Saturday, August 13, 2011

தமிழர் வாழும் நாடுகள் - seychelles சீசெல்சு தீவில் தமிழர் - சுமார் 7500 தமிழர்கள் இருக்கிறார்கள்

0




சீசெல்சு தீவு, கிழக்காப்பிரிக்காவில் உள்ள மொம்பாசாவிற்கு 1000 மைல் கிழக்கிலும்; மடகாஸ்கருக்கு ஆறு நூறு மைல் வடகிழக்கிலும் 92 தீவுகள் அடங்கிய கூட்டமாகும். இது இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த நிலப்பரப்பு 171 சதுர மைல்களாகும். மாகித் தீவின் பரப்பளவு மட்டும் 57 சதுர மைல். எந்த இடத்திலும் இத்தீவின் அகலம் ஐந்து மைல்களுக்கு மேல் இல்லை. மாகியில்தான் சீசெல்சின் தலைநகரம் விட்டோரியா உள்ளது. 

தமிழர் குடியேறிய வரலாறு :

புதுச்சேரியிலிருந்து இத்தீவுக்குத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். 1770 ஆம் ஆண்டு 28 பேர்கள் சென்ற முதல் குடியேற்றக் குழுவில் 15 வெள்ளையர், 7 கறுப்பரான அடிமைகள், 5 தமிழர் சென்றதாக க. சச்சிதானந்தம் கூறுகிறார். அவர்கள் வருமாறு: ஆச்சாரி, முத்தையா, குமார்மீனாட்சி, கோவிந்தன், தொமினிக். 1783-84 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் தொடர்ச்சியாக வந்து குடியேறினர். பெரும்பாலோர் மொரீசியஸ், ரியூனியன் வழியாகவும், சிலர் நேராக புதுச்சேரித் துறைமுகத்தின் வழியாகவும் சீசெல்சுத் தீவுக்கு வந்து குடியேறினர். தஞ்சாவூர், சிதம்பரம், மாயவரம், காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களிலிருந்து கிளம்பி புதுச்சேரி வழியாக சீசெல்சு தீவுக்கு வந்தார்கள். 

1810-ஆம் ஆண்டு இத்தீவு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிலும் தமிழர்கள் பெருமளவில் வந்தனர். 

தமிழரின் இன்றைய நிலை 

சீசெல்சில் இன்றுள்ள மொத்த மக்களுள் இந்தியர் எனக் கணிக்கப்படுவோர் 5 விழுக்காட்டினர் மட்டுமே. இவர்களுள் 10-15 குஜராத்திக் குடும்பங்களைத் தவிர எஞ்சியவர் யாவரும் தமிழர்களே. சுமார் 7500 தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறலாம். ஆனாலும் தமிழ்ப் பெயர்கள் தாங்கிய சீசெல்சு மக்களின் தொகை 30 விழுக்காடு வரை இருக்கலாம்; சுமார் 17,000 திருமணங்கள் சீசெல்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 770 திருமணங்கள் தமிழ்ப் பெயர் உடைய மண மகனையோ, மணமகளையோ கொண்டன என்கிறார் க. சச்சிதானந்தம்.

சமயம் :

தமிழர்கள் வீடுகளிலேயே வழிபாட்டை நிகழ்த்துகின்றனர். 1984-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் நாள் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் அமைக்கப்பட்டது. சங்கம் இருக்கும் குவன்சி தெருவில் ஒவ்வொரு ஞாயிறும் காலை 8 மணிக்கும், மாலை 7 மணிக்கும் வழிபாட்டு முறைக் கூட்டம் கூடும். ஞாயிறு காலையிலும், விசேச நாட்களிலும் விநாயகர், நடராசர் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, திருவிளக்குப் பூசை, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கந்தசஷ்டி, திருவெம்பாவை நாள், தைப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ்ப்புத்தாண்டு முதலியவற்றை இச்சங்கம் கொண்டாடுகிறது. 1985-ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக நிலம் இச்சங்கத்தினால் வாங்கப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகள் :

தமிழர்கள் சீசெல்சு சென்ற காலத்தில் பெண்களை அழைத்துச் செல்லாததால் ஆப்ரிக்க பெண்களையே தமிழர்கள் மணந்தனர். அதனால் மொழியை இழக்க வழி ஏற்பட்டது. இருந்தாலும் தமிழர் என்பதற்கடையாளமாக இருப்பது சாதி பெயர்தான். ஆசாரி, செட்டி, பிள்ளை, நாயுடு, நாயக்கன், படையாட்சி என்ற சாதி வால்கள் இல்லாத தமிழர் எண்ணிக்கை குறைவு. இவர்களில் பிள்ளை, செட்டி இரண்டும் மிகவும் புழக்கத்தில் உள்ளன. சாதிப் பெயரல்லாத தமிழரை ஆப்ரிக்கராகவோ, பிரஞ்சுக்காரராகவோ கருதுவார்கள். வெள்ளைக்கார குடும்பங்கள் கூட தம் மூதாதைத் தமிழரின் சாதிப் பெயர் பெருமையைப் பேசி மெய் சிலிப்பார் கள் என்கிறார் க. சச்சிதானந்தம். 

சீசெல்சு தமிழ் சைவ, வைணவக் குடும்பங்களில் குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு சடங்குகள் அனைத்தும் கத்தோலிக்க முறையிலேயே நடத்தப்படுகின்றன. 

