கள் வெளிவந்தன. ரசிக ரஞ்சனி வெள்ளையர் காலத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையாகும். அவை ஒவ்வொன்றும் 2000 பத்திரிகைகள் விற்றுவந்தன. 1966 முதல் பர்மிய ஆங்கில பத்திரிகைகள் தவிர்த்த மற்ற மொழிப் பத்திரிகைகளின் உரிமங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தமிழ்ப் பத்திரிகைகள் நின்று போயின. மேலும் தமிழகத்தில் வெளிவந்த தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் வந்துகொண்டிருந்தன. அவைகளும் வரமுடியாது போயின.
மேலும் தமிழில் வெளியாகும் அத்தனை திரைப்படங்களும் அங்குள்ள திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டன. இப்பொழுது திரைப்படங்களும் வர முடியாது போயின.
இப்பொழுது தமிழ்நாட்டுத் தொலைக் காட்சிகள் வந்துள்ளன. மிகவும் சிறந்த செய்தித் தொடர்பு சாதனம். ஆனால் அவை பரப்பும் கலப்படத் தமிழ் எங்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

பொருளாதாரம்:

இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றினாலும் பொருளாதாரத்தில் இன, மொழி, மத வேறுபாடுகளைக் கருதாது அனைவரையும் இராணுவ ஆட்சி சமமாக நடத்துகின்றது. ஒரு பர்மியனுக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டால் ஒரு தமிழனுக்கும் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனால் குத்தகையாளர்களாகவும் கூலிகளாகவும் இருந்த தமிழர்கள் நில உடமையாளர்களாக மாறியுள்ளனர். விவசாயிகளின் பிள்ளைகள் பர்மிய மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார அடிப்படையில் இது மாபெரும் முன்னேற்றமாகும்.
வணிகத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள பர்மிய அரசால் அமைக்கப்பட்ட ஆணையத்தில் தமிழ் மாமன்றத் தலைவர் திரு. தங்கராசா என்பவர் உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். அண்மையில் இந்தியா வந்த ஆணையத்தாருடன் வந்த திரு. தங்கராசா அவர்களும் தில்லி, ஐதராபாத், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டு சென்னை வந்து இங்கும் ஆய்வை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.இவர் யாங்கன் என்று இப்பொழுது அழைக்கப்படும் இரங்கூனில் ஒரு பெரிய வணிகராவார்.
அரசுப் பதவிகளில் தமிழர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தது போல் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் அரசுப் பதவிகளில் அமரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கோயில் :

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுத் தரும் அமைப்புகளாகக் கோயில்கள் தான் உள்ளன. இரங்கூனில் ஏராளமான கோயில்கள் உள்ளன. தடுக்கி விழுந்தால்
கோயிலில்தான் விழவேண்டும் என்ற நிலை உள்ளது.
இன வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, மொழி வளர்ச்சி ஆகியவற்றைக் கோயில்கள்தான் காப்பாற்றி வருகின்றன. ஒவ்வொரு கோயிலும் தமிழர்களின் தனி நிருவாகத்திலுள்ளன. நிறைய பர்மிய மக்கள் நம் கோயில்களுக்கு வந்து மிகுந்த பயபக்தியுடன் நடந்துகொள்கின்றனர். சில பர்மியர் நம் கோயில்களில் அறங்காவலர்களாக உள்ளனர். நம் கோயில்களுக்கு வந்து போவதால் பர்மியப் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்கின்றனர்.

பண்பாடு :

தமிழர்கள் தமிழர்களையே திருமணம் செய்துகொள்கின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய இளைஞர்கள் பர்மியப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். தமிழ்ப் பெண்கள் வேற்று இனத்தவரைத் திருமணம் செய்துகொள்வதில்லை. சாதிப் பெயர்கள் இருந்தாலும் கலப்புத் திருமணம் செய்து வருகின்றோம். கலப்புத் திருமணங்கள் பெருகிவருகின்றன. தமிழர்கள் தங்கள் தனித் தன்மையை இதன்மூலம் காத்து வருகின்றோம்.
தமிழரும் இப்பொழுது பர்மியருடன் இணைந்து வாழக் கற்று வருகின்றனர். அனைத்து மக்களும் பர்மிய கலாச்சாரத்தை ஏற்கும்படி செய்தது இராணுவ ஆட்சி நடத்திய தளபதி நீ வின் அவர்களைச் சாரும். சோர்ந்து கிடந்த தமிழர்களைத் தட்டி எழுப்பி பல்வேறு தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பை உருவாக்கித் தந்தவர் தளபதி நீ வின். அவ்வாறு அவர் செய்யாதிருந்தால் தமிழர்கள் விவசாயிகளாக மட்டுமே இருந்திருப்போம். அவருக்கு நன்றி தெரிவிக்க என் பேரன் அண்ணாதுரையின் பெயரோடு நீ வின் என்ற பெயரையும் சேர்த்து வைத்துள்ளேன்.

தமிழ் வளர்ச்சிப் பணி :

மியான்மரில் 10 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என மதிப்பிடுகிறோம். 1964 முதல் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டவுடன் தமிழ் வீட்டு மொழியாகக் கூட இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகி வந்தது. அந்த நேரத்தில் 1979ல் தமிழர் அறநெறிக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தித் தமிழைக் காக்க, வீட்டில் பேசிட சிறுவர்களுக்கு கோயில்களில் வைத்து தமிழ் கற்றுத் தருகின்றோம். "பாட்டன் பேசிய தமிழை வீட்டில் பேசுவோம்" என்ற முழக்கத்தை வைத்து ஒரு இயக்கமாக நடத்தி வருகிறோம். அது நல்ல பலனை அளித்துள்ளது.
கடந்த 12-08-06, 13-08-06 ஆகிய நாட்களில் சேலத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் வந்தேன். மாநாட்டில் கனடா, இங்கிலாந்து, பிரான்சு, மொரிசியசு, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களி
லிருந்தும் வந்து கலந்து கொண்ட பேராளர்களைக் காணவும் பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களைக் காணவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் மியான்மாவில் எங்களுடன் வாழ்ந்து இப்பொழுது தமிழகத்தில் வாழும் பலரை மீண்டும் பார்க்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இவை எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். எனவே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் திரு. கற்பூர சுந்தர பாண்டியனைக் கண்டு தமிழ் காக்கும் எங்கள் முயற்சிக்கு உதவிட தமிழ் ஆசிரியர்களையும் தமிழ்ப் புத்தகங்களையும் செய்தி இதழ்களையும் அனுப்பி வைத்திட கேட்டுக்கொண்டேன். இயன்றவரை உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.
செய்ய வேண்டியவற்றைத் தமிழகம் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் மியான்மர் நாட்டுக்குத் திரும்பிச்செல்கிறேன்.

நேர்காணல் : இரா. பத்மநாபன்

-தென்செய்தி 
https://www.facebook.com/pages/Myanmar-Tamil-Sangam-மியான்மார்-தமிழ்-சங்கம்-/143156799041739

0 comments:

Post a Comment

Design by JP