தமிழர் மரபு எது? என்பது பற்றிய செய்திகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யப்படுகிறது. பின்னோக்கி செல்லச்செல்ல தமிழரின் வாழ்வு சிறப்பானதாகத் தெரிகிறது என்று சொல்லி கதைக்கின்ற ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் உலவி வருகின்றது. சங்க காலம் என்பது பொற்காலம். சாதி, சமயங்கள் அற்ற, தமிழர்கள் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டு அகம் மகிழ்ந்திருந்த காலம் என்றெல்லாம் சங்கப் புகழ் பாடி அதுவே சிறப்புடையது என்று கூறுகின்றவர்கள் உள்ளனர். சங்க காலத்திற்கு மீண்டும் திரும்புவோம் அல்லது சங்க காலம் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே தம்முடைய குறிக்கோளாக கொண்டு இயங்குகின்ற பல தமிழ் இயக்கங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. வெளிப்படையாக இவ்வாறு சொல்லாவிட்டாலும், இதுவே இவர்களுடைய உள்ளக்கிடக்கை என்பது இவர்களுடைய பத்திரிக்கைகளில், மாத இதழ்களில், பேச்சுகளில் இருந்து நாம் அறியக்கூடிய செய்தியாகும்.
சங்க காலம் உண்மையில் அவ்வாறுதான் இருந்ததா என்பதைக் குறித்த ஆய்வுகளில் நாம் தற்சமயம் இறங்கப் போவதில்லை. ஏனெனில், சென்றது இனி மீளாது மூடர்காள் என்று பாரதியார் பாடியது இவர்களை குறித்துதான் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னோக்கி என்றால் எவ்வளவு பின்னோக்கி? ஏன் சங்க காலத்துடன் நிற்க வேண்டும்? பெருங்கற்காலம், புதிய கற்காலம், பழைய கற்காலம் என்று மேலும் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். எனவே பழமைவாதம் என்பது மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கான கண்டுபிடித்த கற்பனைவாதமாகும். பழம்பெருமை பேசி கூட்டத்தைக் கூட்டி புதிய சமுதாயத்தை அமைத்து விடுவேன் என்று கூறுவது கையாலகதவன், காலால் கற்கோட்டை கட்ட முயல்வதற்கு ஒப்பாகும்.
பெரியார் அவர்கள் கேட்டது போல் பழமை என்று கூறுவதில் என்ன பெருமை இருக்கிறது? எதிலுமே புதுமை என்பதுதானே சிறப்பு? புதிய கருவிகள் புதிய தொழில்நுட்பம், புதிய துணிகள், புதிய இலக்கியங்கள் என்று நவநவமாய் அணி சேர்ப்பதுதானே தமிழுக்குப் பெருமை. அதைவிடுத்து சங்க காலத்தில் தமிழன் அப்படி இருந்தான், இமயம் வரை சென்றான், ஈழம் வரை வெற்றி கொண்டான் என்றெல்லாம் பழங்கதை பேசுவதனால் பயன் என்ன விளையப்போகிறது? ஏற்கனவே தமிழன் சிந்தைக் குறைவாகவும், செயல்திறன் அதைவிடக் குறைவாகவும் ஆனால் உணர்ச்சிகள் மட்டும் மிக்க நிரம்ப பெற்றவனாகவும் காணப்படுகின்றான். எந்த ஒரு செய்தியையும், ஆராய்ந்து அறியாமல் சிந்தித்து முடிவு செய்யாமல், வெறும் உணர்ச்சிகளை கொண்டே திட்டங்களை வகுத்து செயல்படுத்தி, போரிட்டு வெற்றி பெறலாம் என்பது இயலாத காரியம் என்பதை அன்று முதல் இன்று வரை உள்ள நிகழ்வுகள் நிருபித்துக் கொண்டுதானே இருக்கிறது.