வீடு :

சீசெல்சு தமிழர்கள் கடற்கரையை ஒட்டியுள்ள சிற்றூர்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடிசை மிகவும் எளிமையானவை; பனை ஓலை வேய்ந்த கூரைகளை உடையவை. உள்ளும் புறமும் தூய்மையாக வைத்திருப்பார்கள்.

உணவு :

நம் நாட்டில் உள்ள காய்கறிகள் எல்லாம் மாகியில் கிடைக்கின்றன. அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நிறையப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு குடிசையைச் சுற்றிலும் பெரும்பாலும் தோட்டம் உண்டு. இத்தோட்டத்தில் காய்கறிகள் பயிராகின்றன. இறைச்சிக்காகப் பன்றிகளையும், கோழிகளையும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நிறைய வளர்க்கின்றனர்.

செய்தித் தொடர்பு :

வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலிபரப்புகள் உண்டு. சீசெல்சு இந்துக் கோயில் சங்கத்தின் உறுப்பினர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் சீசெல்சின் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றன. தமிழ்த்திரைப்படங்களை வீடியோவில் கண்டு வருகின்றனர்.


தமிழ்மொழியின் நிலை :
இந்துக் கோயில் சங்கத்தால் தமிழ்மொழி வகுப்புகள் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிமுதல் 11 மணி வரை நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் இல்லை. தமிழும் பேசுவது குறைந்து கிரியோலே வீட்டு மொழியாகி உள்ளது. மு.நடேசன், பழனி, சோதி மாணிக்கம் போன்றவர்கள் தமிழினிமையுடன் கவிதை எழுதி வருகின்றனர்.

அமைப்பு :

இத்தீவிலுள்ள பெரும் அமைப்பு இந்துக்கோயில் சங்கமாகும். இது சமயம், பண்பாடு, மொழி, கலை நிகழ்ச்சிகளை இங்குள்ள தமிழர்களிடம் வளர்த்து வருகிறது. உலகத் தமிழ் பண்பாட்டு கழகத்தின் கிளை இங்குள்ளது. அதில் ஜி.எம்.ஆர். பிள்ளை, கண்ணாபடையாச்சி முதலியோர் உள்ளனர். 

தமிழர் சாதனைகள் :

1789-இல் ரியூனியனிலிருந்து அரசு சார்பில் வந்தவர்-இராமலிங்கம். இவரைப் போன்றவர்கள் அரசு நிருவாகத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தீவு, சுதந்திரம் பெற்ற பிறகு அமைத்த ஆட்சியில் 1977 ஆம் ஆண்டு திரு. செட்டி என்பவர் அமைச்சராக இருந்துள்ளார்.

வணிகம், தொழில் புரிவோர் விபரம் 

1864-75 காலக்கட்டத்தில் திரு. நாயக்கன் என்பவர் விக்டோரியா நகரத்தின் பெரும்பகுதி நிலவுரிமையாளரானார். வணிக முன்னோடியான இவருக்குப்பின் திரு.கந்தசாமி, திரு.பிள்ளை, ஆகியோர் சிறப்பாக வணிகத்தில் விளங்குகின்றனர். சீசெல்சு தீவில் உள்ள வியாபார நிறுவனங்கள் தமிழர் பெயரிலேயே இருக்கின்றன. குறிப்பாக தஞ்சையில் இருந்து சென்ற நாயுடு, பிள்ளை, படையாட்சி, செட்டி முதலியவர்கள் வசம் வணிக நிறுவனங்கள் உள்ளன. எல்லா கிராமத்திலும் தமிழரால் நடத்தப்படும் கடை இருக்கும். துணி ஏற்றுமதி, இறக்குமதி, வியாபாரம், உணவு, வீட்டுப் பாவனைப்பொருள்கள் வியாபாரம் தமிழரால் செய்யப்படுகின்றன. மாகித் தீவில் உள்ள மிகப் பெரிய வணிகக் கடையை வைத்து நடத்துபவர் ஒரு தமிழரே ஆவார்.

முருகன் ஸ்டோர், பாலன் ஸ்டோர்ஸ், ஸ்வாமி ஸ்டோர்ஸ், சேகர் ஸ்டோர்ஸ், மோகன் இந்து ஷாப்பிங் சென்டர், சக்தி ஸ்டூடியோ போன்ற பெயருடைய கடைகளை விக்டோரியாவிலும் பிற ஊர்களிலும் காணலாம். 

ஏர் இந்தியா விமானம் சீசெல்சு வழியாக மொரீசியசு செல்வதால், தமிழ் வியாபாரிகள் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர். பல பொருள்களைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து விற்பனை செய்கின்றனர். 

1974-81 காலகட்டத்தில் சீசெல்சு வந்த தமிழர்கள் அனைவரும் தொழில் நுணுக்கப் பணியாளர்கள். இவர்கள் இங்கு தொழில்துறை, தொழில் நுட்பத்துறை, மேலாண்மை, நிர்வாகம், எழுத்தர், பொறியியல் போன்ற துறையில் பணியாற்றி வருகின்றனர்.

- ப. திருநாவுக்கரசு

ஆதார நூல்கள்: 

1. சீசெல்சு நாட்டில் தமிழர் - க. சச்சிதானந்தம் - தமிழ்க்கலை
2. அயல்நாடுகளில் தமிழர் - எஸ். நாகராஜன்.
3. உலகத் தமிழர் 2ஆம் பாகம் - இர.ந.வீரப்பன்


0 comments:

Post a Comment

 
Design by JP