தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித்தன்மை இதுவாகும்.
தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சிலபொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப்பழைமை உடையது.
தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக்காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழாய்வுச் சான்றுகள்,அரிக்கமேட்டு ஆய்வுகள்,கேரளாவில் நடைபெற்றுவரும் புதைபொருள் அகழாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.
தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின் - தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக ஆங்கீகரிக்கப்படவில்லை. தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.
குமரிக்கண்ட அகழாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பது, தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவது, வானவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம். தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.
தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக்கொண்டுள்ளது. சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.
அண்மையில் கணினி, இணைய வளர்ச்சி காரணமாகத் தமிழ் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது என்று பொதுவான ஒரு கருத்துருவம் பெற்றுள்ளது. தமிழில் பலவகையான மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், தமிழ்நூல்கள் மின்னாக்கம் பெற்றுள்ளன எனவும், தமிழர்கள் ஓரிடத்திலிருந்து தகவல்களை மற்ற இடத்திற்கு விரைவாக அனுப்பமுடிகின்றது எனவும் கூறி மகிழ்கின்றோம். இத்தகு வளர்ச்சிக்குத் தமிழில் ஒருங்குகுறி (யுனிகோடு) எனும் முறை நடைமுறைக்கு வந்தது காரணம் ஆகும்.
முன்பெல்லாம் ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிச் சந்தையில் விற்பனைக்குத் தந்தனர். ஒரு நிறுவன எழுத்தை நாம் படிக்க வேண்டும் என்றால் நம் கணினியிலும் அந்த எழுத்துரு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறர் அனுப்பும் கடிதங்களைக், கோப்புகளைப் படிக்கமுடியும். இந்த எழுத்துருக்களை நாம் காசுக்கு வாங்க வேண்டிய நிலை இருந்தது (இன்றும் தமிழ் எழுத்துருக்களை விற்று வணிகம் நடத்தும் பல கோடியாளர்கள் உண்டு). முகுந்தராசு என்னும் இளைஞர் எ.கலப்பை என்ற மென்பொருளை நண்பர்களின் உதவியுடன் உருவாக்கிய பிறகு தமிழில் எழுத்துருச் சிக்கல் ஓரளவு முடிவுக்கு வந்தது.
நாம் இன்று தமிழ் ஒருங்குகுறி எழுத்துருவைப் பயன்படுத்தி உலகின் எந்த மொழியினர் பயன்படுத்தும் கணினிக்கும் தமிழில் மடல்கள், கோப்புகளை அனுப்பினாலும் சிக்கலின்றி யாவரும் படிக்க முடியும். ஆனால் இந்த உண்மையை அரசுக்கு எடுத்துரைக்க ஆள் இல்லாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் எழுத்துருக்களுக்கு, மென்பொருள்களுக்குச் செலவிடப்பட்டும் தமிழகத்தில் கணினிப் புரட்சியை உண்டாக்கமுடியவில்லை. அரசு வழங்கிய கணினி, மென்பொருள்கள் பிரிக்கப்படாமல் அரசு அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
யுனிகோடு எனப்படும் எழுத்துகளைக் குறித்து உலக அளவில் ஒருங்குகுறி சேர்த்தியம் (யுனிகோடு கன்சார்டியம்) ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக இடங்களை ஒதுக்கிவைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை ஒருங்குகுறி சேர்த்தியம் அமைப்பு வழங்கியுள்ளது. சீனமொழிக்கு 5000 மேற்பட்ட இடங்களை ஒதுக்கியுள்ளது. நமக்கு இன்னும் கூடுதலான இடங்களை ஒதுக்கியிருந்தால் 247 எழுத்துகளையும் எளிதாகத் தட்டச்சிடும் நிலை ஏற்பட்டிருக்கும். இப்பொழுது இருக்கும் இடத்தைக்கொண்டு எந்த வகையான இடையூறும் இல்லாமல் ஒருங்குகுறியில் தட்டச்சிட்டு வருகின்றோம்.