மேலும், தமிழர் மரபு எதன் வழிப்பட்டது? தமிழ்நாட்டின் நிலத்தையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியா? அல்லது "யாதும், ஊரே யாவரும் கேளிர்" என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியா? நிலத்தை பிளவுப்படுத்தியது அல்லாமல் ஒவ்வொன்றிற்கும் தனியாக முதற்பொருள், கருப்பொருள் என்று தனித்தனியாகப் பிரித்து அவை ஒன்றுடன் ஒன்று இணையக்கூடாது என்ற இலக்கண விதியையும் வகுத்த தொல்காப்பியன் வழிப்படி என்றால் தமிழருடைய மரபில் சிறப்பு என்ன இருக்கிறது? உலகின் எந்த நாட்டிலாவது நிலத்தை இவ்வாறு பிரித்து வைத்திருக்கிறார்களா? இவ்வாறு பிரித்து வைத்ததையே தொல்காப்பியத்தின் சிறப்பு, தமிழரின் சிறப்பு என்று தமிழறிஞர்களும், சான்றோர்களும் பெருமை கொள்வதை நினைத்தால் அழுவதா? சிரிப்பதா?. நிலத்தைப் பிரித்ததுடன் இல்லாமல், மக்களையும் நால்வகையாகப் பிரித்து "ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேன," வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி, வைசியன் பெறுமே வணிக வாழ்க்கை, நூலே கரகம் முக்கோல் மனையே ஆயும்காலை அந்தணர்க்குரிய என்றெல்லாம் மக்களின் வாழ்க்கையையே நான்காகக் கூறுபோட்டு அந்தணர்க்கும் அரசர்க்கும் கல்வியையும், வணிகர்களுக்கு வியாபாரத்தையும் வேளாண் மக்களுக்கு உழுவதைத் தவிர வேறு தொழில் இல்லை என்றும் வாழ்விற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் வழியே தமிழர் மரபு என்றால் அந்த மரபின் விளைவுதானே இன்றைய சாதிகளும், பிளவுகளும். அவ்வறாயின் அந்த மரபை பேசுவதிலும், பாராட்டுவதிலும் என்ன பெருமை இருக்கிறது?
பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் சீர்த்த இடத்து என்று வாழ்க்கைக்கு வழி சொன்ன வள்ளுவர் நெறியாவது ஒப்புக் கொள்ளக் கூடியதாகும். இனி, வள்ளுவரும், தொல்காப்பியரும் தமிழரின் இரு கண்கள் போன்றவர்கள் என்று கூறுவது பொருந்தாக் கூற்றாகும். சாணியும், சவ்வாதும் ஒன்றாக முடியுமா? எனவே தமிழர் மரபு எது என்பதை முடிவு செய்து கொண்ட பின்னரே அந்த மரபினை கைக்கொள்வதா வேண்டாமா என்பதை சிந்தித்துப் பார்க்கவே இயலும். எவ்வாறாயினும், கடந்த காலத்தை நிகழ் காலமாக்க எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக்க எவராலும் முடியாது- அவ்வாறு செய்ய முயற்சிப்பதும் சரியன்று.
இதற்கு மாறாக, சிலர் தமிழ் தேசிய இயக்கங்கள் தமிழர் மரபை சிறப்புடைத்து அந்த மரபினை மேலைநாட்டு அறிவியல் செய்திகள் அழித்துவிட்டன. ஆங்கில மருத்துவம் அதைப்போன்றே தமிழர் மரபினை அழித்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் கதையாய், கற்பனையாய் நிழல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியர்கள் மிகவும் விதந்து பாராட்டுகின்ற குறுந்தொகை பாடல் ஒன்றை ஒரு எடுத்துக்காட்டுக்கு காண்போம்.
156. குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிறிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ! மயலோ இதுவே
குறுந்தொகைப் பாடல் 156ல் இந்தச் செய்தி காணப்படுகிறது. அகநானூற்றுத் தலைவன் தன்னுடைய காதலியைப் பிரிந்து மிக்க துயரில் இருக்கிறான். தலைவியைக் காண முடியவில்லையே, அவளோடு சேர முடியவில்லையே, அவளைப் புணரமுடியவில்லையே என்ற மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் இந்தத் தங்கத்தமிழ்த் தலைவனை அவனுடைய பார்ப்பன நண்பன் (பாங்கன்) தேற்றுகிறான். "தலைவனே நீ தலைவியை மறந்து விட்டு எங்களுடைய எழுதாத கற்பாகிய வேதத்தை சற்று படித்துப் பார். அதிலுள்ள உண்மைகளை விளங்கிக் கொள். உனக்கு சற்று மனஆறுதலாக இருக்கும்" என்று தேற்றுகிறான். அதற்கு தமிழ்த்தலைவன் அளிக்கின்ற பதிலாக, இந்தக் குறுந்தொகைப் பாடல் வருகிறது. அதன் பொருள் "பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் செய்த கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே எழுத்து வடிவம் இல்லாத வேதத்தில் உள்ள இனிய உரைகளில் பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா? அப்படியிருந்தால், அதைப்பற்றிப் பேசு இல்லாவிட்டால், நீ முயற்சி செய்வதில் பயனில்லை."
