முத்தமிழ் என்ற வழக்கு நம் தமிழ் மரபாகும். ‘தெரிமாண்டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பான்’ என்பது பரிபாடல். முத்தமிழ்க்கும் இலக்கணம் கூறும் மூவுறுப்பு அடங்கிய பிண்டமே அகத்தியம் எனப் பண்டைத் தமிழ் உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்குகிறது என அடியார்க்கு நல்லார் உரைவழியே அறிகின்றோம். திருக்கச்சூர்க் கல்வெட்டு ஒன்று (M.E.R. 377 of 1906) முத்தமிழாசிரியர் பெருநம்பி என்பவரைப் பற்றிப் பேசுகின்றது. இன்றும் நம் பள்ளிச் சிறுவர்கள் ஒளவையார் வாயால் “சங்கத்தமிழ் மூன்றும் தா” எனக்கடவுளை வேண்டி நிற்கின்றனர்.
முத்தமிழாவன இயல், இசை, கூத்து என யாவரும் அறிவர். கூத்து என்பது ‘நாடகக் காப்பியம்’ அன்று. பரதநாட்டியம் என்றும் ‘Dance’ என்றும் வழங்குவனவற்றோடு ஒத்ததொன்று; இவற்றை ஆங்கிலத்தில் ‘Fine arts’ என வழங்கும் இன்னியற் கல்வித்துறைகளோ என ஐயுறலாம். ஆனால் ஓவியம் முதலியன முத்தமிழில் பிரித்தெண்ணப்படவில்லை. வடமொழியாளர் 64 கலைகள் எனக் கல்வித்துறைகளை வகுத்த முறையும் இதற்குப் பொருந்துவதில்லை. ஆகவே இவ்வாறு மூன்று எனத் தமிழர் வகுத்ததன் உண்மை நோக்கம் யாது? என்ற கேள்வி பிறக்கிறது.
இயற்றமிழானது சொற்களாலாயது சொல்லோ ஒலிவடிவம்; இசையும் ஒலிவடிவே. இவ்விரண்டிற்கும் வேற்றுமை என்னை? சொல்லோ நம் எண்ணத்தைச் சுட்டும் அறிகுறி; அஃது ஒலியாகவும் எழலாம்; எழுதும் எழுத்தாகவம் அமையலாம்; ஒவியமாகவும் முடியலாம். ஆனால் இவற்றால் குறிக்கப்படுவது மனத்தெழும் கருத்துக்களேயாம். நம் எண்ணம் எல்லாம் சொல் வடிவே என்பர் சிவஞானபோதப் பேருரையாளர். பேசும் போது எழும் ஒலி வானிற் பிறக்கும் அசுத்தமாயாகாரியமாயினும், அது குறிப்பது எண்ணமே யாதலின் சொற்கள் அவ்வகையில் சுத்தமாயகாரியமே என்பர். பெனிடெட்டோ க்ரோசே (Benedetto Croce) என்ற இத்தாலியப் பேராசிரியரும் சொல்லில்லையேல் எண்ணமில்லை என்பர். ஆனால் இசையோ நம் உணர்ச்சிக்குப் போக்கு வீடாக எழும் இயற்கை ஒலியாகும். அஃது அறிகுறியல்ல; அஃதே பொருள், இன்ப ஒலியும் துன்ப ஒலியுமாக இசை வெளி வருகின்றது நோதிறம் எனத் தமிழர் ஓர் இசைக்குப் பெயரிட்டனர் அன்றோ? ஆகவே மனக்கருத்தின் அமைதியே இயற்றமிழ். இயற்கை வாய்ஒலியின் அமைதியே இசைத்தமிழ். மெய்யின் இயக்க விளக்கமே கூத்துத்தமிழ். இவ்வாறு உயிர் முத்திறத்தாலும் தன்னியல்பை வெளிப்படுத்து நிலையில் சிறப்பாக விளங்குவன முத்தமிழாம்.