128 இடங்களில் குறிப்பிட்ட 72 இடங்களில் மட்டும் தமிழ் எழுத்துகளும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க்குறியீடுகளும், வழக்கில் உள்ள இன்றியமையாத கிரந்த எழுத்துகளும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவ்வாறு 128 இடங்களில் தமிழ் எழுத்துகளையும் குறியீடுகளையும் கொண்டு எத்தகு இடையூறும் இல்லாமல் எழுதிவரும் இந்த வேளையில் நிரப்பப்படாமல் உள்ள 56 இடத்தில் கிரந்த எழுத்துகள் 26 ஐச் சேர்க்கும்படியும், தமிழுக்கே உரியதான "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய எழுத்தொலி வடிவங்களைக் கிரந்த அட்டவணையில் சேர்க்கும்படியும் பலர் ஒருங்கு குறி அமைப்புக்குக் கருத்துரு வழங்குகின்றனர். அவர்களுள் சிறீஇரமணசர்மா (காஞ்சி சங்கரமடம்) என்னும் வல்லுநரரும் ஒருவர். இவர் வேதநூல்களையும் கல்வெட்டுகளையும், திவ்யபிரபந்த உரைகளையும் பதிப்பிக்க உதவும் நோக்கில் ஒரு முன்மொழிவை ஒருங்குகுறி சேர்த்தியத்துக்கு அனுப்பினார். இதற்கு முன்பாக முனைவர் நாக.கணேசனும் இதுபோன்ற ஒரு முன்மொழிவை சேர்த்தியத்துக்கு அனுப்பியுள்ளார்.
கடந்த 2010, செப்டம்பர் 6-ம் நாள் கிரந்தப்புலமை மிக்கவர்களைக் கொண்டு நடத்தப்பெற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக ஒருங்குறி ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது(செப்டம்பர் 6-ஆம் நாள் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாத்திரி, இரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம் பெறவில்லை).
வழக்கில் இல்லாத மரபுசார்ந்த வேதகால சம்சுகிருதம், கிரந்த எழுத்துகள் ஆகியன ஒருங்குகுறி சேர்த்தியம் அட்டவணையில் இடம்பெற வேண்டுமென்று கருதப்பட்டன. கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமற்கிருதம்) எழதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து, பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.
பல மாதங்களுக்கு(சூலை 2010) அனுப்பப்பெற்ற இந்தக் கிரந்த முன்மொழிவுகள் குறித்து உத்தமம் அமைப்புக்குத் தெரிய வாய்ப்பு உண்டு. ஏனெனில் உத்தமத்தில் உள்ள பலர் இந்த அமைப்பிலும் உறுப்பினராவர். மேலும் உத்தமமும் இதில் உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளது. இந்த முன்மொழிவு பற்றி பல நாள் அமைதி காத்திருந்த உத்தமம் அமைப்பு திடுமென முனைப்பு காட்டி உலக அளவில் தமிழ் ஆர்வலர்களை ஒருங்குகுறி சேர்த்தியத்துக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் மடலை உலக அளவில் திரட்டி அனுப்பியது. இணையம் வழியாகவும் பல்வேறு இணையக்குழுக்களில், பேசுபுக்கில் அமளி ஏற்படுத்தப்பட்ட இந்தச் செய்தி தமிழகத்துத் தமிழ் அறிஞர்களுக்கோ, தமிழ் ஆர்வலர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ தெரியாமல் போய்விட்டது.
அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் யுனிகோடு கன்சார்டியத்துக்கு தமிழ் இடத்தில் நீட்சியாக கிரந்தத்தைப் பயன்படுத்துதல் குறித்த கருத்தைத் தெரிவிக்க இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி உலகெங்குமிருந்தும் கணினி ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் எனப் பலரின் மடல்கள் யுனிகோடு கன்சார்டியத்துக்கு மின்னஞ்சலாகச் சென்றது. உத்தமம் அமைப்பு இந்த மடல்களைத் திரட்டி அந்த அமைப்புக்கு அனுப்பியது. தனிப்பட்டவர்களும் அனுப்பினர். கிரந்த எழுத்துகளைத் தமிழ் இடத்தில் சேர்ப்பது என்ற முன்மொழிவு குறித்து ஆலோசிக்க கூடிய யுனிகோடு கன்சார்டியம் குழு சிக்கலின் தீவிரத்தை உணர்ந்து தற்காலிகமாக இந்த முடிவை ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தம் விடுதலை நாளேட்டில்(28.10.2010) கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்பட உள்ள அழிவைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியும் இந்த முயற்சிக்குப் பின்புலமாக மத நிறுவனங்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன் பிறகே தமிழுக்கு நேர இருந்த மிகப்பெரிய கேடு தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தெரிய வந்தது.