இந்தப் பதில் எப்படி இருக்கிறது? தமிழருடைய நண்பனாக நடிக்கின்ற பார்ப்பன மகன் அவனை துயரத்திலிருந்து மீட்பதற்காக சொல்கின்ற வார்த்தையைக்கூட காது கொடுத்துக் கேளாமல், தலைவியைப் புணர்வதிலேயே கண்ணும்கருத்துமாக இருக்கின்ற தமிழ்த்தலைவனின் செய்கை போற்றுதலுக்குரியதா? அதுதான் தமிழர் மரபா? இந்த வழியைத்தான் மரபெனப் போற்றி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பழக்கப்படுத்த தமிழ்த் தேசியர்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்களா? தமிழ்த் தலைமகன் நற்குணம் படைத்தவனாக இருந்திருந்தால் அவனுடைய பதில் எவ்வாறு இருந்திருத்தல் வேண்டும்? "பார்ப்பன மகனே, என்னுடைய மன ஆறுதலுக்காக உம்முடைய வேதத்தை படிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. எம்முடைய மொழியிலேயே உள்ள சிறந்த நூல்களைப் படித்து மனஆறுதலைப் பெறுவேன்" என்றவாறு பதில் உரைத்திலிருந்தால் அந்தத் தமிழ் மகனை சிறந்த தலைவன் என்று நாம் பாராட்டலாம். ஆனால் போதையில் மயங்கிய அந்தத் தலைவனோ, தலைவியைப் புணரச்செய்யும் மருந்தை கண்டுகொள்வதிலேயே குறியாய் இருக்கின்றான். கந்தனுக்கு புத்தி ............ என்ற ஒரு சொல் வழக்கு இந்தக் குறுந்தொகை பாட்டிலிருந்துதான் தோன்றியது போல.
இப்பாடலின் முடிவு என்னவாக இருந்திருக்கும்? தலைவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கும்போது பாங்கனுக்கு தோன்றும் வழி என்ன? தலைவனை பரத்தையுடன், வேறு விலைமகளிருடன் கூட்டுவித்தல்தான். அதுதான் சங்க காலம் முழுவதும் நடந்திருக்கிறது. தலைவனின் சுகத்திற்கென்றே ஒரு பெரும் மகளிர் கூட்டம் பரத்தையர் இற்பரத்தையர் காமக்கிழத்தியர், விலைமகளிர் என்ற பெயரில் தனியாக வைக்கப்பட்டு உடலை விற்பதே அவர்களுடைய முழு நேரத் தொழிலாக வைக்கப்பட்டது. இதை ஆதரித்து தொல்காப்பியரும், பரத்தை வாயில் பிரிவிற்கு நால்வகை பிரிவும் உரியதே என்று நூற்பா இயற்றிவிட்டு சென்று விட்டார். பரத்தமையை எதிர்த்து, கண்டித்து, மக்களுக்கு அறநெறியைக் காட்டிய புலவர் திருவள்ளுவரைத் தவிர, வேறு யாரையாவது ஒருவரை சுட்டிக் காட்ட இயலுமா?
இத்தகைய தமிழர் மரபு சீர்குலைந்து போய்விட்டதே, என்பது தான் பழமைவாதிகளின் கவலையாகும். டாஸ்மாக் போதையைப் போலவே தமிழ் போதையும், அறிவை மழுங்க அடிப்பது. தமிழ் என்னும் தேனை நாக்கில் தடவிவிட்டு தமிழனது தொண்டைக்குள் எதைத் திணித்தாலும், அவன் விழுங்கிக் கொள்வான், ஏற்றுக் கொள்வான், சிந்தித்து செயல்பட மாட்டான் என்ற உண்மையை அரசியல் அறிஞர்கள் அறிந்துதானே இருக்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டு காலமாக, அதை செயல்படுத்தி தமிழனை முக்கால் நிர்வாணமாக மாற்றிவிட்டனர். மீதியிருக்கிற இடுப்புத் துணியையும் பிடுங்கிக் கொள்வதற்காகவே மீண்டும் தமிழ் போதையை தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்றுவதற்கு இடையறாது முயற்சி செய்வதை மண்ணுக்கேற்ற மார்க்சியர்களும் தமிழ்த் தேசியர்களும் செய்யலாமா?