மேல்நாட்டு உள்ளத்தியற்கை நூலாசிரியர்கள் மனமானது அறிவு நிலை, உணர்ச்சி நிலை, செயனிலை என முத்திறப்பட்டது எனக் கூறி வந்தனர்; இவை வெவ்வேறு நிலைகளாகாது. நெருப்பில் சூடும் ஒளியும் வடிவும் ஒன்றாய் விளங்குதல்போல் ஒற்றித்து நிற்பன என இதுபோது கூறுகின்றனர். நம்நாட்டு அறிஞர்களும் விருப்பாற்றல் ஒறிவாற்றல், செயலாற்றல் என்றும், இச்சாஞானக்கிரியா சத்திகள் என்றும் பேசி வந்தனர். இசை, இன்ப ஒலியும் துன்ப ஒலியுமாக எழக் காண்கின்றோமாதலின் உணர்ச்சி நிலை அல்லது விருப்பாற்றலின் இயக்கம் எனலாம். மனக்கருத்தை விளக்கும் இயற்றமிழ் அறிவு நிலை அல்லது அறிவாற்றலின் இயக்கம் எனலாம். செயல்நிலை அல்லது செயலாற்றலின் இயக்கமே கூத்துத் தமிழாம். எனவே மனதின் இயக்கமாக எழுகின்றவை அனைத்தும் இவற்றிலடங்கவே வேண்டும். இப்பாகுபாடு இவ்வகையில் இயற்கைக்கும் இலக்கணத்திற்கும் பொருத்தமாகும்.
வீட்டு நெறியெனும் மெய்யுணர்வே அறத்துப்பாலின் முடிபாதலின் அறம் அறிவு நிலையின் பயன் எனலாம். உலகில் மக்கள் அரசும் குடிகளுமாய் வாழும் வாழ்க்கையைக் கூறும் பொருட்பால் செயல்நிலையின் பயன் எனலாம். முடிந்த முடிபாம் இன்பத்துப்பால் உணர்ச்சி நிலையின் பயன் எனலாம். “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடுபுணர்ந்த ஐந்திணை” எனத் தொல்காப்பியனார் தமிழ் ஒழுக்கம் கூறினார். எனவே முப்பாலும் முத்தமிழாக முடிகின்றன. காதலை வீணைச்செல்வம் எனச் சிந்தாமணி கூறுவதினின்றும் இசையும் இன்பமும் ஒன்றாதல் விளங்கும்; எனவே இயற்றமிழ் அறமாம்; கூத்துத் தமிழ் பொருளாம்.
உலகப் பொருள்களின் இயல்பாகச் சத்துவ இராசததமோ கணங்களையும் காத்தல் படைத்தல் அழித்தல் என்ற செயல்களையும் கூறுவர் அன்றோ? இவை கீழ்நிலையிற்றோன்றும் அறிவுநிலை விளக்கமாகவும் செயல்நிலை விளக்கமாகவும் விருப்புநிலை விளக்கமாகவும் முறையே கொள்ளத்தக்கன என்பர். திரு. பகவான் தாசர் தாம் எழுதிய ‘அமைதி நூல்’ என்பதனுள், வீடு பெற்று நின்ற மேனிலையில் இறைவனியல்பாக விளங்கும் அறிவும் உண்மையும் இன்பமும் [சச்சிதானந்தம்] மேனிலையிற்றோன்றும் அறிவு நிலையும் செயல்நிலையும் விரும்பு நிலையுமாக முறையே அமைகின்றன என்றும், இயங்காதிருக்கும்போது ஒரு பொருளுண்மையினை உற்று நோக்கியறியாத நாம் அஃது இயங்கும்போது எளிதின் அறிதலின் உண்மைத்தன்மையைச் செயனிலை விளக்கமாகக் கொள்வது பொருத்தமே என்றும், அறிவு அறிவுநிலையின் விளக்கமாதலிலும் இன்பம் விருப்புநிலை விளக்கமாதலிலும் ஐயம் ஒன்றும் எழுதற்கிடமில்லை என்றும் கூறுகின்றார். அறியும் ஆன்ம அறிவு குறை நீங்கி நிறைவாம் வீட்டு நிலையில் மெய்யறிவு நிலையாக விளங்க எங்கும் நிறை்நத இறைவன் அடிப்படையான உண்மை நிலையாக விளங்க மயக்கிநின்ற இருளுலகம் முற்றும் மாறி இன்ப நிலையாக விளங்க இவ்வாறு இவை மூன்றும் ஒற்றித்து முதிர்ந்து பழுத்து முற்றி நிற்கும் முத்தி நிலையும் முத்தமிழ் நிலைதானே.
“முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள்
சுத்தஅநு போகத்தைத் துய்த்தலணூமெத்தவே
இன்பங் கொடுத்தலிறை இத்தைவிளை வித்தல்மலம்
அன்புடனே கண்டுகொளப்பா”
என்பது காண்க.
இவ்வாறு உயரப்பறப்பதைவிட்டு மண்ணிற்றவழ்ந்து வரும் போதும் முத்தமிழ்க் கொள்கையின் பெரும் விளங்குகிறது. இக்காலத்துக்கல்வி அறிவுநிலை ஒன்றையே வளர்க்கின்றது. இதன் பயனாகத் தலை கொழுத்து உள்ளம் வற்றி உடல் வாடி நிற்கின்ற மக்களையே காண்கின்றோம். போரும் மூண்டெரின்றது. முத்தமிழ் நெறியே கல்வி கற்றிருந்தால் முழு மனமலர்ச்சி பெற்ற சான்றோர்களாய் தமக்கெனவாழாப் பிறர்க்குரியாளராய் விளங்கி யிருப்பர் அன்றோ? “சங்கத்தமிழ் மூன்றுந்தா” என எல்லோரும் வேண்டுதல் இன்றியமையாததன்றோ?
மற்றுமொரு வகையால் முத்தமிழ்க் கொள்கையை ஆராயலாம். நமக்கு அமைந்தன மூன்று கருவிகள்; மனம் மொழி மெய் என்பன. இவை பண்பட்ட நிலையைத் திரிகரண சுத்தி, என்பர் வடமொழியாளர். தமிழர் இதனைத் தம்மொழியில் மிக அழகாக விளக்கி வைத்துள்ளனர். உள்ளத்தின் இயற்கை நிலையே அதன் தூய நிலையாகும். ஓர்த்து உள்ளது உணர்வதே அந்நிலையாம். அதனை உண்மை என்றனர். (மை என்பது மெய் என்பதன் திரிபாக விளங்குவதை மொழி நூலாராய்ச்சியாளர் எடுத்துரைபர். ஆகவே உண்மை என்பது உள்ளத்தின் இயல்பு அல்லது வடிவம் எனப் பொருள் படும்; மெய்ம்மை என்பது அங்ஙனமே உடலின் இயற்கை என்றும் வாய்மை என்பது வாயின் இயற்கை என்றும் பொருள் படுமாறு காண்க.) வாயின் இயல்பு தீதின்றி நன்று பயக்கும் வாய்மையேயாம். மெய்யின் இயல்பு பொய்படாதொழுகும் ஒழுக்கமாம் மெய்ம்மையே யாம். உண்மை. வாய்மை, மெய்ம்மை என்ற தனித் தமிழ்ச் சிறப்புச் சொற்கள் முத்தமிழின் இயல்பை விளக்க எழுந்தன போன்றமைந்துள்ளன. இன்பமாய்ப் பொங்கி அறிவாய் விளங்கும் உள்பொருளை உள்ளத்தாலும்வாயாலும் மெய்யாலும் வழிபட்டு அதுவாய் நிற்கும் முறை இதுவேயாகும். தூய மனத்தில் பொங்கி எழுந்ததுஇயற்றமிழ். தூய வாயின் முழக்கமே இசைத்தமிழ். தூய மெய்யின் இயக்கமே கூத்துத் தமிழ். இவை மூன்றும் உண்மைக்கு மாறாக இருத்தலாகாது என்பது தமிழர் கண்டபடிபு. இவற்றின் ஒற்றித்தவடிவமே முருகு எனும் அழகாம். உணர்ச்சி நிலையின் அழகை யாரும் அறிவர். ‘கல்வியழகேயழகு’ என அறிவு நிலையையும் அழகாகக் கண்டனர் நாலடி பாடிய தமிழர். ‘ஒழுக்கத்தழகு் எனச் செயல்நிலை அழகினையும் அழகாக்ககண்டார் தமிழ் வில்லியர். கிரேக்கர்கள் உண்மை, அழகு, நன்மை