அறிஞர்களின் கருத்தறிய 3.11.2010 அன்று மாலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 17 பேர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு பேராசிரியர் ஆனந்தகிருட்டினனிடம் 4.11.2010 அன்று மாலை 4.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு உடன்படவே, முதல்வரிடம் 4.11.2010 அன்று மாலை 5 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
உடன் அன்றே (4.11.2010 தீபாவளி இரவு 8 மணி முதல் 9.30 வரை) முதல்வர் தலைமையில் புதிய தலைமைச் செயலகத்தில் முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஆனந்தகிருட்டினன் முதலியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் பேராசிரியர் க.அன்பழகன், வைரமுத்து, வா.செ.குழந்தைசாமி, மு.ஆனந்தகிருட்டினன், கனிமொழி, அரவிந்தன், இரவிக்குமார் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் கூடி ஆலோசித்தனர். இதன் பயனாக இந்திய அரசின் செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மேனாள் அமைச்சர் ஆ.இராசா அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் சார்பில் ஒரு மடல் விடுக்கப்பட்டது.
தமிழறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு உரிய முடிவெடுக்கலாம் என்று முதலமைச்சர் ஒரு வேண்டுகோள் மடல் விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் முறையிட்டதால் 6.11.10 இல் அமெரிக்காவில் நடைபெறும் ஒருங்குகுறி சேர்த்தியம் கூட்டத்தில் பேசப்பட இருந்த இப் பொருண்மை 26.2.2011 அன்று நடைபெறும் கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சிறீஇரமணசர்மாவின் கிரந்த தமிழ்நீட்சி முன்மொழிவு தமிழில் உள்ள பழைய கல்வெட்டு, ஓலைச்சுவடிகள்,வேதநூல்களைத் தமிழில் அச்சிடக் கிரந்த எழுத்துகள் தேவை. அந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளுடன் இணைத்துவிட்டால் வேதநூல்களை எளிதில் அச்சிடமுடியும் என்று காஞ்சி சங்கரமடம் பதிப்பித்த நூல்களையும்,பிற கல்வெட்டுகளையும் மேற்கோள்காட்டி சிறிஇரமண சர்மா வேண்டுகோளை முன்மொழிந்துள்ளார்.
சிரீரமண சர்மா ஒருங்குறி நிறுவனத்துக்கு முன்மொழிந்துள்ள பலவற்றுள், குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளவை இரண்டு.
ஒன்று அவருடைய "Extended Tamil" என்னும் "நீட்சித் தமிழ்" முன்மொழிவு.
இதில் அவர் சமசுக்கிருதம், சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துகளில் எழுத தேவநாகரி, தெலுங்கு முதலான மொழிகளைப் போலவே க1, க2, க3, க4 என வல்லின எழுத்துகளின் எழுத்த-மூச்சு வேறுபாடுகளைக் குறிக்கவும், சமசுக்கிருத "உயிரொலிகள்" எனக்கருதப்படும் "ரு", "லு' முதலானவற்றுக்கும் என்று மொத்தம் 26 புதிய "கிரந்த" எழுத்துகளை நுழைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இவை கிரந்தமாக இல்லாமல் க, க2, க3 என்பது போல மேலொட்டு எண் இட்டுக் குறிக்கத் தனி இடங்களாகத் தர வேண்டும் என்கிறார். முன்மொழிவில் இல்லாத பல சூழ்ச்சிகள் இதில் உள்ளன என்று ஒருங்குகுறி சேர்த்தியம் பற்றியும், கணினித் தொழில்நுட்பம் பற்றியும், தமிழ் இலக்கண மரபு பற்றியும் அறிந்த பேராசிரியர் செல்வகுமார்(கனடா) குறிப்பிடுகிறார்.
தமிழில் கிரந்தத்தை நுழைப்பதோ, கிரந்ததைத் தமிழில் நுழைப்பதோ தமிழுக்கு மிகப்பெரிய இழப்பினை ஏற்படுத்தும் என்று கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு அவர்களும், தமிழ், வடமொழி நூல்களைக் கற்றுத் தேர்ந்த பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்களும் கருதுகின்றனர்.
கிரந்த எழுத்துகள் என்றால் என்ன?
கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும். ' வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து. அதன் காலம் தோரா. கி.மு 10 ஆம் நூற்றாண்டு.... கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்' என்பர் மொழிஞாயிறு பாவாணர் (வடமொழி வரலாறு பக்கம், 127).
தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின. பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர். இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.
ஆனைமலை, அழகர் மலை, திருமயம், குடுமியான்மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விசய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு அரசாட்சியில் வடமொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். எனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது.
கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும்.
தொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது.
அதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளளது.
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே"
என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி(ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது.
பின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷ்ணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத் தெற்றென விளங்கும்.
கி.பி.12, அல்லது கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் கூறுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது(நன்னூல் நூற்பாக்கள்:146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர். அந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச்செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.
இந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்தததை நினைவில்கொள்ளவேண்டும். பிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து(எ, ஒ,ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது(இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார்.அது புலவர் காலம். இந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுதுமுடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும்(மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்)
கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?
தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளைமொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம். தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்கமுடியாது. ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளில் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொயியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.
அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித்தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ்மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன. தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது. திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது.
முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர். அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழையத் தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல்மொழியைப் பாதுகாப்பது அந்தமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரின் கடமையாகும்.அந்த அடிப்படையில்தான் உலகத் தமிழறிஞர்களும் ஒருங்குகுறி சேர்த்தியம் (யுனிகோடு கன்சார்டியம்) கூடுதலான கிரந்த எழுத்துகளைத் தமிழ் அட்டவணைக்கு உரிய இடத்தில் சேர்க்கக்கூடாது என்றும் தமிழ் எழுத்துகளைக்(எ, ஒ,ழ, ற,ன) கிரந்த அட்டவணையில் சேர்க்கக்கூடாது எனவும் வாதிடுகின்றனர். அந்தக் கிரந்த எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்றால் சமற்கிருதத்தை எழுதப் பயன்படும் தேவநாகரி எழுத்துப் பகுதியில் சேர்த்து மகிழட்டுமே!
ஒருங்குகுறி ஒன்றியம்(யுனிகோடு கன்சார்டியம்)
ஒருங்குகுறி கன்சார்டியம் என்பது உலக அளவில் செயல்படும் இலாப நோக்கற்ற அமைப்பு. இது மென்பொருள்களில் ஒரே வடிவிலான எழுத்து, குறியீடுகள் இவற்றை வரையறுத்து எந்தக் கணினியும் எழுத்துருக்கள், குறியீடுகளைப் படிக்க உதவும் சேவையைச் செய்கின்றது. கணினி,தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள்,நிறுவனங்கள் இதில் உலக அளவில் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் செலுத்தும் நிதியால் இந்த அமைப்பு இயங்குகிறது.ஒருங்குகுறியின் தரத்தில் நம்பிக்கையுடைய தனி நபர்களும் நிறுவனங்களும் இதில் உறுப்பினர்களாகச் சேரலாம்.
Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys போன்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் ஒருங்குகுறித் தரத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. ஒருங்குகுறி வருகை உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடோப்,கூகுள்,ஆப்பிள்,ஐ.பி.எம், ஆரக்கிள்,மைக்ரோசாப்டு,யாகூ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் முழூமையான உறுப்பினர்களாக உள்ளனர்.இந்திய அரசும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களும் நிறுவனம் சார்ந்த உறுப்பினராக உள்ளன. இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை வாக்குரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பளிப்புப் பெற்றுள்ள 22 மொழிகளின் எழுத்து வடிவங்களும் ஒருங்குகுறி ஆணையத்தின் அட்டவணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தனிநபர்களும்,மாணவர்களும் இதன் உறுப்பினராகமுடியும். கணிப்பொறி,தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளும் இதில் உறுப்பினர் ஆகலாம்.
ஒருங்குகுறி கன்சார்டியத்தின் அஞ்சல் முகவரி
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
இதன் இணையப்பக்கம் : http://www.unicode.org/
மின்னஞ்சல் : unicode@unicode.org
உறுப்பினர் தொகை அறிய : http://www.unicode.org/consortium/levels.html
உலகமொழிகளுக்கு உரிய இடம் பற்றி அறிய: http://www.unicode.org/charts/
நன்றி: அம்ருதா மாத இதழ்(திசம்பர் 2010)
0 comments:
Post a Comment