சித்த மருத்துவத்தில் சிறப்புடைய செய்திகள் இருக்கின்றன என்பது தமிழ் தேசியர்களின் வாதமாகும். இருக்கலாம். அதை அறிவியல் அடித்தளத்தில் நிறுத்தி உலக முழுமைக்கும் நிருபித்து உலக மக்கள் அனைவரும் பயன்படும்படி செய்ய முயல்வது அறிவார் செயலாகும். அதை விடுத்து நானோ தொழில்நுட்பம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் மருத்துவத்தில் காணப்படுகிறது என்று கதை அளப்பதும், இதை முதலில் போகர் அறிமுகம் செய்தார், மேலும், போகர் நீரிலும், வானிலும் செல்லும் விமான நுட்பமுறையை 4000 ஆண்டுகளுக்கு முன்பே, சீனர்களுக்கு செயல்படுத்திக் காட்டினார் என்று சான்றுகள் ஏதுவுமின்றி பேசுவதும், எழுதுவதும் சித்த மருத்துவத்தில் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் விதமாகவே அமைகின்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே போகர் என்ற சித்தர் நீரிலும், வானிலும் சென்ற விமானத்தை கண்டுபிடித்திருந்தால், அத்தொழில் நுட்பம் பின்னர் என்னவாயிற்று? அவ்வளவு சிறப்புடைய சித்த மருத்துவத்தால் இன்றைக்குள்ள நோய்கள் எதனையும் தீர்க்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விகளுக்கு விடையே கிடைப்பதில்லை. ரொம்பவும் அழுத்திக் கேட்டால், அந்த தொழில்நுட்பத்தையெல்லாம் ஆரியர்கள் திருடிக்கொண்டார்கள், அவற்றை மறை பொருளாக தங்களுடைய வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) எழுதி வைத்துக் கொண்டு தமிழ்ச்சுவடிகளை முற்றிலுமாக அழித்து விட்டார்கள் என்று பதில் வரும்.
மருத்துவத்திற்கு என்று இல்லை, பொறியியல், கட்டிடக்கலை, இசை, ஆகிய எதைப்பற்றியாவது பழந்தமிழ் நூல் ஏன் ஒன்றுமில்லை? என்று கேள்வி கேட்டால் , அதற்கு இதுவே பதிலாக சொல்லப்படும். இந்த பதிலைக் கேட்டுக்கேட்டு நமது காதுகள் மரத்துவிட்டன. மனம் சலித்துவிட்டது. இத்தகைய அறிவுத்திருட்டினை செய்வதற்கு ஒரு சில நூற்றாண்டுகளாவது ஆயிருக்கும். அதுவரை தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், அகநானூற்று, புறநானூற்று தமிழ்த்தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? தங்களுடைய நீண்ட குடுமிக்கு நறுநெய் தடவி முடிந்து, மீசையை முறுக்கிக் கொண்டு, தலைவியைப் புணர்வது எப்படி சிந்தித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய தமிழர்களை சிறந்த மரபு வழிகாட்டிகள் என்று எவ்வித நாணமுமின்றி தமிழ் தேசியர்களால் எழுதப்படுவதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?
இவ்வாறே, "தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் ஆங்கில மருத்துவப் பேராசிரியர் ........... (பெயர் சில காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டுள்ளது) அவர்கள் தலைமையில் எய்ட்ஸ் நோய்க்கு 1992/1995 ஆண்டுகளில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த ரசகந்து மெழுகு, நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சுரணம் ஆகிய மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உலகு தழுவிய மருத்துவ மாநாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஒரு தமிழ்த் தேசியர் சித்த மருத்துவத்தில் சிறப்பாக எழுதிக் காட்டுகிறார். சித்தமருத்துவத்தின் சிறப்பினை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒரு ஆங்கில மருத்துவரே தேவைப்பட்டிருக்கிறார். ஆனாலும், மேற்கொண்ட செய்தியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை நாம் உறுதியாகக் கூற இயலாது. 1992-95களில் எய்ட்ஸ் நோய் மருந்தாக கண்டுபிடிக்கப்பட்டவை ஏன் இன்றைக்கு பயன்பாட்டில் இல்லை. அவை எத்தனை பேருக்கு பயன்படுத்தப்பட்டன? எவ்வளவு பேரின் உடம்பிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கிருமிகள் மறைந்தன? என்பதைப் போன்ற சான்றுகள் ஏதுமில்லாமல் இந்த மருந்தும் வழக்கொழிந்து போய்விட்டது போலும். மிகவும் அழுத்திக் கேட்டால் ஆங்கில மருந்துக் கம்பெனிகள் அரசிற்கு லஞ்சம் கொடுத்து இந்த மருந்தினை மறைத்து விட்டார்கள் என்று பதில் வரும். இந்த பதில்களைக் கொண்டே எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டில்?
- இளமுருகன் துரை ( ilamurugand@gmail.com)
0 comments:
Post a Comment