என்பவற்றைப் பொன்னாலான முக்கோணமாகப் பாராட்டி வந்தனர். உண்மைஎன்பது அறிவையும், அழகு உணர்ச்சியையும், நன்மை ஒழுக்கத்தையும் குறிப்பன வாகலின் அவையும் முத்தமிழ்க கொள்கையை விளக்குதல் காண்க. ஆனால் கிரேக்கர்க்கு அவை குறிக்கோளாக விளங்கத் தமிழர்க்கு இவை கல்வி முறையாகி அன்றாட வாழ்க்கையாய் விளங்கின. முத்தமிழ் எனக் கொண்டதால் எல்லாவற்றையும் அழகு என முடிப்பது எளிதாயிற்று. பரத நாட்டியத்திலும் பாவம் எனும் மனக்குறிப்பும் ராகம் எனும் இசையும் தாளம் என்பதும் ஒத்தியைதல் வேண்டும் என்றனர் வடமொழியாளர். முத்தமிழை வெவ்வேறாகப் பிரித்துப் பேசினாலும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாய் மனக்கருத்தாய் அரும்பி, இசையாய்ப் பூத்துக், கூத்தாய்ப் பழுத்து முற்றிய போதுதான் உயரிய வாழ்க்கையாய் இனிக்கக் காண்கிறோம். கண்ணன் மறைமுடிபோதிப் புல்லாங்குழலூதிக் குடக் கூத்தாடுகின்றான். சிவபெருமான் ஆலின் கீழ் அறமுரைத்துச் சாமகீதனாய் மிக நல்ல வீணை தடவி இன்பக் கூத்தாடிக் கூத்தா செனச் சிறப்படைகின்றான். பேரறிவு நிலைபெற்ற பெரியோர்களும் ‘அயரா அன்பின் அரன் கழல் செலுமே’ என்றபடி உண்மை நிலை மறவாத அறிவாற்றலும், அன்பாய் விளங்கும் விருப்பாற்றலும், அரன் கழல் செலும் செயலாற்றும் பெற்று விளங்குகின்றனர். அவர்கள் இயலும் இசையும் மூத்தும் இருந்தபடி அது ‘ஆடுகின்றறிலை கூத்துடையான் கழற்கன்பிலை என் புருகிப் பாடுகின்றிலை’ என்பது திருவாசம். கடவுளையடையும் வழிகள் அன்பு நெறி, செயல் நெறி, செறிவு நெறி என்றெல்லாம் பெயர்பெற்றுள்ளமை அறிவோம். முத்தமிழ் வழியே கடவுளையடைதலும் கூடும் எனக் கண்ட நற்றமிழ் ஞானசம்பந்தர் ‘ஆடல் நெறி,’ ‘பாடல் நெறி’ எனப் புதிதாகக் கூறியுள்ளார். பாடல் நெறி இயல் இசை என்ற இரண்டையும் குறிப்பதால் முத்தமிழும் இங்கே குறிக்கப் பட்டமை காண்க. திருமூலர் “தமிழ் மண்டலம் ஐந்தும் பரவிய ஞானம்” கூறுவது ஈதேயாம். இவற்றை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டன்றே.
“முத்தமிழே கற்று முழங்கு மெய்ஞ்ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி”
எனக் குதம்பைச் சித்தர் பாடுகின்றார்.
(இது சென்னை, சிந்தாதிரிப்பேட்டை வித்தாவன் T.P. மீனாட்சி சுந்தரம் பிள்ளை M.A., B.L., M.O.L., அவர்களின் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை)
0 comments:
Post a Comment